முதல்-அமைச்சர் ஜெயலலிதா கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கே:- தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி விட்டதாக புகார் கூறப்படுகிறதே?
ப:- அரசு இதில் தானாக தலையிட முடியாது. புகார் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
கே:- தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை உயர்த்தி விட்டதாக சிலர் போராட்டம் நடத்தி வருகிறார்களே?
ப:- போராட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லை. பெற்றோர் ஆதாரத்துடன் புகார் செய்தாலோ, பள்ளி நிர்வாகம் முறையிட்டாலோ அரசு நிர்வாகம் தலையிட்டு பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்கும்.
கே:- இலவச அரிசி வழங்கும் திட்ட தொடக்க விழா இன்று எளிமையாக நடந்தது. மற்ற அரசு விழாக்களும் இதுபோல் நடக்குமா?
ப:- அனைத்து அரசு விழாக்களும் இதுபோல எளிமையாகத்தான் நடக்கும். வீண்-ஆடம்பரமாக செலவு செய்து அரசு விழாக்களை நடத்தக்கூடாது என்பது இந்த அரசின் கொள்கை. அடுத்து தொடரும் திட்டங்களுக்கான விழாவும் இதுபோல் எளிமையாக நடைபெறும்.
கே:- புதுச்சேரியில் உள்ள ரேசன் கடைகளில் 11-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை எந்த ரேசன் பொருட்களையும் வாங்கலாம் என்ற நிலை உள்ளது. தமிழ்நாட்டிலும் அந்த நிலை வருமா?
ப:- தமிழ்நாட்டிலும் இனி எல்லா பொருட்களையும், ரேசன் கடைகளில் எப்போதும் வாங்கலாம். பொருட்களை பதுக்கி வைக்கும் நிலை இனி இருக்காது.
கே:- டி.ஜி.பி. நடராஜிக்கு பதவி வழங்கவேண்டும் என்று மத்திய நிர்வாக தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளதே?
ப:- நேற்றுதான் தீர்ப்பு வந்துள்ளது. அதுபற்றி அரசு பரிசீலித்து வருகிறது. ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
கே:- முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி தனது செம்மொழி கவிதை பாடத்தில் இடம் பெற்றதால் சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தியதாக கூறி இருக்கிறாரே?
ப:- அவரது கருத்து குழந்தை தனமானது. சமச்சீர் கல்வியை தரமானதாக உயர்த்தவேண்டும் என்பதற்காக அமைச்சரவை கூட்டத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கே:- மின் வாரியத்துக்கு கடன் சுமை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே மின்சார கட்டணம் உயருமா?
ப:- அப்படி எந்த எண்ணமும் இல்லை. தமிழக மக்களுக்கு சுமையை அதிகரிக்கும் எந்த நடவடிக்கையும் அரசு எடுக்காது. 2001-ல் அ.தி.மு.க. ஆட்சி நடந்தபோது மின் தடை இல்லை. எல்லா நேரமும் மின்சாரம் இருந்தது. அப்போது 10,111 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. பின்னர் வந்த தி.மு.க. அரசின் தவறான நிர்வாகத்தாலும், மின் உற்பத்தி மையங்களை சரியாக பராமரிக்காததாலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
தரமற்ற நிலக்கரிகளை அனல்மின் நிலையங்களுக்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ததும் மின் உற்பத்தி பாதிப்புக்கு காரணம். இந்த நிலைமையை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம். விரைவான நடவடிக்கையால் மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டப்படி கூடுதலாக 5000 மெகாவாட் மின்சாரத்தை அதிகமாக உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
கே:- கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இலவச டி.வி., இலவச வீடு திட்டம் தொடருமா?
ப:- கவர்னர் உரையில் தெரிந்து கொள்ளலாம்.
கே:- அரசு கஜானா திருப்தியாக இருக்கிறதா?
ப:- அதை இப்போது சொல்ல இயலாது. அது பற்றிய விவரத்தை கவர்னர் உரையிலும், மீதியை பட்ஜெட்டிலும் சொல்லுவோம்.
கே:- அண்ணா பல்கலைக் கழகங்கள் ஒன்றாக இணைக்கப்படுமா?
ப:- கவர்னர் உரையில் அதற்கான பதில் தெரியும்.
கேள்வி:- மத்திய மந்திரி தயாநிதி மாறன் மீது புகார் எழுந்துள்ளதே?
பதில்:- பிரதமர் இதில் தேவையான நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். மந்திரி பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும். தயாநிதி மாறனும் பதவி விலகி சட்டத்தை எதிர் கொள்ள வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.
No comments:
Post a Comment