ரஜினிகாந்த் இன்னும் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார் என்று சிங்கப்பூர் டாக்டர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி நடந்த `ரானா' படப்பிடிப்பின்போது, ரஜினிகாந்த் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சென்னை இசபெல்லா ஆஸ்பத்திரியில் 2 முறை சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கடந்த மாதம் 13-ந் தேதி அவர் திடீரென்று போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் உடல்நிலையை டாக்டர்கள் முழுமையாக பரிசோதித்ததில், அவருக்கு மூச்சுக்குழாய் தொற்று, நுரையீரலில் நீர்க்கோர்ப்பு, சிறுநீரக பாதிப்பு ஆகிய இருந்ததை கண்டுபிடித்தார்கள். அவருடைய சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததால், `டயாலிசிஸ்' செய்யப்பட்டது.
மேலும் அவருக்கு நவீன சிகிச்சை தேவைப்பட்டதால், அவரை போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். போரூர் ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளித்த சிறுநீரக பிரிவு நிபுணர் டாக்டர் பி.சவுந்தரராஜன், இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் டி.ஆர்.முரளிதரன் ஆகியோரும் ரஜினியுடன் சிங்கப்பூர் சென்றார்கள்.
ரஜினிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை அவர்கள் சிங்கப்பூர் டாக்டர்களிடம் விளக்கினார்கள். அதில் திருப்தி அடைந்த சிங்கப்பூர் டாக்டர்கள், ரஜினிகாந்துக்கு மேலும் சில பரிசோதனைகளை நடத்தினார்கள். அந்த பரிசோதனையில், அவருடைய சிறுநீரக நோய்க்கான மூல காரணத்தை கண்டுபிடித்து தீவிர சிகிச்சை அளித்தார்கள். அதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
அவர் சாதாரண உணவு சாப்பிடுவதாகவும், ஆஸ்பத்திரிக்குள்ளேயே `வாக்கிங்' செல்வதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி சிங்கப்பூர் டாக்டர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார் என்றும், பலவீனமாக இருப்பதால் அவருக்கு இனி ஊட்டச்சத்துக்கள் கொடுக்கப்படும் என்றும் சிங்கப்பூர் டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்ற இரண்டு டாக்டர்களும் நேற்று சென்னை திரும்பினார்கள்.
No comments:
Post a Comment