கருணாநிதியின் 88-வது பிறந்தநாள் விழா தி.மு.க. இளைஞர் அணி சார்பில் சென்னை காமராஜ் அரங்கில் கொண்டாடப்பட்டது. மேயர் மா.சுப்பிரமணியன் வரவேற்றார். முன்னாள் துணை வேந்தர் அறவாணன் தலைமையில் நடந்த வாழ்த்தரங்கில் கவிஞர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள் பாராட்டி பேசினார்கள்.
நிகழ்ச்சியில் தேசிய கவிப்பேரரசு வைரமுத்து தோல்வி அடைந்த நேரத்திலும் நகைச்சுவை ததும்ப பேசியவர் கருணாநிதி என்று தனது அனுபவத்தை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
கலைஞர் கண்ணாடியை தூக்கி பார்த்து விட்டு பேசினால் கொஞ்சம் கவனமாக பேசவேண்டும். காபி அல்ல டீ சாப்பிடுகிறாயா? என்று அவர் கேட்டால் கொஞ்ச நேரம் பேச விரும்புகிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
கலைஞர் தேர்தலில் தோல்வி அடைந்து இருந்த நேரத்தில் நான் 6-வது முறை தேசிய விருது பெற்று விட்டு வாழ்த்து பெற சென்றேன்.அப்போது அவர் என்னிடம் இது எத்தனையாவது விருது என்று கேட்டார். நான் 6-வது விருது என்றேன். உடனே சட்டென்று “எனக்குதான் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. உங்களுக்காவது 6-வது முறையாக கிடைத்து இருக்கிறதே” என்று சொல்லி சிரித்தார்.
அந்த நேரத்தில் அந்த நகைச்சுவை யாருக்கு வரும்? அவரது 70 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய போராளியாக இருந்து வருகிறார். இழிவு, அவமானம், துயரம் எல்லாவற்றையும் சந்தித்து விட்டார். அதிகமான அவமானங்களை சந்தித்தவர் அவர் மட்டும்தான். எந்த நிலையிலும் தான் தானாகவே இருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் திண்டுக்கல் லியோனி, சுப.வீரபாண்டியன், நடிகை குஷ்பு, கவிஞர் அப்துல்காதர் ஆகியோர் பேசினார்கள். முன்னதாக எல்.ஆர்.ஈஸ்வரி கலைஞர் வாழ்த்து பாடினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், சுரேஷ்ராஜன், பொங்கலூர் பழனிசாமி, பரிதிஇளம் வழுதி, சுப.தங்கவேலன், மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபு, கவிஞர் காசிமுத்து மாணிக்கம், குமரி அனந்தன், மண்டல தலைவர் அன்புதுரை, சைதை மா.அன்பரசன், நேருநகர் பாட்சா, கிருஷ்ணமூர்த்தி, தாயகம்கவி, சிவமணி உள் பட பலர் கலந்து கொண்டனர்.

INNUM IVAGGA THIRUNTHALA POLA..
ReplyDelete