கடந்த திமுக ஆட்சிக்காலத்தின்போது சென்னை அண்ணா, நெல்லை அண்ணா, கோவை அண்ணா, மதுரை அண்ணா, திருச்சி அண்ணா என பிரிக்கப்பட்ட அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஒன்றிணைக்கப்பட்டு சென்னையில் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆளுநர் பர்னாலா தனது அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அதிக எண்ணிக்கையில் உயர் கல்விக்கானப் பல்கலைக் கழகங்களைத் தொடங்கி விட்டால் மட்டும் கல்வியின் தரம் உயர்ந்து விடாது என இந்த அரசு கருதுகிறது.
அண்ணா பல்லைக்கழகங்களை மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தொடங்கியதால் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வலுவிழந்து விட்டது. இதனால் கல்விச் சேவையின் தரம் உயராமல் சுயமாக செயல்பட இயலாத பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
எனவே சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வர இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இந்த அரசு பல்கலைக்கழகங்களைச் சீரமைத்து உலகத் தரம் மிக்க நிறுவனங்களாக மாற்றியமைக்க சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் முதலில் கோவை, திருச்சி, நெல்லை ஆகிய நகரங்களில் அண்ணா பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. பின்னர் மு.க.அழகிரி கேட்டார் என்பதற்காக மதுரையிலும் ஒரு அண்ணா பல்கலைக்கழகத்தை தொடங்கியது திமுக அரசு என்பது நினைவிருக்கலாம்.
சூரிய சக்தியுடன் பசுமை வீடு திட்டம்:
இதேபோல சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தையும் ஆளுநர் உரை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த ஊரக வீட்டு வசதித்திட்டம் பல குறைபாடுகளுடன் உள்ளது. கட்டுமானச் செலவு இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகரித்து விட்ட நிலையில் அத்திட்டத்தில் ஒரு அலகிற்கு வழங்கப்படும் நிதியான ரூபாய் 75 ஆயிரம் மிகக் குறைந்த அளவாக உள்ளது.
இதனால் ஏழை எளிய குடும்பங்கள் கடன் சுமையில் சிக்கி உள்ளனர். இதன் காரணமாக மிக அதிக எண்ணிக்கையில் வீடுகளுக்கான கட்டுமானப்பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே, இத்திட்டத்தினை கைவிடுவதென இந்த அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு மாற்றாக, கிராமப்புற ஏழைகள் பயன்பெறும் வகையில் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் தொடங்கப்படும். இத்திட்டத்தில் சுமார் 300 சதுரஅடி அளவில் ரூபாய் 1.80 லட்சம் செலவில் அரசே வீடு கட்டிக்கொடுக்கும். அதேபோல், நகர்ப்புற ஏழைகளின் வீட்டுவசதிக்காக மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களின் நிதியை ஒருங்கிணைத்து ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
சென்னை நகரில் ஆற்றோரங்களில் வாழும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான நவீன வீடுகள் வழங்கப்படும். கடலோரப் பகுதிகளில் வணிக வாய்ப்புகளைப் பெருக்கத்தக்க வகையில் தமிழ்நாட்டில் நீண்ட கடற்கரை உள்ளது. இப்பகுதியில் உள்ள துறைமுகங்கள் மேம்பாடு அடைந்தால் அதனை ஒட்டி உள்ள நிலப்பகுதிகளில் வர்த்தகம் மேம்பாடு அடையும் என இந்த அரசு கருதுகிறது. எனவே, கிழக்குக் கடற்கரையை ஒட்டி உள்ள கடலூர், நாகப்பட்டினம் மற்றும் குளச்சல் உள்ளிட்ட சிறு துறைமுகங்கள் அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன் மேம்படுத்தப்படும். இதனால் மாநிலத்தின் சரக்கு கையாளும் திறன் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment