ஐயப்பா ஆர்ட்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் `கொண்டான் கொடுத்தான்'. குடும்பப்பட இயக்குனர் என பெயர் பெற்ற வீ. சேகரிடம் கேமிராமேனாக பணியாற்றிய ஜி. ராஜேந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக கதிரும், கதாநாயகியாக அத்வைதாவும் நடித்துள்ளனர்.
இவர்களுடன் இளவரசு, மீரா கிருஷ்ணன், சுலக்ஷனா, ராஜ்கபூர், மனோ பாலா, கஞ்சா கருப்பு, `மைனா' நாகு ஆகியோர் முக்கிய காதாபத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
விழாவில் இப்படத்தின் பாடல் சிடியை தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் வெளியிட, இப்படத்தின் இசையமைப்பாளர் தேவா பெற்றுக் கொண்டார்.
இசையமைப்பாளர் தேவா பேசியதாவது;
`கொண்டான் கொடுத்தான்' குடும்பப் பாங்கான திரைப்படம். உறவுகளை மையப்படுத்தி மண் வாசனையுடன் எடுக்கப்பட்ட படம். இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளன. இதிலே நா. முத்துக்குமார் எழுதிய `தஞ்சாவூரு கோபுரம் அழகு...' பாடல் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மிகவும் யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது. அதற்கு இணையாக கபிலனும் தன் பங்கிற்கு பாடலை எழுதி அசத்தியுள்ளார்.
ரீரிக்கார்டிங் செய்வதற்காக இப்படத்தை முழுவதும் பார்த்தேன். சத்தியமா சொல்றேன் கிளைமாக்ஸ் காட்சியை பார்க்கும் போது என்னையும் அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வந்தது. அந்த அளவிற்கு படம் என்னை பாதித்து இருந்தது. நான் சொன்னது உண்மையா இல்லையா என்பதை இப்படத்தை நீங்கள் திரையில் பார்க்கும் போது தெரிந்து கொள்வீர்கள்.
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பேசியதாவது:
என்னை திரைத் துறையில் அறிமுகம் செய்தவர் தேனிசை தென்றல் தேவா அவர்கள். அவர் படம் வெளிவருவதற்கு முன்பே 40 படங்களில் பாடல்கள் எழுதி விட்டேன். அதற்கு காரணம் தேவா சார்தான். அவரது இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக வந்துள்ளன. இப்படத்தின் பாடல்கள் மட்டுமல்ல படமும் வெற்றி பெறும்'' என்றார்.
25 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட படம் இது என்று இப்படத்தின் இயக்குனர் ராஜேந்திரன் கூறினார். இவ்விழாவில் இயக்குனர்கள் வீ. சேகர், நடிகர் மற்றும் இயக்குனர்களான தருண்கோபி, எல். ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment