ஜனவரி
3- சென்னையில் கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் அண்ணன் விக்கி குடித்து விட்டு, முதியவர் ஒருவரை இடித்துத் தள்ளி அடித்து உதைத்தார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
- அரசுப் பேருந்துகளில் டிரைவர்கள் செல்போன் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்தது.
6- சென்னை காமராஜர் சாலையில், சாலையைக் கடக்க முயன்ற கல்லூரி மாணவி மீது முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக எம்.பியுமான கனிமொழி வந்த கார் மோதியது. இதில் அந்த மாணவி லேசான காயமடைந்தார்.
7 - நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், ஆள் மாறாட்டத்தில், ஆம்பூர் அருகே சரமாரியாக வெட்டியும், வெடிகுண்டு வீசியும் படுகொலை செய்யப்பட்டார். உயிருக்குத் துடித்த அவரை மீட்காமல் அமைச்சர்கள் வேடிக்கை பார்த்ததாக பெரும் சர்ச்சை கிளம்பியது.
- நான் முன்பை விட பாதுகாப்பான இடத்தில் இருக்கிறேன் என்று தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவை குற்றம் சாட்டியும், முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டியும் பேசினார் எஸ்.வி.சேகர்.
8- பட்டப்பகலில் ஒரு சப் இன்ஸ்பெக்டரை கொலைக் கும்பல் வெடிகுண்டுகளை வீசியும், அரிவாள்களால் வெட்டியும் படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வெடிகுண்டுக் கலாச்சாரத்துக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்து ஒடுக்க வேண்டும் என்று சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரன் கூறினார்.
- தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் (டிஜிபி) கே.பி.ஜெயின் நீண்ட விடுமுறையில் சென்றார். இதையடுத்து புதிய டிஜிபியாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டார்.
9 - தமிழக பள்ளிகளில் சமச்சீர் கல்விமுறையைக் கொண்டு வருவது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
10 - மூட்டு வலி காரணமாக நடிகை மனோரமாவுக்கு இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது
11 - புனித ஜார்ஜ் கோட்டியில் தமிழக சட்டசபையின் கடைசிக் கூட்டம் நடந்தது.
19 - நடிகர்கள் வடிவேலு, சூர்யா உள்ளிட்ட திரையுலகினரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது.
பிப்ரவரி
2 - மலையாளம் மற்றும் தமிழில் பிரபலமான நடிகர் கொச்சின் ஹனீபா எனப்படும் வி.எம்.சி. ஹனீபா உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் மரணமடைந்தார்.
- தன்னுடன் நடித்த சில நடிகர்கள் தன்னிடம் ரூ. 7 கோடி வரை மோசடி செய்துவிட்டதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையரை நேரில் சந்தித்து நடிகர் வடிவேலு புகார் கொடுத்தார்.
5 -கோவில்பட்டி அதிமுக எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரும், தென் மண்டல திமுக அமைப்பாளருமான மு.க.அழகிரியை சந்தித்தார். இதையடுத்து அவரது கட்சிப் பதவியைப் பறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
- தமிழ்ப் பெண்கள் குறித்து மலையாள டிவியில் நடிகர் ஜெயராம் பேசியது பெரும் சர்ச்சையானது. அவரது வீட்டை சிலர் தாக்கி தீவைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நான் பேசியது ஏதோ ஒருவகையில் தமிழ் உள்ளங்களை, முக்கியமாக, தமிழ் தாய்மார்களை புண்படுத்தி இருந்தால் என் கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி மன்னிப்பு கூறுகிறேன் என்று கேட்டுக் கொண்டார் ஜெயராம்.
- காசோலை மோசடி வழக்கில் பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலத்துக்கு 'பிடிவாரன்ட்' பிறப்பித்தது கரூர் நீதிமன்றம்.
- தனது காதல் கணவரை ஆவி அமுதா கைப்பற்றி வைத்துக் கொண்டுள்ளதாக புகார் கூறினார் நடிகை கனகா.
6- சேலத்தை தலைமையிடமாகக் கொண்ட கேபிஎன் டிராவல்ஸ் அதிபர் நடராஜனின் வீடு, அலுவலகங்கள், பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்ட் நடத்தினர்.
- நிகழ்ச்சிகளுக்கு கட்டாயம் வரவேண்டும் என்று திரையுலக அமைப்பினர் நடிகர்களை மிரட்டுகிறார்கள். இது நியாயமா என்று முதல்வர் கருணாநிதிக்கு நடந்த திரையுலக பாராட்டு விழாவில் முதல்வர் முன்னிலையில் குமுறினார் நடிகர் அஜீத்குமார். அவரது பேச்சுக்கு நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினார்.
7 - சென்னை அருகே பனையூர் பகுதியில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் பிரபல ரவுடி திண்டுக்கல் பாண்டியன். இவருடன் இருந்த கூட்டாளி கூடுவாஞ்சேரி வேலுவும் போலீஸின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானான்.
8 - சென்னை கோட்டூர்புரத்தில் கட்டப்பட்டு வரும் அண்ணா நூலகத்திற்கு முதல்வர் கருணாநிதி தம்மிடம் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான அரிய நூல்களை அன்பளிப்பாக வழங்கினார்.
11 -: சங்கரராமன் கொலை வழக்கில் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது மேலும் 7 பேர் பிறழ் சாட்சியாக மாறினர்.
12 - நடிகர் வடிவேலு கொடுத்த புகாரின் பேரில் 2 வழக்குகளில் சிக்கியுள்ள நடிகர் சிங்கமுத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்தது.
13 - கரும்பு விவசாயிகள் சிந்தி வரும் ரத்தக் கண்ணீருக்கு கருணாநிதி பதில சொல்லியே ஆக வேண்டும் என்று விழுப்புரத்தில் நடந்த அதி்முக கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.
14- ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும், அஸ்வினுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
- கரும்பு விவசாயிகள் தொடர்பாக விழுப்புரத்தில் நடந்த போராட்டத்தின்போது பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டியிருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதற்காக அவருக்கு அகில உலகப் புளுகு ராணி என்ற பட்டமே கொடுக்கலாம் என்று கூறினார் முதல்வர் கருணாநிதி.
- வாக்குப் பதிவு எந்திரத்தி்ல் முறைகேடு செய்ய முடியாது என்பதை வெளிநாட்டு நிபுணர்கள் முன்பு தேர்தல் ஆணையம் நிரூபிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.
21 -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.ஆர். வரதராஜன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
மார்ச்
3 - கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தை முதல்வர் கருணாநிதி திருச்சியில் தொடங்கி வைத்தார்.
4 - நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்க கோலத்தில் சாமியார் நித்தியானந்தா குஜாலாக இருந்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
13 - தமிழகத்தின் புதிய சட்டசபைக் கட்டடத்தை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.
19 - தமிழக புதிய சட்டசபைக் கட்டடத்தில் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தார்.
21 - தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காலாவதி மருந்து வழக்கில் 7 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
26 - காஞ்சிபுரம் அருகே நடந்த என்கவுன்டரில் ரவுடி நடராஜன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
30 - பென்னாகரம் தொகுதியில் நடந்த சட்டசபை இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. பாமக இரண்டாவது இடத்தையும், அதிமுக 3வது இடத்தையும் பெற்றன.
ஏப்ரல்
6 - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
12 - தமிழகத்தில் மீண்டும் மேல்சபையைக் கொண்டு வருவது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
20 - வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினியின் அறையிலிருந்து செல்போன்கள் சிக்கியதாக சிறை அதிகாரிகள் அறிவித்தனர்.
28 - நடிகை குஷ்பு மீதான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். தற்போது பெரும் ஊழல் புகார்களில் சிக்கியுள்ள முன்னாள் தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச்தான் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
30 - ரவுடி சின்னாவும் அவரது வக்கீல் பகவத் சிங் என்பவரும் பூந்தமல்லி கோர்ட் வளாகத்தில் ரவுடிக் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
மே
1- பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த எஸ்.ஏ. ராஜாவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- சேலம் மாநகராட்சி மேயர் ரேகா பிரியதர்ஷினி சாலை விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
3 - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் பாதுகாப்பு கருதித்தான், அரசின் அரவணைப்பில் அந்த அம்மையார் நாங்கள் குறிப்பிடுகிற மருத்துவமனையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அரசு செலவில் அவர்கள் சிகிச்சை பெற வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
5 - தமிழக சட்ட மேலவைக்கான மசோதாவை சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார்.
- துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்- துர்கா தம்பதியினரின் மகள் செந்தாமரைக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது.
- திமுகவிலிருந்து பிரிந்து சென்ற அனைவரும் மீண்டும் கட்சிக்குத் திரும்ப வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.
6 - யூனிகோட் தமிழ் எழுத்துருவை பொதுவான எழுத்துருவாக அங்கீகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சட்டசபையில் அமைச்சர் பூங்கோதை தெரிவித்தார்.
- தமிழகத்தில் செயல்பட்டு வரும் ராகுல் காந்தி பேரவை, பிரியங்கா காந்தி பேரவைகள் கலைக்கப்படுவதாக தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கூறினார்.
- கஞ்சா வழக்கில் விடுதலையான தன்னிடம் கைப்பற்றிய பணத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் இதுவரை பணத்தை ஒப்படைக்கவில்லை என்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலம் பெண் செரீனா சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
7 - நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதாக அதன் தலைவர் சீமான் அறிவித்தார்.
- கேரள மாநிலம் கொல்லத்தில் 30 ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அனைவரும் ஆஸ்திரேலியா செல்லக் காத்திருந்தபோது பிடிபட்டனர்.
- தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்தது.
10 - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் நிபந்தனையுடன் தமிழகத்தில் சிகிச்சை பெறலாம் என மத்திய அரசு அறிவித்தது.
14 - தன் மீதான அனைத்து வழக்குகளும் தள்ளுபடியான சூட்டோடு நடிகை குஷ்பு திமுகவில் போய்ச் சேர்ந்து கொண்டார்.
16 - பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னையில் மரணமடைந்தார்.
19 - லைலா புயலால் தமிழகத்தில் பெரும் மழை பெய்து பெரும் சேதம் ஏற்பட்டது.
30 - மீண்டும் பாமகவை கூட்டணியில் சேர்க்கத் தயார் என்று திமுக உயர் நிலை செயல் திட்டக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதேசமயம், சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னரே பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தரப்படும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது. இதை பாமக இதுவரை ஏற்கவில்லை.
ஜூன்
2- தனது கோபாலபுரம் வீட்டை தனது மறைவுக்குப் பின்னர் இலவச மருத்துவமனையாக மாற்றுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதுதொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள அறக்கட்டளைக்கு வீட்டைத் தானமாகவும் அளித்தார்.
8- 8ம் வகுப்பு வரை யாரையும் பெயிலாக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
10- தமிழகத்தில் ராஜ்யசபாவுக்கு நடந்த தேர்தலில் 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
11 - தமிழகம் முழுவதும் நடந்த அதிரடி வேட்டையில் 170 போலி மருத்துவர்கள் சிக்கினர்.
21 - சென்னை உயர்நீதிமன்றம், மதுரை பெஞ்ச் ஆகியவற்றில் தமிழில் வாதாடத் தடையில்லை என்று தலைமை நீதிபதி இக்பால் அறிவித்தார்.
23 - உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் பிரமாண்ட பேரணியுடன் தொடங்கியது. குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தொடங்கி வைத்துப் பேரணியைப் பார்வையிட்டார்.
26 - பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏவும், சட்டசபை காங்கிரஸ் தலைவருமான சுதர்சனம் கோவையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
27 - கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோலாகலமாக முடிவடைந்தது.
தொடரும் ....
No comments:
Post a Comment