ஸ்ரீவில்லிபுத்தூரில், தாமரை ரத யாத்திரைக்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தமிழக அரசு, மக்களுக்கு இலவசமாக நிலம் , வீடுகட்டும் திட்டம் போன்றவற்றை கூறி ஏமாற்றி வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்த ராஜாவை, தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராக கருணாநிதி கூறுவது, தலித் மக்களை அவமானப்படுத்தும் செயல். இதற்காக கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும். ரேஷன் கடைகளில் வைத்துள்ளது போல டாஸ்மாக் கடைகளிலும் கருணாநிதி படத்தை வைக்க வேண்டும். தற்போதய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தலித் மக்களின் நிலத்தை அபகரித்து வருகின்றனர். இவ்வாறு ஆட்சியாளர்கள் நடந்தால் கருணாநிதி ஆட்சி அடுத்த முறை இருக்காது, என்றார். சிவகாசி: சிவகாசிக்கு வந்த பொன்ராதாகிருஷ்ணன் பேசியதாவது: ஏழைத்தொழிலாளிகள் பணம் ஆண்டுக்கு 1.5 லட்ச ரூபாய், டாஸ்மாக் கடைக்கு கொடுக்கிறீர்கள். இதனால் உங்கள் வீட்டில் நடக்கும் நல்ல காரியம் தடைபடுகிறது. நீங்கள் ஓட்டு போட்டு அனுப்பிய அமைச்சர் 1 லட்சத்து 76 ஆயிரத்து 465 கோடி மோசடி செய்துள்ளார். இந்த நாட்டின் அமைச்சர்களை, பிரதமர் முடிவு செய்யவில்லை. கென்யா புரோக்கர் பெண் முடிவு செய்கிறார். இப்போது உள்ள மந்திரிகள் கடைவீதி பக்கம் சென்று நல்ல கடைகளை பார்த்தால், "நான் நடத்துகிறேன்' என மிரட்டி கடையை எடுத்து கொள்வதாக கோவையில் இருந்து புகார் வருகிறது. நாங்கள் நாட்டையும், வீட்டையும் பற்றி கவலைப்படுபவர்கள், என்றார்.
No comments:
Post a Comment