Saturday, December 25, 2010
'ஸ்பெக்ட்ரம்' ராசாவிடம் 9 மணி நேரம் விசாரணை... இன்றும் தொடர்கிறது!
2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசாவிடம் சிபிஐ 9 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது. விசாரணை இன்றும் தொடர்கிறது.
ஆ.ராசா மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, 2008-ல் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததால் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை தகவல் வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசா கடந்த மாதம் 14-ந் தேதி விலகினார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விசாரிக்க வேண்டியதிருப்பதால் நேரில் ஆஜராகுமாறு ஆ.ராசாவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அதை ஏற்று ஆ.ராசா நேற்று டெல்லி லோதி சாலையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.
ஆ.ராசாவிடம் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளை சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டனர் சிபிஐ அதிகாரிகள். அதற்கு ராசா அளித்த பதில்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. ஆ.ராசாவின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டுப் பெற்றுள்ளது.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு
எட்டு மணி நேர விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராசா, சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகத் தெரிவித்தார்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இப்போதைக்கு என்னால் வேறு எதுவும்கூற முடியாது என்று கூறிவிட்டு நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் சென்று விட்டார்.
டேப், டைரி ரகசியங்கள்:
குறிப்பிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சலுகை காட்டும்படி ராசாவிடம், நீரா ராடியா பேரம் நடத்திய தொலைபேசி உரையாடல் அடங்கிய டேப்புகள் சிபிஐ வசம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இரு வாரங்களுக்கு முன்பு ராசாவின் வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது 3 டைரிகள் சிக்கின. அதில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தமிழிலும், ஆங்கிலத்திலும் பல்வேறு ரகசிய தகவல்கள் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
டேப், டைரி தகவல்களின் அடிப்படையில் ராசாவிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
அப்ரூவராக மாறும் அதிகாரிகள்?
இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அதிகாரிகள் ஆர்.கே. சண்டோலியா, ஏ.கே. ஸ்ரீவத்ஸவா ஆகியோர் அப்ரூவர்களாக மாறக்கூடும் என்று சிபிஐ வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலர் டி.எஸ்.மாத்தூர் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்றும் தொடர்கிறது...
இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) இரண்டாவது நாளாக ஆ.ராசாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதற்காக காலை 9 மணிக்கு சி.பி.ஐ. அலுவலகத்துக்கு ஆ.ராசா வந்தார்.
உடனடியாக அவர் சி.பி.ஐ. தலைமை அலுவலக 2-வது மாடிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு உடனடியாக விசாரணை தொடங்கியது. நேற்று கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் இன்று ஆ.ராசாவிடம் விசாரணை நடந்ததாக தெரிகிறது.
Labels:
செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment