கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் மும்பையில் 4 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மும்பை போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை முழுவதும் கடும் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மும்பைக்கு வரும் அனைவரும் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு 10 லஷ்கர் - இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்166 பேர் கொல்லப்பட்டனர். மீண்டும் அதே போன்று தாக்குதலை மும்பையில் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக பல தடவை முயன்றனர். ஆனால் உளவுத்துறை சரியான நேரத்தில் தகவல்கள் கொடுத்து எச்சரித்ததால் தீவிரவாதிகள் திட்டம் நிறைவேறவில்லை.
இந்த நிலையில் மும்பையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர் குலைக்கும் திட்டத்துடன் 4 லஷ்கர் - இ- தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை உறுதி செய்த உளவுத்துறையினர் மத்திய உள்துறை மூலம் மும்பை போலீசாரை எச்சரித்தனர். இதையடுத்து 4 பாகிஸ்தான் தீவிரவாதிகள் பற்றிய தகவல்களை மும்பை போலீசார் வெளியிட்டனர்.
அந்த 4 தீவிரவாதிகளின் பெயர் அப்துல் கரீம் மூசா, நூர் அப்துல் கிலாகி, வாலித் ஜின்னா, மபூஸ் ஆலம். இவர்களுக்கு 20 முதல் 30 வயது வரை இருக்கும். இவர்கள் பாகிஸ்தான் நாட்டுக்காரர்களா அல்லது வேறு நாட்டைச் சேர்ந்தவர்களா என்பது தெரியவில்லை.
தீவிரவாதி ஜின்னா...
4 தீவிரவாதிகளும் மும்பையில் பதுங்கி உள்ளதால் அவர்கள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம். எனவே பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். அதோடு 4 தீவிரவாதிகளில் ஜின்னா என்பவன் படத்தையும் போலீசார் வெளியிட்டனர்.
ஜின்னா உள்ளிட்ட தீவிரவாதிகள் பற்றி ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் 22633333 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கும்மாறு மும்பை போலீசார் கூறி இருந்தனர். அதற்கு உடனடியாக பலன் கிடைத்தது. பொது மக்கள் தரப்பில் இருந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு 15 தகவல்கள் வந்தன. சிலர் எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தீவிரவாதிகள் பற்றிய தகவல்களை அளித்தனர்.
மும்பையை சேர்ந்த டாக்சி டிரைவர் ஒருவர் போலீசிடம் பயனுள்ள ஒரு தகவலை வெளியிட்டார். போலீசார் வெளியிட்ட புகைப்படத்தில் இருந்த ஜின்னா என்ற தீவிரவாதியை தனது டாக்சியில் மும்பையில் இருந்து புனே நகருக்கு அழைத்து சென்றதாக கூறினார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பேரழிவு ஏற்படுத்தத் திட்டம்
இதற்கிடையே மும்பையில் ஊடுருவி உள்ள 4 தீவிரவாதிகளும் படு பயங்கரமானவர்கள் என்றும், அவர்கள் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை மீண்டும் எச்சரித்துள்ளது. இதனால் மும்பையில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக ஆங்காங்கே அதிரடி படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மும்பையில் மொத்தம் 12 இடங்களுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் குறி வைத்துள்ளனர். இதில் 5 பெரிய ஓட்டல்களாகும். இந்த ஓட்டல்களில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடக்கும் என்பதால், அவற்றை தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மும்பை பங்கு சந்தை, ராணுவ முகாம், போலீஸ் தலைமையகமும் தீவிரவாதி களின் தாக்குதல் திட்டத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த இடங்களில் எல்லாம் ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கிறிஸ்தவ ஆலயங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வங்கதேசம் வழியாக 4 தீவிரவாதிகளும் மும்பைக்குள் ஊடுருவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4 பேரையும் பிடிக்க மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
மும்பை முழுக்க வாகன சோதனை நடக்கிறது. ஜின்னா படம் வெளியிடப்பட்டதால் 4 தீவிரவாதிகளும் மாறுவேடங்களில் வரக்கூடும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
No comments:
Post a Comment