Sunday, December 26, 2010
தயாநிதி மாறன் செய்தது சரியென்றால் ராசா செய்ததும் சரிதான்-தி.மு.கவில் பூசல்
தயாநிதி மாறன் என்ன கொள்கையைக் கடைப்பிடித்தாரோ அதையேதான் ராசாவும் கடைப்பிடித்தார். ராசாவுக்கு முன்பிருந்தவர்கள் செய்தது தவறில்லையென்றால் ராசா செய்தது மட்டும் எப்படித் தவறாக முடியும் என்று கேட்டுள்ளார் தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன்.
ராசாவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் கூட்டம் போட்டு விளக்கத் தொடங்கியுள்ளது திமுக. கரூரில் நடந்த கூட்டத்தில் துரைமுருகன் கலந்து கொண்டார். உழவர் சந்தையில் நடந்த இக்கூட்டத்தில் துரைமுருகன் பேசுகையில்,
இந்தியாவில் முதல் முறையாக அலைக்கற்றை ஒதுக்கீட்டின் உண்மை நிலை குறித்த விளக்கப் பொதுக் கூட்டம் கரூரில்தான் நடைபெறுகிறது. அலைக்கற்றை ஒதுக்கீட்டின் உண்மை நிலை என்னவென்றால், எதிர்க்கட்சிகள் சொல்வதில் உண்மை இல்லை என்பதுதான்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் உத்தேசமாக ரூ. 1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதை பத்திரிகைகள், இழப்பு என்ற வார்த்தையை எடுத்துவிட்டு, ஊழல் என்ற வார்த்தையை சேர்த்து பெரிதுபடுத்தி விட்டன.
ஊழலுக்கும், இழப்புக்கும் வித்தியாசம் உள்ளது. அரசுக்கு வருமானம் வராமல் செய்வது இழப்பாகும். அரசின் கஜானாவுக்கு வருவதை வேறு வழிக்குத் திருப்பி விடுவது ஊழல். எனவே, அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் அரசியல் நோக்கத்தோடு திமுக மீது திணிக்கப்பட்ட ஒரு மோசடி.
அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏன் ஏலம் விடவில்லையென அந்தத் துறையின் அமைச்சராக இருந்த ராசாவிடம் கேள்வி எழுப்புகின்றனர். 1994-ம் ஆண்டு தொலைத் தொடர்புக் கொள்கை வகுக்கப்பட்டது.
இதில், டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய மாநகரங்களுக்கு ஏல முறையில்லாமல் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பின்னர், 1995-ல் ஏல முறையில் 18 நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டது.
2003-ல் பாஜக அரசில் மீண்டும் புதிய கொள்கை வகுக்கப்பட்டது. இதில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏல முறை வேண்டாம் என்றும், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை முறையில் ஒதுக்கீடு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, ராசா பதவிக்கு வருவதற்கு முன்பே 56 நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. 2008-ல் 102 நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையமும், தகவல் தொலைத் தொடர்புத் துறையின் தற்போதைய அமைச்சருமான கபில்சிபலும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏல முறை வேண்டாம் என்றே தெரிவித்துள்ளனர்.
இதைத்தான் முந்தையத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்கள் பிரமோத் மகாஜன், அருண் ஷோரி, தயாநிதிமாறன் ஆகியோர் பின்பற்றினார்கள். இதையேதான் ராசாவும் பின்பற்றினார். அவர்கள் செய்தது தவறில்லையென்றால், ராசா செய்தது மட்டும் தவறாகுமா.
முதல் தகவல் அறிக்கையில் ராசாவின் பெயர் இருக்கிறது. ஆனால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் முன்பே ராசாவைக் கைதுசெய்ய வேண்டும் என்கிறார் ஜெயலலிதா. பெங்களூர் நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் தெரியும் யார் கைதாவார்கள் என்று. 23 கோடியாக இருந்த அலைபேசி உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கையை 73 கோடியாக உயர்த்தியவர் ராசா.
அலைக்கற்றை ஒதுக்கீட்டில் திமுக லஞ்சம் பெற்றதுபோல் பாமரர்களிடம் உருவகப்படுத்துகிறார்கள். ராசா ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கினார் என்று யாராவது கூற முடியுமா என்று கேட்டார் துரைமுருகன்
Labels:
செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment