வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்பிய விஜயகுமார் முதல் மனைவியின் மகன் அருண் விஜய்யை கைது செய்யும்படி, புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசில், நடிகை வனிதா விஜயகுமார் கோரியுள்ளார்.
நடிகை வனிதாவின் மகனை விஜயகுமார் வீட்டிலிருந்து அழைத்து செல்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதா விஜயகுமாருக்கும் இடையே மோதல் வெடித்தது. விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில், வனிதா விஜயகுமாரின் கணவர் ஆனந்த்ராஜனை மதுரவாயல் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். பின், ஆனந்த்ராஜன் நிபந்தனையின் பேரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மதுரவாயல் போலீசில் வனிதா விஜயகுமார் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகர் விஜயகுமார், மஞ்சுளா மற்றும் அருண் விஜய் மீது இந்திய தண்டனை சட்டம் 341, 323 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின், இந்த வழக்கை புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கும்படி, டி.ஜி.பி., லத்திகா சரண் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டை நடிகை வனிதா விஜயகுமார் சந்தித்து, விளக்கம் அளித்தார்.
இதற்கிடையே, சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து அளித்த புகாரில், "என்னுடைய குழந்தையை கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி நடக்கிறது. மேலும், அருண் விஜய் மொபைல்போனில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், எனக்கும், என்னுடைய குழந்தையின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என, வனிதா விஜயகுமார் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, அருண் விஜய் உட்பட நான்கு பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். இதில், நடிகர் விஜயகுமார் உள்ளிட்ட பலரை சென்னை நகர போலீசார் தேடி வந்தனர். விஜயகுமார் மீது வனிதா விஜயகுமார் அளித்த புகார் சம்பந்தமாக தன்னுடைய தரப்பில் விளக்கம் அளிக்க புறநகர் கமிஷனர் அலுவலகத்திற்கு திடீரென விஜயகுமார் வந்தார்.
பின், புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு சென்ற அவர், சிறிது நேரம் இருந்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார். இதற்கிடையே, வனிதா விஜயகுமாரும், நடிகர் விஜயகுமாரும் மாறி மாறி பத்திரிகையாளர் களுக்கு பேட்டி அளித்தனர். தன் வசமிருந்த விஜய் ஸ்ரீஹரியை, முதல் கணவன் ஆகாஷ் கடத்தி சென்றதாகவும், கோர்ட்டில் ஆஜர்படுத்தி தன்னிடம் ஒப்படைக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகை வனிதா மனு தாக்கல் செய்தார். விசாரணையின் முடிவில் விஜய் ஸ்ரீஹரியை ஒப்படைப்பது தொடர்பாக கடந்த 23ம் தேதி கோர்ட் ஒரு உத்தரவை பிறப்பித்தது. இந்த விவகாரத்தில் நடிகை வனிதா விஜயகுமாரின் முதல் கணவன் ஆகாசும் களத்தில் குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகர் விஜயகுமார், அவரது மனைவி மஞ்சுளா, விஜயகுமாரின் முதல் மனைவி மகன் அருண் விஜய் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ், புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளாக அவர்கள் அறிவிக்கப்பட்டனர். இதையறிந்த நடிகர் விஜயகுமார், பெண் வன்கொடுமை சட்டத்தில் எப்படியும் கைதாகி விடுவோம் என்ற பயத்தில், முன்ஜாமீன் மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்தார். இருப்பினும், புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார், கோர்ட்டில் ஆஜராகி, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரினர். இதற்கிடையில், நடிகை வனிதாவும் முன்ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். விஜயகுமார், அவரது மனைவி மஞ்சுளா, வனிதா விஜயகுமார் ஆகியோருக்கு கோர்ட் முன்ஜாமீன் வழங்கியது. வனிதா விஜயகுமாரை தாக்கிய வழக்கில் முக்கிய நபரான விஜயகுமாரின் முதல் மனைவியின் மகன் அருண் விஜய் தலைமறைவானார்.
இந்த வழக்கில், விஜயகுமாரின் முதல் மனைவியின் மகன் அருண் விஜய்யை வெளிநாட்டில் மறைத்து வைத்துவிட்டு, விஜயகுமார் குடும்பம் நாடகம் ஆடுவதாக வனிதா விஜயகுமார் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதை தொடர்ந்து அருண் விஜய்யை கைது செய்வதற்காக, ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டின் முன் போலீஸ் போடப்பட்டிருக்கிறது. வெளிநாட்டிலிருந்த அருண் விஜய், சென்னை வந்து கடந்த 10 நாட்களாக தங்கியிருப்பதாகவும், அவரை கைது செய்யும்படியும் புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டை நேரில் சந்தித்து, நடிகை வனிதா புகார் அளித்தார்.
புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் அருண் விஜய் குறித்த தகவல்களை தெரிவித்து விட்டு, வெளியே வந்த வனிதா விஜயகுமார் அளித்த பேட்டி:
இந்த வழக்கில் ஹீரோவான அருண் விஜய் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தார். அதனால், போலீசார் அவரை கைது செய்ய முடியவில்லை. ஆனால், கடந்த 10 தினங்களுக்கு முன் அருண் விஜய் சென்னை திரும்பி விட்டார். தற்போது ஈக்காடுத்தாங்கல் மற்றும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள பங்களாவில் தங்கியுள்ளார். தற்போது ஆலப்பாக்கத்தில் உள்ள அவரின் வீட்டு முன் போலீஸ் போட்டிருக்கின்றனர். இது தேவையில்லாதது. ஆலப்பாக்கத்திற்கு அவர் வர மாட்டார். மேலும், பல பத்திரிகைகளுக்கு அருண் விஜய் பேட்டி கொடுத்து கொண்டிருக்கிறார். என் விஷயத்தில் விஜயகுமாரும், அருண் விஜய்யும் "செஸ் விளையாட்டு ஆடி வருகின்றனர். அருண் விஜய் சென்னையில் தான் தங்கியுள்ளார். அவரை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பது தான் என் கோரிக்கை. அப்போது தான் சட்டம் என்ன என்று அவருக்கு புரியும். அவரை போலீசார் கைது செய்யவில்லை என்றால், கடைசியில் கோர்ட்டிற்கு செல்வேன். இவ்வாறு வனிதா விஜயகுமார் கூறினார்.
No comments:
Post a Comment