Sunday, January 30, 2011

ஓட்டலில் எச்சில் இலை எடுக்கும் ஊராட்சி தலைவர்


காஞ்சிபுரம் அருகே, படிப்பறிவு இல்லாத ஊராட்சி தலைவர் பதவிக் காலம் முடிய உள்ளதால், ஓட்டலில் எச்சில் இலை எடுக்கும் பணியில் சேர்ந்துள்ளார். காஞ்சிபுரத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ளது வளத்தோட்டம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் வளத்தோட்டம், கமூகம்பள்ளம், வளத்தோட்டம் காலனி, திருவள்ளுவர் குடியிருப்பு ஆகிய பகுதிகள் உள்ளன.

இந்த ஊராட்சியின் தலைவர் பதவி, கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது பழங்குடியின வகுப்பை (எஸ்.டி., பிரிவு) சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.இருளர் சமூகத்தைச் சேர்ந்த 16 குடும்பத்தினரில் வாசு (33) என்பவர் தேர்தலில் நின்றார். அவருக்கு ஊராட்சியில் ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்ததால், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். படிப்பறிவு இல்லாத வாசுவிற்கு, கையெழுத்து மட்டுமே போடத் தெரியும்.அவரை தேர்தலில் நிறுத்தியவர் வாசுவின் அறியாமையைப் பயன்படுத்தி தலைவர் போல் செயல்படத் துவங்கினார்.ஊராட்சியில் முறைகேடுகள் நடக்க துவங்கியதை அடுத்து, வாசு தன்னை தேர்தலில் நிறுத்தியவர் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறினார்.அதன்பின், ஊராட்சிப் பணிகளை கவனிக்கும் பொறுப்பு முழுவதையும் ஊராட்சி உதவியாளர் லோகநாதன் மேற்கொண்டார். அவர் காட்டிய இடங்களில் வாசு கையெழுத்திட்டார். ஊராட்சியில் எந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்ற விவரம் கூடத் தெரியாமல் இருந்தார்.

ஊராட்சித் தலைவ ராவதற்கு முன்பாக வாசு நெசவுத் தொழில் செய்து வந்தார். முதலாளி ஒருவரிடம் கூலிக்கு நெசவு செய்தார். அதன்பின் தொழில் நசிவு காரணமாக வேலைக்கு செல்லவில்லை. அவருக்கு பயணப் படியாக ஊராட்சி சார்பில் மாதம் 500 ரூபாய் வழங்கப்பட்டது.அவரது மனைவி பச்சையம்மாள். கூலி வேலை செய்து வந்தார். இவர்களின் மகன் கார்த்திக் ஒன்பதாம் வகுப்பு, மகள் நந்தினி ஆறாம் வகுப்பு, ராஜேஸ்வரி முதல் வகுப்பு படிக்கின்றனர். நான்கு மாதங்களுக்கு முன் நான்காவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.கூலி வேலை செய்து வந்த பச்சையம்மாள், நான்காவது குழந்தை பிறந்த பின் வேலைக்குச் செல்லவில்லை. இதனால், வீட்டில் சாப்பாட்டிற்கு சிரமம் ஏற்பட்டது.அதைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன் ஊராட்சித் தலைவரான வாசு, காஞ்சி புரம் காந்தி ரோட்டில், ஒரு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு சாப்பிட்டவர்களின் தட்டுகளை எடுப்பது, டேபிளை சுத்தம் செய்வது போன்ற பணியை செய்து வருகிறார்.கமூகம் பள்ளத்தில் ஓலைக் குடிசையில் வசித்து வருகிறார். அவரது குடிசைக்கு பின்னால் கான்கிரீட் வீடு முழுமை பெறாமல் உள்ளது. வீடு குறித்து கேட்ட போது, வாசுவின் மனைவி பச்சையம்மாள், ஊராட்சி கிளார்க் எங்களுக்காககட்டுகிறார் என்றார்.

ஊராட்சி உதவியாளரான லோகநாதன் கூறியதாவது:ஊராட்சித் தலைவருக்கு மாதம் 500 ரூபாய் மட்டும் வழங்கப்படுகிறது. ஊராட்சியில் 2006-07ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது.அரசு வழங்கிய 20 லட்ச ரூபாயில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நூறு நாள் வேலை திட்டத்தின் கீழும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதில் ஊராட்சித் தலைவர் வேலை செய்ய முடியாது. தொகுப்பு வீடு, கலைஞர் வீடு வழங்கும் திட்டம் ஆகியவற்றில் ஊராட்சித் தலைவர் பயனாளியாக முடியாது. எனவே, அவருக்கு வீடு எதுவும் ஒதுக்கப்படவில்லை.அவர் சொந்த வருமானத்தில் சிறிது சிறிதாக சேமித்து வீடு கட்டுகிறார். பதவிக் காலம் முடிய உள்ளதால் ஓட்டலில் வேலைக்கு சேர்ந்துள்ளார் என்றார். அவருடனிருந்த வாசு அவர் கூறியதை வழிமொழிந்தார்..அனைத்து தரப்பு மக்களும் உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக பஞ்சாயத்து ராஜ் திட்டம் கொண்டு வரப்பட்டது.ஆனால், விவரம் தெரியாதவர்கள் தலைவராகும் போது, சிலர் அவர்களை கைப்பாவையாகப் பயன்படுத்திக் கொண்டு, தாங்கள் தலைவராக செயல்படுகின்றனர். ஊராட்சியில் என்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்ற விவரம் கூட அறியாமல் தலைவர் பதவிக் காலத்தை முடிக்க உள்ளார் வாசு.

மாணவர்களைக் கண்காணிக்க ரேடியோ டேக் பொருத்துவதா?-யு.எஸ்.சுக்கு இந்தியா அதிருப்தி


கலிபோர்னியாவின் டிரைவேலி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர்களுக்கு காலில் கண்காணிப்பு டேக் மாட்டி விட்டிருக்கும் அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கடும் கண்டனமும், அதிருப்தியும் தெரிவித்துள்ளது.

இப்பல்கலைக்கழகத்தில் பெருமளவிலான மாணவர்கள் குடியேற்ற விதிமுறைகளை மீறி சேர்க்கப்பட்டிருப்பதாக அமெரிக்க குடியேற்றத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது இந்திய மாணவர்கள்தான். கிட்டத்தட்ட 1555 மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர். அவர்களில் 95 சதவீதம் பேர் இந்தியர்கள், அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மாணவர்களின் பாஸ்போர்டுகள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல மாணவர்களைக் கைது செய்து பின்னர் விடுவித்த அமெரிக்க அரசு, தற்போது அவர்களைக் கண்காணிக்கும் வகையில், காலில் ரேடியோ டேக்குகளைக் கட்டி விட்டுள்ளனர்.

இந்த செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது அமெரிக்க அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய மாணவர்கள் குற்றவாளிகள் அல்ல. உடனடியாக ரேடியோ டேக்குகளை அகற்ற வேண்டும். மாணவர்களை அதிகாரிகள் நடத்தியுள்ள முறை சற்றும் ஏற்புக்குரியதல்ல. இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாது என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுவதை ஏற்க முடியாது. இது ஏற்கனவே ஏமாற்றப்பட்டு காயத்துக்குள்ளாகியிருக்கும் மாணவர்களை மேலும் புண்படுத்துவதாக அமையும்.

உயர் கல்வித்துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை அமெரிக்க அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும், மனதில் கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார் கிருஷ்ணா.

டிரைவேலி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர்களை மோசடியான முறையில் அங்கு சேர்த்துள்ளனர். இதை கண்டுபிடித்த அமெரிக்க குடியேற்றத்துறை தற்போது அப்பாவி மாணவர்களைக் குறி வைத்திருப்பது இந்தியாவில் மட்டுமல்லாமல், அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையேயும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எந்தத் தவறும் செய்யாத மாணவர்களின் காலில் கண்காணிப்பு டேக்குளைக் கட்டிய செயலும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அப்பாவி மாணவர்களின் காலில் டேக்குகளை மாட்டியிருப்பது போன்ற புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது. 

வாய் கிழிய மனித உரிமை, மனிதாபிமானம், அமைதி என்று நியாயம் பேசும் அமெரிக்கா உள்ளூர் கொடூர மனப்பான்மையுன் நடந்து கொண்டுள்ள செயல் இந்தியர்களை அமெரிக்கா எப்படிப்பட்ட நிலையில் வைத்திருக்கிறது என்பதையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

கண்டனம் தெரிவித்ததோடு நிற்காத இந்திய அரசு, அமெரிக்க துணைத் தூதர் டொனால்டு லூவை வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைத்து இந்தியாவின் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளது.

முன்னதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில்,

பாதிக்கப்பட்டுள்ள இந்திய மாணவர்களை கண்ணியத்துடன் நடத்துமாறு அமெரிக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளோம். அவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பிட்ட சில மாணவர்கள் கைது செய்யப்பட்டு பின் காலில் ரேடியோ டேக் பொருத்தி, விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்க சட்டப்படி இது செய்யப்பட்டிருந்தாலும் கூட, பாதிக்கப்பட்ட மாணவர்களின் கால்களில் உள்ள டேக்குகளை அகற்ற வேண்டும்.

தங்களது நிலைமை பற்றி எடுத்துச் சொல்ல மாணவர்களை அனுமதிக்க வேண்டும். அவர்களில் இந்தியாவுக்கு வர விரும்புபவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

கடந்த வியாழக்கிழமை பாதிக்கப்பட்ட மாணவர்கள் குழு இந்திய துணைத் தூதர் சுஷ்மிதா கங்குலி தாமஸை நேரில் சந்தித்தனர்.

இது குறித்து வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி கூறியதாவது,

பல்கலைக்கழகம் தான் குற்றம் செய்துள்ளது. மாணவர்கள் குற்றமற்றவர்கள். எனவே, அவர்களை தண்டிக்காமல் இருக்க நாங்கள் அம்மாநில அரசைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

அங்குள்ள இந்திய துணைத் தூதர் அமெரிக்க அதிகாரிகளிடம் இது குறித்து தொடர்பு கொண்டு தான் இருக்கிறார். அறிக்கை வருவதற்காகக் காத்திருக்கிறார்கள். அறிக்கை வந்த பிறகே மாணவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்று தெரியும் என்றார்.

இக்குற்றச்சாட்டுக்களை பல்கலைக்கழக நிறுவனர் சூசன் சூ மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை. நீங்கள் எங்கள் வருமானத்தைப் பற்றி பேசுகிறீர்கள். இப்படித் தான் நாங்கள் வழக்கமாக கட்டணம் வசூலிப்போம். ஏற்கனவே நிறைய மாணவர்கள் படிக்கையில் நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி சேர வைக்கவில்லை என்று சூசன் தெரிவித்தார்.


திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எவை எவை கருணாநிதி அறிவிப்பு


தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வும் பங்கு பெறும் என டெல்லியில் கருணாநிதி அறிவித்தார். தேசிய பாதுகாப்பு குறித்து முதல்- அமைச்சர்கள்  மாநாடு டெல்லியில் நாளை நடைபெற உள்ளது.  இதில் கலந்துக்கொள்வதற்காக தமிழக முதல்வர் கருணாநிதி இன்று மதியம் டெல்லி புறப்பட்டார். டெல்லி சென்றடைந்த கருணாநிதி, நிருபர்களுக்கு கூட்டணி பற்றி பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணியுடன் பா.ம.க., முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள்,புரட்சி பாரதம் ஆகியவை இணையும். காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள்  ஒதுக்கப்படும் என்று நாளை சோனியா காந்தியுடனும், மன்மோகன்சிங்குடனும் கலந்தாலோசிக்கப்படும். இவ்வாறு கருணாநிதி கூறினார்.

காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளது என்று நாளையே முடிவு செய்யப்படுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு, அது பற்றி சொல்ல முடியாது, ஆனால் விரைவில் தெரிவிக்கப்படும்  என கருணாநிதி கூறினார்.

திருத்தணியில் 'திகுடுமுகுடு' காதல்

அதிரடித் திரைப்படமாக இருந்தாலும் திருத்தணியில், பரத் சுனைனா சம்பந்தப்பட்ட காட்சிகளை தித்திக்கும் வகையிலும், சிலிர்ப்பூட்டும் வகையிலும் எடுத்து வருகிறாராம் இயக்குநர் பேரரசு.

ஊர்ப் பெயர்களில் படம் எடுப்பது பேரரசுவின் ஸ்டைல். அதிலும், பன்ச் டயலாக்குகளை படம் பூராவும் பரவ விட்டு, அதிரடி வசனங்கள், ஆக்ஷன் அதகளங்கள் என்று கலக்குபவர் பேரரசு. டி.ராஜேந்தர் பாணியில் ஏகப்பட்ட வேலைகளை கையில் எடுத்துக் கொண்டு அசத்தும் பேரரசு தற்போது தனது பாணியில் அதிரடி, ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த திருத்தணி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

பழனி படத்தில் பரதத்தை ஆக்ஷன் ஹீரோவாக அதகளப்படுத்திய அவர், இப்படத்திலும் பரத்தை பட்டையைக் கிளப்ப விட்டுள்ளாராம். கூடவே ஜோடியாக சுனைனா.

அதிரடிப் படமாக இருந்தாலும், பரத், சுனைனா சம்பந்தப்பட்ட காட்சிகள் சிலிர்க்கும் வகையிலும், ஜில்லிடும் தரத்திலும் இருக்குமாம். இருவரும் காதல் கட்சிகளில் அப்படி ஒன்றிப் போய் நடித்திருக்கிறார்களாம். அதிரடியைப் போலவே இவர்கள் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளும் பேசப்படுமாம்.

வழக்கமான பொறுப்புகளோடு கூடுதலாக இப்படத்திற்கான இசையமைக்கும் பொறுப்பையும் கையில் எடுத்துக் கொண்டு களம் இறங்கியுள்ளாராம் பேரரசு.


காதலர் தினத்திற்கு 2 படம்

காதலர் தினத்தையொட்டி பிப்ரவரி மாதத்தில் 2 திரைப்படங்கள் காதலர்களை மகிழ்விக்க வருகிறது.

தீபாவளி, பொங்கலுக்கு புதிய திரைப்படங்கள் வருவதைப் போல இப்போது காதலர் தினத்தன்றும் புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்வது வழக்கமாகி வருகிறது. கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று, விண்ணைத் தாண்டி வருவாயா வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதேபோல 2009ம் ஆண்டு சிவா மனசுக்குள் சக்தி படம் வெளியாகி வெற்றி பெற்றது.

இந்த வரிசையில் இந்த ஆண்டு இரண்டு திரைப்படங்கள் காதலர் தினத்தன்று வெளியாகின. ஒன்று ஆனந்த்தின் கோ. இன்னொன்று, பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள எங்கேயும் காதல்.

இரு படங்களுக்கும் இசையமைப்பு ஹாரிஸ் ஜெயராஜ். இரு படங்களின் பாடல்களும் ஏற்கனவே அனைவரையும் வசீகரிக்க ஆரம்பித்து விட்டன. எங்கேயும் காதல் படத்தின் மூலம் ஹன்சிகா மோத்வானி தமிழுக்கு அறிமுகமாகிறார். ஜெயம் ரவியுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

காதலர் தினத்தன்று வெளியாகும் இந்த இரு படங்களில் யார் காதலர்களுடைய பெருவாரியான ஆதரவுகளைப் பெறப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


மல்லிகா ஷெராவத்தின் 17 முத்த சாதனை முறியடிப்பு!

மல்லிகா ஷெராவத் வசம் இருந்து வந்த முத்த சாதனையை அருனோதய் சிங்-அதிதி ராவ் ஜோடி முறியடித்து விட்டனர்.

க்வாயிஸ் படத்தில் மல்லிகா ஷெராவத் 17 முத்தம் கொடுத்து அசத்தியிருந்தார். அதுதான் ஒரு படத்தில் ஒரு நாயகியும், நாயகனும் அதிகபட்ச முத்தங்களைப் பரிமாறிக் கொண்ட சாதனையை வைத்துள்ளது. ஆனால் தற்போது அருணோதய் சிங் மற்றும் அதிதி ராவ் இணைந்து நடித்துள்ள யே சாலி ஜிந்தகி படம் முறியடித்து விட்டதாம்.

இதுகுறித்து அப்பட இயக்குநர் சத்யதீப் மிஸ்ரா கூறுகையில், இப்படத்தில் டெல்லியைச் சேர்ந்த இளம் தம்பதிகளாக நடித்துள்ளனர் சிங்கும், ராவும். இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை வரும். அப்படி வரும்போதெல்லாம் இருவரும் முத்தமிட்டுக் கொள்வார்கள். இந்த முத்தத்திற்காகவே அடிக்கடி சண்டையும் போடுவார்கள்.

எங்களைப் பொறுத்தவரை 20 முதல் 22 முத்தங்கள் வரை இடம் பெற்றுள்ளதாக கருதுகிறோம். கூடக் கூட இருக்கலாம் என்றார்.

முத்தம் என்றால் சாதா முத்தம் இல்லையாம், லிப் டு லிப் அழுத்தமான முத்தமாம். இருந்தாலும் இதில் ஆபாசம் கலந்து விடாமல் நயத்தோடு படமாக்கியுள்ளாராம் மிஸ்ரா.

இத்தனை முத்தங்கள் படத்தில் இடம் பெற்றிருந்தாலும், அதுகுறித்து சிங்கும், ராவும் ஆட்சேபிக்கவில்லையாம். கதைக்குத் தேவையாக இருந்தால் எத்தனை முத்தத்திற்கும் தயார் என்று கூறி விட்டார்களாம்.

நாயகன் சிங்கும், நாயகி ராவும் சாதாரணப் பின்ணனி கொண்டவர்கள் அல்ல, பெரிய இடத்துக்காரர்கள். சிங்கின் தாத்தா பெயர் அர்ஜூன் சிங். முன்னாள் மத்திய அமைச்சர், பலம் வாய்ந்த காங்கிரஸ் காரராக ஒருகாலத்தில் இருந்தவர். ராவின் தாத்தா சர் முகம்மது சலே அக்பர் ஹயாத்ரி, அஸ்ஸாமின் ஆளுநராக இருந்தவர். இவரது கணவர்தான் சத்யதீப் மிஸ்ரா. அதாவது மனைவியை வைத்து இத்தனை முத்தக் காட்சிகளை எடுத்துள்ளார் மிஸ்ரா.

தனது மனைவியை வைத்து இத்தனை முத்தக் காட்சிகளை எடுத்தது குறித்து மிஸ்ராவுக்கு எந்த சங்கடமும் இல்லையாம். ஆனால் சென்சார் போர்டுதான் கடுப்பாக உள்ளதாம். ஏற்கனவே இப்படத்தின் தலைப்பு குறித்து சென்சார் போர்டு அதிருப்தி தெரிவித்துள்ளது. எனவே முத்தக் காட்சிகளுக்கு பெரிய ஆக்சா பிளேடு போடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் மிஸ்ரா கவலைப்படவில்லை. இதற்கெல்லாம் நான் கவலைப்படவில்லை. முத்தமிடுவது பாவம் என்றால் நிஜ வாழ்க்கையில், நிஜத் தம்பதிகள் யாருமே முத்தமிட்டுக் கொள்ள மாட்டார்களா என்பதை சென்சார் போர்டு விளக்க வேண்டும் என்று கோருவேன் என்கிறார் சற்றே கோபத்துடன்.

வாஸ்தவமான கோபம்தான் மிஸ்ரா, விடாதீங்க!