அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்தவர் மகேந்திரநாத் தாஸ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஹரகந்த தாஸ் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது.
கடந்த 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி மகேந்திரதாஸ் அரிவாளுடன் சென்று ஹரகந்ததாசின் தலையை துண்டித்து கொன்றார். அங்குள்ள எம்.ஜி.ரோட்டில் பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்தது.
துண்டித்த தலையுடன் மகேந்திர தாஸ் அருகில் உள்ள பேன்சிபஜார் போலீஸ் நிலையத்துக்கு நடந்து சென்று சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த கீழ் கோர்ட்டு மகேந்திர தாசுக்கு தூக்கு தண்டனை விதித்தது. தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். சுப்ரீம் கோர்ட்டும் வழக்கை விசாரித்து மகேந்திர தாசுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தது. 1999-ம் ஆண்டு மே மாதம் 14-ந்தேதி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து மகேந்திர தாஸ் கவுகாத்தி மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் தண்டனையை குறைக்குமாறு ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். அது நிராகரிக்கப்பட்டது.
மகேந்திர தாசை தூக்கில் போட தேதி குறிப்பிடப்படவில்லை. செசன்ஸ் கோர்ட்டுதான் தூக்கில் போடும் தேதியை குறிப்பிட வேண்டும்.
இதனால் கடந்த 12 ஆண்டுகளாக சாவை எதிர்நோக்கி உள்ளார். தினம் தினம் செத்துப் பிழைக்கும் மகேந்திரதாஸ் தன்னை உடனே தூக்கில் போடுங்கள் என்று கோரி கவுகாத்தி ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கடந்த 12-ந்தேதி அவர் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
இதனால் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதைத் தொடர்ந்து கவுகாத்தி அரசு ஆஸ்பத்திரியில் கைதி மகேந்திரதாஸ் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலை கவலைக் கிடமாக உள்ளது.
முன்னதாக மகேந்திரதாஸ் கூறும்போது, தூக்கு தண்டனையை எதிர்நோக்கி தினமும் மரண பயத்தில் தவிக்கிறேன். தினம் தினம் செத்துப் பிழைப்பது போல் உள்ளது. தண்டனை விதித்து 12 ஆண்டுகள் ஆகியும் தூக்கு தண்டனையை நிறைவேற்றாமல் தினமும் சாகடிக்கிறார்கள்.
ஜனாதிபதிக்கு மீண்டும் கருணை மனு அனுப்பி உள்ளேன். அதன் முடிவும் இன்னும் வரவில்லை. எனவே என்னை உடனடியாக தூக்கில் போடுங்கள் என்றார்.
தொடர்ந்து ஆஸ்பத்திரியிலும் அவர் உண்ணாவிரதம் இருக்கிறார்.
No comments:
Post a Comment