தெலுங்கானா விவகாரத்தில் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி 6 பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பரிந்துரை 1: ஆந்திராவை பிரிக்காமல் ஐக்கிய ஆந்திராவாக தொடர்ந்து நீடிக்க வைக்கலாம். அதில் தெலுங்கானாவைச் சேர்ந்தவரை முதல்வர் அல்லது துணை முதல்வராக்கலாம்.
பரிந்துரை 2: ஆந்திரா, தெலுங்கானா என இரு மாநிலங்களாகப் பிரிக்கலாம். இதில் ஆந்திர மாநிலத்தில் ராயலசீமா, கடலோர ஆந்திர மாநிலங்கள் இருக்கலாம்.
பரிந்துரை 3: ஹைதராபாத்தை தனி யூனியன் பிரதேசமாக்கலாம். ஹைதராபாத் தவிர்த்த மற்ற பகுதிகளை ஆந்திரா, தெலுங்கானா என இரு மாநிலங்களாகப் பிரிக்கலாம். இரு மாநிலங்களுக்கும் பொதுவாக ஹைதராபாத் தலைநகராக இருக்கலாம்.
பரிந்துரை 4: மாநிலத்தை ஆந்திரா, தெலுங்கானா என இரு மாநிலங்களாகப் பிரித்துவிட்டு, ஹைதராபாத்தை மேலும் விரிவாக்கலாம். ஹைதராபாத்துடன் ஆந்திரா, தெலுங்கானாவின் மேலும் பல பகுதிகளை இணைத்து அதை தனி யூனியன் பிரதேசமாக்கலாம்.
பரிந்துரை 5: மாநிலத்தை ஆந்திரா, தெலுங்கானா என இரண்டாகப் பிரித்து அதில் ஹைதராபாத்தை தெலுங்கானாவின் தலைநகராக்கலாம்
பரிந்துரை 6: ஆந்திராவை பிரிக்காமல் தெலுங்கானா பகுதியை தனி கவுன்சிலாக்கலாம்.
இவ்வாறு 6 பரிந்துரைகளை ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி முன் வைத்துள்ளது.
தொடர்ந்து போராடுவோம்-ராவ்:
முன்னதாக ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் கூறுகையில்,
தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதை கால தாமதப்படுத்தத்தான் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியை மத்திய அரசு அமைத்தது. அந்த அறிக்கை விவரத்தை வெளியிடுவதை கூட இழுத்தடிக்கிறார்கள்.
எங்களைப் பொறுத்த வரையில் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை பற்றி கவலை இல்லை. இன்னும் 20 நாளில் தெலுங்கானா தராவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். தெலுங்கானாவில் உள்ள 10 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களை ஸ்தம்பிக்க செய்வோம்.
தற்போது ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் 6 பரிந்துரைகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில் விரைவில் தொண்டர்கள் மத்தியில் பேசவுள்ளார் ராவ் என்று அக்கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது போராட்டத்தை தொடருவது குறித்த அறிவிப்பை சந்திரசேகர ராவ் அறிவிப்பார் என்று தெரிகிறது. மீண்டும் ஒரு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் குதிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
No comments:
Post a Comment