ஐபிஎல் ஏலத்தில் ஏலம் எடுக்க யாருமே முன்வராமல் கங்குலியை நிராகரித்து விட்ட நிலையில், கொதிப்படைந்துள்ள அவரது ரசிகர்களை சமாதானப்படுத்தும் வகையில் பேசியுள்ளார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான ஷாருக் கான். கங்குலிக்கு மேனேஜர் பதவி தரத் தயார் என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த 2 நாட்களாக பெங்களூரில் ஐபிஎல் ஏலம் நடந்தது. அதில் இதுவரை கொல்கத்தா அணியின் கேப்டனாகவும், அந்த அணியின் முத்திரை வீரராகவும் இருந்து வந்த கங்குலியை ஏலத்தில் யாருமே எடுக்கவில்லை.
இதனால் கங்குலி ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளனர். கங்குலியுடன் தனக்கு இருந்து வந்த கருத்து வேறுபாடை பயன்படுத்தி கங்குலியை அணியில் இடம் பெற முடியாமல் செய்து விட்டார் ஷாருக் என்று கொதிப்படைந்து அவரது கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் குதித்தனர். மேலும், கங்குலி இல்லாவிட்டால் கொல்கத்தாவில் எந்த ஐபிஎல் போட்டியும் நடைபெறாது என்றும் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில் ரசிகர்களை சமாதானப்படுத்தும் வகையில் பேசியுள்ளார் ஷாருக் கான். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,
தாதா (கங்குலியின் செல்லப் பெயர்)இல்லாமல் கொல்கத்தா அணி இல்லை. நான் அவரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அவரை பிற பணிக்கு பயன்படுத்த முயல்வோம் என்றார்.
மற்ற அணிகள் ஏன் கங்குலியை ஏலத்தில் எடுக்கவில்லை என்று ஷாருக்கிடம் கேட்டபோது அவர் கூறியதாவது,
இது குறித்து நான் கருத்து தெரிவிப்பது உகந்ததன்று. பத்து அணிகள் இருக்கின்றன. அதனால் பத்து மாறுபட்ட கருத்துகள் இருக்கும். எனவே, அது பற்றி கூறுவது எளிதல்ல என்றார்.
இதற்கிடையே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெங்கி மைசூர், கங்குலியை அணியின் மானேஜராக இருக்கும்படி தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இதை கங்குலி ஏற்க மாட்டார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் விலை போகாதது குறித்து கங்குலி கூறுகையில்,
என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. வீரர்களைத் தேர்வு செய்வது அந்தந்த அணியின் விருப்பம். ஆனால் நான் இப்படி ஏலத்தில் போகாமல் இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை என்றார்.
No comments:
Post a Comment