இளங்கோவன் உள்ளிட்ட திமுகவுக்கு எதிரான தமிழக காங்கிரஸ் தலைவர்களை கட்டுப்படுத்தி வைக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் திமுக நேரடியாக கோரிக்கை வைத்துள்ளது.
நேற்று சோனியா காந்தியை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு சந்தித்தபோது இது தொடர்பாக முதல்வர் கருணாநிதி தந்த கடிதத்தை ஒப்படைத்து, இளங்கோவன் மற்றும் எந்த செல்வாக்கும் இல்லாத (ராகுலுக்கு அறிமுகமானவர்கள் என்ற தகுதியும், சில வார இதழ்களில் பேட்டி தந்து வெளியில் முகம் தெரிந்தவர்கள் என்ற தகுதியும் மட்டும் கொண்டவர்கள்) திமுக எதிர்ப்பு காங்கிரசார் மீது புகார் கூறினார்.
மேலும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பதவியிலிருந்து ராசா விலகிவிட்ட நிலையில், திமுகவுக்கு இன்னொரு கேபினட் அமைச்சர் பதவி தர வேண்டும் என்றும், தொலைத் தொடர்புத்துறையோ அல்லது வேறு ஒரு அடிபபடைக் கட்டமைப்புத்துறையோ தங்களுக்கு உடனடியாக ஒதுக்கப்பட வேண்டும் என்றும் சோனியாவிடம் திமுக தெரிவித்துள்ளது.
இந்த விவகாரங்களில், சோனியாவின் நடவடிக்கைகளைப் பொறுத்து அடுத்த மாதம் நடைபெறவுள்ள திமுக பொதுக் குழுவில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் காங்கிரசிடம் பாலு தெரிவித்துவிட்டதாகத் தெரிகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை திமுக உயர்நிலைத் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றபோது சட்டசபைத் தேர்தல், கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் காங்கிரசுடனான பிரச்சனைகளை சரி செய்வது குறித்தும் பேசப்பட்டது. அதில் தான் கருணாநிதி சார்பில் சோனியா காந்தியை டி.ஆர்.பாலு சந்தித்துப் பேசுவது என்றும் முடிவானது என்பது குறிப்பிடத்தக்கது.
பாலுவை சந்தித்தபோது மு.க.அழகிரி விவகாரம் குறித்து சோனியா கேட்டதாகவும், அழகிரியை திமுக தலைமை சமாதானப்படுத்திவிடும் என்று பாலு தெரிவித்ததாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராசாவிடமிருந்து கொள்கை பரப்புச் செயலாளர் பதவியைப் பறிக்க வேண்டும், அவரை கட்சிலிருந்து நீக்க வேண்டும், நிரா ராடியாவிடம் தொலைபேசியில் தனக்கு எதிராகப் பேசிய அமைச்சர் பூங்கோதையை பதவி நீக்கி-கட்சியை விட்டும் நீக்க வேண்டும், பூங்கோதை-ராசாவுக்கு ஆதரவாக உள்ள கனிமொழியையும் கட்சியை விட்டு விலக்கி வைக்க வேண்டும், கனிமொழி தலைமையில் சென்னை சங்கமம் விழாவை நடத்தக்கூடாது என்று அழகிரி கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை வலியுறுத்தி தனது திமுக தென் மண்டலப் பொறுப்பாளர் பதவியையும், அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்து முதல்வர் கருணாநிதிக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் அழகிரியை சமாதானப்படுத்தும் வேலைகளிலும் திமுக இறங்கியுள்ளது. ராசா மீது நடவடிக்கை எடுத்தால் நாமே ஊழலை ஒப்புக் கொண்டதாகி விடும். எனவே சிபிஐ, நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணையின் போக்கை வைத்தும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் வைத்து ராசா மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அழகிரியிடம் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஆனால், முதல்வரின் பதிலால் சமாதானமடையாத அழகிரி, உயர்மட்டக்குழு கூட்டத்தை புறக்கணித்துவிட்டு மதுரை சென்றுவிட்டதும், நேற்று உசிலம்பட்டியில் துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த சமத்துவபுறம் திறப்பு விழா நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் தான் வரும் பிப்ரவரி 3ம் தேதி திமுக பொதுக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment