நடிகை ரஞ்சிதா கொடுத்த புகாருக்கு, பதில் அளிக்கும் வகையில் உண்மை விரைவில் தெரிய வரும் என்று லெனின் கருப்பன் கூறினார். சாமியார் நித்யானந்தா-நடிகை ரஞ்சிதா நெருக்கமாக இருந்த வீடியோ காட்சி, தொலைக்காட்சியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆசிரமத்தில் பல பெண்களை நித்யானந்தா கற்பழித்து விட்டதாக அவரது சீடர் லெனின் கருப்பன் போலீசில் புகார் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து நித்யானந்தா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார். இந்த நிலையில் ரஞ்சிதா, தன்னை கற்பழிக்க முயன்றதாக லெனின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஒரு வாரப்பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ரஞ்சிதா கூறியதாவது:-
"நான் தலைமறைவு வாழ்க்கை நடத்தவில்லை. கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதியில் விசாரணைக்காக புலனாய்வு அதிகாரிகளைச் சந்தித்தேன். அதற்குப் பிறகு அமெரிக்காவுக்குச் சென்றேன். என்னுடைய சகோதரிகளுடன் சில மாதங்கள் இருந்தேன். இப்போது பெங்களூர் வந்திருக்கிறேன்.
நான் ஒரு நடிகை என்பதற்காக, ஒவ்வொரு நாளும், 24 மணி நேரமும் என்ன செய்கிறேன், எங்கே இருக்கிறேன் என்பதை எல்லோருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நடிகையாக இருந்தாலும், நானும் ஒரு சராசரிப் பெண்தான். அந்த சம்பவத்தால் நான் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டேன். என்னைவிட என் குடும்பத்தினர் மிகவும் மனம் உடைந்து போனார்கள்.
அதிலிருந்து மீளவே எங்களுக்கு இரண்டு மூன்று மாதங்கள் தேவைப்பட்டது. என் மீது இழைக்கப் பட்ட அநீதியை எதிர்த்துப் போராட வேண்டுமென என் குடும்பத்தினர் மனரீதியாக தயாராவதற்கு இவ்வளவு காலம் தேவைப்பட்டது.
இதில் எந்த உள்நோக்கமும் இல்லை.லெனின் கருப்பனும் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். முதலில் பல பிரம்மசாரிகள் என்னிடம் வந்து புலம்பினார்கள். சாமியைப்பற்றி பலவிதமாக சொன்னார்கள். அதனால் நான்தான் திட்டமிட்டு அந்த வீடியோவை எடுத்தேன் என்றார். இப்போது சில மாதங்களுக்குப் பிறகு அதை நான் எடுக்கவில்லை. வேறொருவர் எடுத்தார். அதைத்தான் நான் வெளியிட்டேன் என்கிறார்.
முன்புதான் சொன்னதையே இப்போது மறுக்கும் விதத்தில் பேசியிருக்கிறார். ரோட்டில் நின்று கொண்டிருந்தவரிடம் யாரோ வந்து கொடுத்து விட்டுப்போனதாக சொல்கிறாரா என்ன? எந்த பிரச்சினையானாலும் என் பெயரை தேவையே இல்லாமல் இழுத்துவிடுகிறார்.
இது நாள் வரை அவர் தான் கதை சொல்லிக் கொண்டிருந்தார். இனிதான் உண்மைக்கதை வெளிவரப்போகிறது. அப்போது எல்லாம் புரியும். ஆசிரமத்தில் இருந்த ஆர்த்தி ஐந்து ஆண்டுகளாக நித்யானந்தாவின் சிஷ்யை.
பிலானியில் படித்து, அமெரிக்காவில் வேலை கிடைத்ததும் அங்கேயே போய் திருமணமாகி செட்டிலானவர். இவருக்கும் லெனினுக்கும் இடையே நட்பு உருவானது. இவர்கள் இருவருமே பிரச்சினைக்குப் பின்னால் இருப்பதாக கேள்விப்பட்டதால் அதையும் என் புகாரில் குறிப்பிட்டிருக்கிறேன்.
எனக்கு குழந்தை இருப்பதாக சொல்வது முழு பொய். நான் யாருடைய கஸ்டடியிலும் இல்லை. என்னை யாரும் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. என்னைக் கட்டுப்படுத்தவும் முடியாது. என்னுடைய முழுபலம் என் குடும்பம். இவர்கள் யாரும் இல்லையென்றால் இன்றைக்கு நான் இருந்திருக்கவே மாட்டேன். அதேபோல் நான் முற்றிலுமாக மனமுடைந்து இருந்த இரண்டு மாதங்களும், நித்யானந்தா வேறெங்கோ இருந்தாலும் அவர் என்னுடனேயே இருந்து ஆசிர்வதித்தது போன்று உணர்ந்தேன்.
ஆன்மீகத்தில் பற்றுள்ளவர்கள், தங்களது குருவை மானசீகமாக பின் பற்றுபவர்களுக்கு நான் சொல்வது என்னவென்பது புரியும். இது ஒரு வித்தியாசமான அனுபவம். இவ்வாறு நடிகை ரஞ்சிதா கூறினார்.
இதற்கு லெனின் கருப்பன் மறுப்பு தெரிவித்து கூறியதாவது:-
நித்யானந்தா மீது சட்டப் படி வழக்கு தொடர்ந்துள்ளேன். இன்னும் ஒரு சில மாதங்களில் உண்மை தெரிய வரும். யார் பொய் சொல்கிறார்கள், உண்மை சொல்கிறார்கள் என்பது மக்களுக்கு அப்போது தெரியும். ரஞ்சிதா 10 மாதமாக எங்கே போனார்? இப்போது திடீரென வந்து புகார் கொடுக்கிறார்.
நித்யானந்தா பேச்சை கேட்டு கொண்டு அவர் செயல்படுகிறார். தன் மீதுள்ள வழக்கை திசை திருப்புவதற்காக நித்யானந்தா, ரஞ்சிதாவை தூண்டி விடுகிறார். ரஞ்சிதா அவர் பேச்சை கேட்டு பொய் பேசுகிறார். உள்நோக்கத்துடன் என் மீது வழக்கு தொடர்ந் துள்ளார். அதை சட்டப்படி சந்திப்பேன்.
தொடர்ந்து பொய்யான வதந்திகளை ரஞ்சிதா பரப்புவதால் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன். ஆர்த்தி என்னுடன் பணியாற்றியவர். தன்னைப் போலவே பிறரையும் அதே கண்ணோட்டத்தில் ரஞ்சிதா பார்க்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment