கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கொண்டம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் கனகலட்சுமி (வயது21). இவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். வழக்கமாக கொண்டம்பட்டியில் உள்ள வீட்டில் இருந்து காட்டுப்பாதையில் நடந்து வந்து பாம்பாறு அணை பிரிவு ரோட்டில் பஸ் ஏறிச்செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் காலை கல்லூரி செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அதன் பிறகு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. நேற்று காலை கனகலட்சுமி ஒரு மாந்தோப்பில் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவர் கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
அவரது பை கொண்டம்பட்டி வரும் சாலையில் கிடந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஏ.ஜி.பாபு, கூடுதல் சூப்பிரண்டு செந்தில் குமார், மற்றும் போலீசார் நேரில் வந்து விசாரித்தனர்.
இந்தக் கொலை குறித்து விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கூடுதல் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் துணை சூப்பிரண்டுகள் காசி விசுவநாதன் (ஊத்தங்கரை), வைத்தியலிங்கம்(பர்கூர்) மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சங்கர் (ஊத்தங்கரை), எல்லப்பன் ( சிங்காரப்பேட்டை),சிவகுமார்(பர்கூர்) மற்றும் போலீசார் இந்த தனிப்படையில் இடம்பெற்று உள்ளனர்.
இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். மாணவி கனகலட்சுமி பயன்படுத்திய செல்போனை வைத்து போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள்.
மாணவி கனகலட்சுமியின் செல்போனுக்கு 387 போன் கால்கள் வந்து உள்ளன. அந்த போன் நம்பர்கள் மற்றும் அந்த நம்பர்கள் யார்-யார் பெயரில் உள்ளன என்ற விவரங்களை போலீசார் சேகரித்து உள்ளனர். அதில் அதிகமாக அவரிடம் பேசியவர்கள் யார்-யார் என்று பட்டியல் எடுத்து அவர்களை அழைத்து வந்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இன்னொரு தனிப்படை போலீசார் மாணவியிடம் பேசிய மற்ற அனைவரையும் அழைத்து வந்து விசாரித்து வருகிறது. இன்னொரு தனிப்படை அவருடன் படித்து வரும் கல்லூரி மாணவ-மாணவிகளிடம் விசாரித்து வருகிறது. மாணவி கனகலட்சுமி கொலை செய்யப்படுவதற்கு முன்பு அதாவது நேற்று முன்தினம் காலை முதல் இரவு 8 மணி வரை அவருடன் பேசியவர்களை அழைத்து வந்து இன்னொரு தனிப்படை விசாரித்து வருகிறது.
இன்னொரு தனிப்படை அவரது கிராமத்தில் முகாமிட்டு உள்ளது. ஒரு தனிப்படை பிளஸ்-2 வரை அவருடன் படித்த மாணவ-மாணவிகள் மற்றும் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் ஆகியோரிடம் விசாரித்து வருகிறது.
மாணவி கல்லூரிக்கு செல்லும்போது அவருடன் சென்றவர்கள் யார்- யார், அவர் நடந்து செல்லும் பாதையில் யார்- யார் நடந்து செல்வார்கள் என்ற விவரங்களை இன்னொரு தனிப்படை விசாரித்து வருகிறது.
நேற்று மாலை முதல் சந்தேகப்படும் 25 பேரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். மாணவி கனகலட்சுமி மிகக்கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளதால் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.
மாணவியின் முகம் கல்லால் சிதைக்கப்பட்டு உள்ளது. பற்கள் உடைக்கப்பட்டு உள்ளன. அவரது உடல் முழுவதும் காயங்கள் உள்ளன. அதாவது குச்சியால் மர்ம உறுப்பு உள்பட பல்வேறு இடங்களில் குத்தி இருக்கிறார்கள். இதனால் காதல் தகராறில் இந்தக்கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் மாணவி கனகலட்சுமி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கல்லுரியில் இருந்து பஸ்சில் வந்து இறங்கி உள்ளார். வழக்கமாக அவர் பாம்பாறு அணைப்பிரிவில் இறங்குவார். ஆனால் நேற்று முன்தினம் ஊத்தங்கரையில் வந்து இறங்கி உள்ளார். இதனால் அவரை ஊத்தங்கரைக்கு வரவழைத்தது யார் என்றும் விசாரணை நடந்து வருகிறது.
இன்னும் இரண்டொரு நாளில் இந்தக் கொலையில் மர்ம முடிச்சுகள் அவிழும் என்று எதிர்பர்ர்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment