எதுவுமே சொல்லிக் கொடுக்காமல், நேரடி குருவாக இல்லாத நிலையில், ஏகலைவனிடம் துரோணர் குரு தட்சணை கேட்டது நியாயமே இல்லாதது. அதை விட ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டது மிகவும் அவமானகரமானது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மகாபாரதத்தின் முக்கிய பாத்திரங்களில் ஒன்று துரோணர். குருக்களிலேயே மிகவும் சிறந்த குருவாக கருதப்படுவர் துரோணாச்சாரியார். இவர் பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் குருவாக விளங்கியவர்.
ஆனால் துரோணச்சாரியாரை உச்சநீதிமன்றம் நேற்று கடுமையாக சாடியது. அவர் செய்த செயல் அநீதியானது, அவமானகரமானது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது. தனது சிஷ்யரான அர்ஜூனனுக்கு சாதகமாக அவர் நடந்து கொண்டதாகவும், இதற்காக தன்னை மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட ஏகலைவனிடம் அவர் அநீதியாக நடந்து கொண்டதாகவும் உச்சநீதிமன்றம் சாடியுள்ளது.
நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் கியான் சுதாமிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பில் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை, அவர் வசித்து வரும் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடித்து உதைத்து நிர்வாணமாக ஊரில் நடக்க வைத்து அவமானப்படுத்தியுள்ளனர்.
இந்த வழக்கில் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு அகமதுநகர் மாஜிஸ்திரேட் கோர்ட் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை கொடுத்தது. ஆனால் அவர்கள் நான்கு பேரும் அவுரங்காபாத் உயர்நீதிமன்றக் கிளையில் அப்பீல் செய்து விடுதலையாகி விட்டனர். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அந்த வழக்கைதான் நேற்று கட்ஜூ தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.
விசாரணைக்குப் பின்னர் நான்கு பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து பெஞ்ச் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் மகாராஷ்டிர அரசு சார்பி்ல அப்பீல் செய்யப்படாதது குறித்தும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
வழக்கு விசாரணையின்போது பழங்குடியினரை வெகுவாக பாராட்டியும், புகழ்ந்தும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், பழங்குடியினர் அல்லாதவர்களை விட பழங்குடியின மக்கள் பல விஷயங்களில் மிகவும் உயர்ந்தவர்கள். அவர்களது ஒரே சொத்து வனங்களும், இயற்கையும்தான். அந்த இயற்கையைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள் மற்றவர்கள். இது மிகப் பெரிய அநீதியான செயல்.
அவர்களுக்கு இன்று நேற்றல்ல காலம் காலமாக துரோகமும், அநீதிகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. மகாபாரதத்திலேயே இதைப் பார்க்கலாம்.
கெளரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் குருவாக இருந்தார் துரோணர். ஆனால் அவர் என்ன செய்தார்? நடுநிலையுடன் நடக்கவில்லை அவர்.
துரோணரை தனது மானசீக குருவாக வரித்து, தூரத்திலிருந்தபடியே அவரைப் பார்த்து கற்றுக் கொண்டு வில்வித்தையில் சிறந்தவனாக உயர்ந்தவன் ஏகலைவன். ஆனால் துரோணர் என்ன செய்தார், அவனது கட்டைவிரலை குரு தட்சணையாக கேட்டார்.
துரோணர், ஏகலைவனுக்கு எதுவுமே சொல்லித் தரவில்லை. பிறகு எப்படி அவர் குரு தட்சணை கேட்க முடியும்?. அடிப்படையே அங்கு தவறாக உள்ளது. அதை விட முக்கியமாக, தனது சிஷ்யனான அர்ஜூனன்தான் உலகிலேயே மிகச் சிறந்த வில்வீரனாக இருக்க வேண்டும் என்ற குறுகிய எண்ணத்தை மனதில் கொண்டு, வில் வித்தைக்குக முக்கியமான, வலது கை கட்டை விரலை தட்சணையாக தருமாறு ஏகலைவனிடம் கேட்டுள்ளார் துரோணர். இது மிகவும் அநீதியானது, அவமானகரமானது. அன்றே பழங்குடியினருக்கு அநீதி நடந்துள்ளது. இதன் மூலம் அர்ஜூனனுக்கு போட்டியாக பழங்குடியினத்தைச் சேர்ந்த ஏகலைவன் வந்து விடாமல் தடுத்துள்ளார் துரோணர். இதை விட ஒரு அநீதியை எங்காவது பார்க்க முடியுமா?
மகாபாரதத்தின் ஆதிபர்வம், முழுக்க முழுக்க அநீதியான செயல்களின் தொகுப்பாக அமைந்துள்ளது. பழங்குடியினருக்கு எந்த அளவுக்கு அநீதிகள் நடந்துள்ளன என்பதை இதைப் பார்த்தாலே அறிந்து கொள்ள முடியும் என்றனர் நீதிபதிகள்.
இட ஒதுக்கீட்டின் அவசியம் துரோணர் ஏகலைவனின் கட்டைவிரலை கேட்டபோதே ஆரம்பித்துவிட்டது.
ReplyDelete