தமிழக மீனவர்கள் பாண்டி, ஜெயக்குமார் ஆகியோர் இலங்கை கடற்படையால் கொலை செய்யப்பட்டனர். இதை கண்டித்து தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் தலைமையில் ஆழ்வார் பேட்டை டி.டி.கே.சாலையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை திடீர் என்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது இலங்கை அரசை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷ மிட்டனர்.
இலங்கை அதிபர் ராஜபக்ஷே கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக துணை போலீஸ் கமிஷனர் பெரியய்யா தலைமையில் போலீசார் விரைந்து சென்று தீயை அணைத்தனர். தூதரக அலுவலகத்துக்குள்ளும் தொண்டர்கள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் முகமது யூசுப், வன்னியரசு, இளஞ் செழியன், மடிப்பாக்கம் வெற்றிசெல்வன், செ.கு. வேரா, சைதை பாலாஜி, கோட்டைகாடு துரை, வேந்தன், துரை, இரா.செல்வம், கிட்டு உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரையும் போலீசார் வேனில் ஏற்றி சென்றனர்.
இதையடுத்து மத்திய சென்னை மாவட்ட செயலாளர் வீரமுத்து தலைமையில் 50 பேர் இலங்கை தூதரகம் நோக்கி சென்றனர். எதிர்பாராத விதத்தில் இது நடந்ததால் போலீசார் அவர்களை விரட்டிச்சென்று கைது செய்தனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து இலங்கை தூதரகம் அமைந்துள்ள சாலை மூடப்பட்டன. வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment