கான்ஸ்டபிள் கொடுத்த அடியில் சங்கர் சுருண்டுவிட்டான் . பசியால் வேற ஏற்கனவே துவண்டு பொய் இருந்தவனை கான்ஸ்டபிளின் அடியும் சேர்த்து மயக்கம் போட்டு விழுந்து விடுவோமோ என்று நினைக்கிற அளவுக்கு தளர்ந்து வைத்தது.
யாரையாச்சும் முதுகில் தட்டுறோம்ன்னா அது பாரட்டுக்காகத்தான் இருக்கும் என்று தான் இது நாள் வரைக்கும் நினைத்து கொண்டிருந்தான் சங்கர். ஆனா, இன்னைக்கு சங்கருக்கு முதுகிலே விழுந்த தட்டுகள் எல்லாமே அவனை தட்டு தடுமாறி விழ வைக்கிற அளவுக்கு இருந்தது.
சங்கர் கடன் தான் கேட்டான். கப்பம் எதுவுமா கேட்டான்...?
கடன் கேட்டதுக்கு தான் கான்ஸ்டபிள் இப்படி நைய்யப் போடாச்சு எடுத்தாரு!
'அப்பம் கேட்கிற பிள்ளைக்கு எந்த தகப்பனாவது கல்லைக் கொடுப்பானா?' ன்னு பைபிள்ளே ஒரு வசனம் வரும்.
சங்கருக்கு அன்னைக்கு கல்லை கொடுத்தாங்க. சட்டத்தின் பாதுகாவலரோ கொடுத்தார்.
உடம்பெல்லாம் வலி! சட்டை , ட்ரவுசர் எல்லாம் சேறு (அப்ப சங்கர் ஆப் ட்ரவுசர் தான் போடுவான்). அவமானத்திலே கூனிக் குறுகிப் போனான்.
அப்பவும் சங்கருக்கு கோவம் வரவில்லை. கண்ணீர் தான் வந்தது. அதையும் மத்தவங்க பார்த்திடக் கூடாதேன்னு அடக்கிக்கிட்டு சிரமப்பட்டான்.
மழையிலேயும், கண்ணீர்லேயும் நனஞ்சுகிட்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தான். மழை விடாம பெய்துகிட்டே இருந்தது நல்லதுக்கா போச்சு சங்கர் அழுவது யாருக்கும் தெரியாதுல்ல!
வீட்டுக்குள்ளே நுழைய மனமின்றி வெளியிலேயே நின்றான். ஜெகதியும், குழந்தை கீதாவும் பட்டிணி கிடக்கும் பரிதாபம், அடிப்பட்ட வேதனை எல்லாம் சேர்ந்து தொண்டைக்குள்ளேயும் கண்ணீர் சுரந்த மாதிரி ஒரு வேதனையில் துடித்தான் சங்கர்.
சங்கர் வீதியிலே நிக்குறதை பார்த்த ஜெகதி "ஏன் மழையிலே நனைஞ்சுகிட்டு நிக்றீங்க சிலை மாதிரி"ன்னு சொன்னவ சங்கரின் சட்டை, டிரவுசர்லே சகதியை பார்த்துகிட்டு , "ஐய்யா ....என்ன இந்த கோலம்"ன்னு கேட்டா.
"நா கீழே விழுந்திட்டேன் ஜெகதி"ன்னு சொல்லிட்டு 'ஓ'ன்னு அழுதான். அடி வாங்குனேன்னு சொல்லுறதுக்கு வெட்கம்! என்பது மட்டுமல்ல சொன்னால் ஜெகதியும் அழுதிடுவா என்பதும் ஒரு காரணம்! அதே சமயம் அந்த சம்பவம் கொடுத்த அவமானமும், வலியும் கதறி அழ வைத்தது சங்கரை.
ஜெகதி பதறி போனா. "முதல்ல உள்ளே வந்து தலையைத் துவட்டுங்க"ன்னு சங்கரின் கையை பிடிச்சு இழுத்துப் போனா. சங்கரின் வாய்க்குள் இப்போதும் ரத்தம் வழிஞ்சது. ஜெகதி பார்த்துவிட கூடாதேன்னு நாக்கினாலேயே வாய்க்குள்ள இருந்த ரத்தத்தையெல்லாம் ரகசியமாக துடைத்தான்.
"கீழே விழுந்ததுக்கு போய் யாரவது அழுவாங்களா....விழுந்தப்புறம் எழுந்திரிக்காம விழுந்தே கேடந்தாதான் அழணும்"-ஜெகதி. துண்டை எடுத்து தலை துவட்டினா.
குழந்தை கீதா குடிசையில் ஒரு மூலையில் தூங்கிட்டிருந்தாள்.
தூக்கம் தானா? மயக்கமா?
சங்கருக்கு ரொம்ப சங்கடமா போச்சு. குழந்தையை எடுத்து சங்கர் மடியிலே போட்டு கிட்டான்.கைகள் ரெண்டும் அடி வாங்கினதிலே விறுவிறுன்னு தங்க முடியாத வலி!
"கடைக்காரர் கிட்டே அரிசி கடன் கேட்கறேன்னு போனீங்களே...என்னாச்சு?"-ஜெகதி
கடைக்காரரை ஞாபகப் படுத்தியதும் சங்கருக்கு அழுகை பொங்கிட்டு வந்தது.
"கடனெல்லாம் கிடையாதுன்னுட்டான் ஜெகதி"
ஜெகதி பரிதாபமாக பார்த்தாள்.
"இனிமே தாக்குப்பிடிக்க முடியாதுங்க. குழந்தைங்க பசியிலே செத்துடும். எனக்கே காதை அடசுகிட்டு மயக்கமா வருது...சைதாப்பேட்டைக்கு போய் பெரியவர் (சண்முகம் மேஸ்திரி) கிட்டே ஐம்பது ரூபா கடன் கேளுங்களேன்..."-ஜெகதி
அது சரியான யோசனையா சங்கருக்கு பாடல்ல. 'மேஸ்திரி அண்ணனும் இந்த மழையிலே கஷ்டம் தான் பாடுவாரு. தவிர, இந்த வெள்ளத்திலே நீந்தி பஸ் பிடிச்சு சைதாப்பேட்டைக்கு போய் திரும்ப துட்டு?
நடந்தே போகலாம்னா திரும்ப சாயங்காலமாயிடும். அவரும் கை விரிச்சுட்டா..?'
சங்கர் பலமாக யோசித்தான். ஆனாலும் அவனுக்கு வேற வழியில்லை. அவரைத்தவிர யாரையும் தெரியாதே.
கேட்டு பார்க்க வேண்டியது தானேன்னு எந்திரிச்சான்.
தலையிலே கோணிச் சாக்கு . வீதியிலே இறங்கி நடந்தான்.
அந்த நாடார் கடையை தாண்டித்தான் மெயின் ரோட்டுக்குப் போகணும். கடையை நெருங்க நெருங்க அறுப்பட்ட புழு மாதிரி துடிச்சான். போலீஸ் அடிச்ச ஒவ்வொரு அடியையும் மனசுக்குள்ள திரும்ப வாங்கினான்.
மறுப்படி ஒருதரம் சகதியிலே உருண்டு , புரண்டு , விழுந்து...வலியிலே துடிக்க.
கடை வாசல்ல நின்னு நாடார் (அவர் பேரு தெரியாததால தான் இப்படி சொல்ல வேண்டியதா போச்சு தவறாக நினைக்க வேண்டாம்)சிகரெட் புடிசுகிட்டிருந்தார். சங்கரை பார்த்ததும் கேலியாக சிரித்தார். 'என்னடா அடி எப்படி இருக்கு?"ன்னு கேட்கிற மாதிரியான சிரிப்பு அது. சிகரெட் புகை மொத்தத்தையும் (தேவைக்கு அதிகமாகவே) அம்பு மாதிரி சங்கர் முகத்துக்கு நேரா அனுப்பினார்.
அநேகமா, 'ஆட்டோ சங்கர்' உருவான நிமிஷம் அதுதான்னு நினைக்கிறேன்....!
No comments:
Post a Comment