ஒரு வாரம் டைம். அதற்குள் நீக்கலேன்னா...? இப்படி கவுதம் மேனன் விஷயத்தில் பிரம்பை கையில் எடுத்திருக்கிறது சிவசேனா கட்சி. தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளையும் உசுப்பேற்றியிருக்கிறார் கவுதம் மேனன். தாய்-மகன் இடையே தவறான உறவிருக்கும் விதமாக படம் எடுத்த இவருக்கு நாலாபுறத்திலிருந்து கண்டனக் கணைகள் பாய்ந்து கொண்டிருக்கின்றன.
ஆவேசமாக கிளம்பிய விடுதலை சிறுத்தைகளின் கோபத்தை சில முக்கிய பிரமுகர்கள் மூலம் தடுத்துவிட்டாராம் கவுதம். ஆனால் பின்னாலேயே கிளம்பியிருக்கும் இன்னொரு பூதத்தை எப்படி சமாளிப்பாரோ தெரியவில்லை.
தமிழ் மாநில சிவசேனா கட்சியின் தலைவர் மா.திரவிய பாண்டியன் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் நடுநிசி நாய்கள் திரைப்படம் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று குறிப்பிட்டிருக்கிறார். படத்தில் வரும் மீனாட்சி என்ற பெண்ணின் பெயரை மேரி என்றோ பாத்திமா என்றோ பெயர் வைக்க வேண்டியதுதானே? ஏன் தமிழ் கடவுளான மீனாட்சியை இழிவு படுத்த வேண்டும் என்றொரு கேள்வியை எழுப்பி பிரச்சனையை இன்னொரு கோணத்தில் கொண்டு போயிருக்கிறார் அவர். இது கவுதமுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தக் கூடும். இந்த மீனாட்சி என்ற பெயரை படத்திலிருந்து ஒரு வாரத்திற்குள் நீக்காவிட்டால் தனது தொண்டர்களுடன் கவுதம் வீட்டின் முன் மறியல் நடத்தப் போவதாகவும் அறிவித்திருக்கிறார் திரவிய பாண்டியன்.
தனது அடுத்த படம் மெல்லிய காதல் கதைதான் என்று இப்போதே கூறிவருகிறார் கவுதம். அதைதான் மக்களும் எதிர்பார்க்கிறாங்கய்யா...
No comments:
Post a Comment