பெங்களூரை அடுத்து உள்ள பிடுதியில் தியான பீடம் நடத்தி வரும் நித்யானந்தா ஆசிரமத்தை சேர்ந்த அவரது சீடர்கள் 3 பேர், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து நித்யானந்தா பிடுதி ஆசிரமத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ‘’பெங்களூர் சி.ஐ.டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராமலிங்கப்பா தலைமையிலான போலீசார் திடீரென்று ஆசிரமத்துக்கு வந்தனர். அவர்கள் என் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்கில் முக்கிய சாட்சி ஒருவரை மறைத்து வைத்திருப்பதாக கூறி, சோதனை நடத்த வேண்டும் என்று கூறினார்கள். அவர்களிடம் எனது செயலாளர் அடையாள அட்டையை காட்டும்படி கேட்டார். இதுதொடர்பாக ஆசிரம சீடர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
உடனே சி.ஐ.டி. போலீசார் தங்களை பணி செய்யவிடாமல் தடுத்து விட்டதாக கூறி பிடுதி போலீசில் புகார் செய்தனர்.
அதைத்தொடர்ந்து பிடுதி போலீசார் ஆசிரமத்துக்குள் அத்துமீறி நுழைந்து 3 சீடர்களை கைது செய்தனர். அவர்களிடம் கைது வாரண்ட் எதுவும் இல்லை. சட்டத்துக்கு விரோதமாக ஆசிரம சீடர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சி.ஐ.டி மற்றும் பிடுதி போலீசார் எனக்கும், ஆசிரமத்துக்கும் தொடர்ந்து பிரச்சினை கொடுத்து வருகிறார்கள். வேண்டுமென்றே என் மீது ஏராளமான வழக்குகளை பதிவு செய்து உள்ளனர். போலீசாரின் இந்த செயலை கண்டித்து சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்பட 20 நாடுகளில் உள்ள எனது சீடர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்கள்.
பிடுதி ஆசிரமத்தில் 1,200-க்கும் மேற்பட்ட சீடர்கள் உள்ளனர். அவர்களும் உண்ணாவிரதம் தொடங்கி உள்ளனர். பொது இடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்ததும் எனது சீடர்கள் பொது இடத்தில் உண்ணாவிரதம் இருப்பார்கள்.
மேலும் போலீசார் கொடுத்து வரும் தொடர் பிரச்சனை குறித்து முதல்வர் எடியூரப்பாவை ஆசிரம சீடர்கள் சந்தித்து மனு கொடுக்க உள்ளனர். முதல்-மந்திரி இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும். அவர் தலையிட்டால் மட்டுமே எனக்கும், ஆசிரமத்துக்கும் போலீசார் கொடுத்து வரும் தொடர் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அதுவரைக்கும் ஆசிரம சீடர்கள் போராட்டம் தொடரும்’’ என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment