விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் உடல் உள்ளூர் நேரப்படி 22.02.2011 அன்று மாலை 4.30 மணியளவில் வல்வெட்டித்துறை அருகேயுள்ள ஊரணி எரியூட்டு மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள், கடந்த சில ஆண்டுகளாக நோய் வாய்ப்பட்டு இருந்தார். நீரிழிவு மற்றும் இதயக்கோளாறு போன்றவை அவருக்கு இருந்தன. மேலும், பக்கவாதத்தாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த சூழ்நிலையில், மலேசியாவில் இருந்து சென்னையில் சிகிச்சை பெறுவதற்காக கடந்த ஆண்டு வந்தார்.
ஆனால், விமான நிலையத்திலேயே அவரை இந்திய அதிகாரிகள் திருப்பி விட்டனர். அதன் பிறகு, சொந்த ஊரான யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வெட்டித்துறையில் உள்ள பிரதேச மருத்துவமனையில் பார்வதி அம்மாள் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த சூழ்நிலையில், 20.02.2011 அன்று அதிகாலை 6.10 மணி அளவில் அவர் காலமானார். பார்வதி அம்மாளுக்கு வயது 81. ஏற்கனவே, அவருடைய கணவர் வேலுப்பிள்ளை கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் இறந்து விட்டார்.
பார்வதி அம்மாள் வேலுப்பிள்ளை தம்பதிக்கு விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் தவிர, மனோகரன் என்ற மற்றொரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
பார்வதி அம்மாள் மரணமடைந்த தகவலை தமிழ் தேசிய கூட்டணியை சேர்ந்த முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில், மரணமடைந்த பார்வதி அம்மாளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினேன். அவருடைய மரணம் பற்றிய தகவலை மகன் மற்றும் மகள்களுக்கு தெரிவித்து விட்டேன். பார்வதி அம்மாளின் நெருங்கிய உறவினர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு அவருடைய இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்றன. பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு 22.02.2011 அன்று இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றார்.
அதன்படி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் உடல் உள்ளூர் நேரப்படி 22.02.2011 அன்று மாலை 4.30 மணியளவில் வல்வெட்டித்துறை அருகேயுள்ள ஊரணி எரியூட்டு மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்த இறுதி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டனர். பிரபாகரனின் நெருங்கிய உறவினரான சங்கரநாராயணன் என்பவர் இறுதிச் சடங்குகளை செய்தார்.
முன்னதாக பார்வதி அம்மாளின் உடல் வைக்கப்பட்டிருந்த வல்வெட்டித்துறை வீட்டில் இருந்து எரியூட்டும் மைதானம் வரை வழியெங்கும் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்தனர். அஞ்சலி செலுத்த வந்தவர்களை ராணுவத்தினர் தொடர்ந்து புகைப்படம் மற்றும் விடியோ எடுத்தனர். ஆங்காங்கே கட்டப்பட்டிருந்த கறுப்புக் கொடிகளையும் அவர்கள் அகற்றியபடி இருந்தனர் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
இதையும் படியுங்களேன்.....
ஆழ்ந்த இரங்கல்கள்.
ReplyDelete