எகிப்தை தொடர்ந்து லிபியா நாட்டிலும், அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்துள்ளது. 42 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்திவரும் கடாபியின் ராணுவத்தினர், புரட்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறார்கள்.
வீதியில் இறங்கி போராடும் மக்கள் மீது போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் பறந்து சென்று குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
தலைநகர் திரிபோலி உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. ராணுவத்தினரை எதிர்த்து மக்கள் கலவரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் சூறையாடப்பட்டு தீவைத்து கொளுத்தப்படுகின்றன.
அரசு டெலிவிஷன் நிலையங்களும் சூறையாடப்பட்டன. தலைநகர் திரிபோலி அருகில் உள்ள கொரிய நாட்டு கட்டுமான நிறுவனம், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில் சூறையாடப்பட்டது. இந் கலவரத்தில் அங்கு பணிபுரிந்த கொரியா மற்றும் வங்காள தேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் காயம் அடைந்தனர்.
லிபியா கலவரத்தில் இதுவரை 233 பேர் பலியாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும், 2 ஆயிரம் பேர் வரை இறந்து இருப்பார்கள் என்று பென்காஸி நகரத்தை சேர்ந்தவர் கூறினார். பென்காஸி நகரில் தான் அதிக அளவு சேதம் ஏற்பட்டு இருக்கிறது.
அங்கு போர் விமானங்கள் குண்டு வீசியதில் விமான ஓடுபாதை முற்றிலும் சேதம் அடைந்து இருப்பதால் அங்குள்ள வெளிநாட்டவர்களை விமானம் மூலம் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிபர் கடாபி, வெனிசுலா நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாக முதலில் தகவல் வெளியானது.
ஆனால், நேற்று டெலிவிஷனில் பேசிய கடாபி, தான் லிபியாவில் தான் இருப்பதாக அறிவித்தார். இந்த நிலையில், லிபியாவில் நடந்துவரும் கலவரத்தில் தமிழ்நட்டை சேர்ந்த தொழிலாளி ஒருவர் பலியான தகவல் கிடைத்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
கொரிய கட்டுமான நிறுவனம் ஒன்றில் தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா, தலைவன் கோட்டை, ஆலங்குளம் தாலுகா நாகல்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச்சேர்ந்த 30 தொழிலாளர்கள் மின்கோபுரம், காற்றாலைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். நிறுவனம் அருகில் உள்ள ஒரு கூடாரத்தில் அவர்கள் தங்கி இருந்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த கூடாரத்தை ஒரு கும்பல் சுற்றி வளைத்து தாக்கியது. உடனே தமிழக தொழிலாளர்கள் பதறியடித்தபடி அங்கிருந்து சிதறி ஓடினார்கள். அவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் தலைவன்கோட்டை கிராமத்தை சேர்ந்த முருகையா (வயது 40) என்பவர் குண்டு பாய்ந்து பலியானார்.
நாகல்குளத்தை சேர்ந்த அசோக்குமார் (24) என்ற வாலிபர் படுகாயம் அடைந்தார். தப்பி ஓடிய மற்ற 28 பேரும், அருகில் உள்ள ஒரு மசூதியில் தஞ்சம் அடைந்தனர். முருகையா பலியான தகவலை, படுகாயம் அடைந்த அசோக்குமார் டெலிபோன் மூலம் முருகையாவின் மனைவி வெள்ளைத்தாயிடம் தெரிவித்தார்.
ஆனால், கடந்த இரண்டு நாட்களாக தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டதால் அங்கிருந்து எந்த தகவலும் வரவில்லை என்று அந்த கிராம மக்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், பலியான முருகையாவின் மனைவி வெள்ளைத்தாய், மகன் கோபால கிருஷ்ணன் (14), மற்றும் லிபியாவில் உள்ள தொழிலாளர்களின் உறவினர்கள் தலைவன் கோட்டை பஞ்சாயத்து தலைவர் பூசைப்பாண்டியன் தலைமையில் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
பலியான முருகையாவின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காயம் அடைந்த அசோக்குமார் உள்ளிட்ட லிபியாவில் சிக்கித் தவிக்கும் மற்ற தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கலெக்டர் ஜெயராமனிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் தலைமை செயலாளரிடம் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பலியான முருகையாவின் மகன் மகன் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:-
நாங்கள் குடும்பத்துடன் கேரள மாநிலம் மூணாறு பள்ளநாடு என்ற இடத்தில் தங்கி இருந்து மிளகு, காபி தூள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறோம். எனது தந்தை முருகையா, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லிபியாநாட்டுக்கு வேலைக்கு சென் றார். கடந்த 17-ந்தேதி என்னுடன் டெலிபோனில் பேசினார்.
மறுநாள் பேசுவதாகவும் கூறினார். ஆனால் அவர் கூறியபடி டெலிபோனில் பேசவில்லை. அவருடன் என்னால் டெலிபோனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகு அவருடன் தங்கி இருந்த சிலர் டெலிபோன் மூலம், என் தந்தை முருகையா இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எனது அக்காள் கலையரசிக்கு (19) திருமணம் நடைபெற்றது. அதற்கு கூட அவரால் வரமுடியவில்லை. விரைவில் இங்கு வருவதாக கூறி இருந்தார்.
அதற்குள் அவர் இறந்து விட்டார். இவ்வாறு கோபாலகிருஷ்ணன் கண்ணீர் விட்டபடி கூறினார். தலைவன்கோட்டை பஞ்சாயத்து தலைவர் பூசைப்பாண்டியன் கூறியதாவது:-
எங்கள் பகுதியைச் சேர்ந்த ஏராளமானவர்கள் வேலை வாய்ப்புக்காக லிபியா நாட்டுக்கு சென்று உள்ளனர். அவர்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்டு அங்கு பரிதவித்த நிலையில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இம்மாதம் 28-ந் தேதியுடன் வேலை முடிந்து ஊருக்கு திரும்ப முடிவு செய்து இருந்தனர். அதற்காக வேலை செய்த தனியார் நிறுவனம் விமான டிக்கெட்டுகளை எடுத்து கொடுத்து இருந்தது.
அவர்களில் ஜெயகணேஷ் என்பவர் கடந்த 20-ந் தேதி ஊருக்கு திரும்புவதற்கு தயார் நிலையில் இருந்தார். அதற்குள் கலவரம் ஏற்பட்டு அவருடைய பாஸ்போர்ட், விசா ஆகியவை தீக்கிரையாகி விட்டன. அங்குள்ள ஒரு மசூதியில் தஞ்சம் அடைந்து கழிப்பறையில் உள்ள தண்ணீரை குடித்து உயிர்வாழ்வதாக 2 நாட்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. தற்போது அவர்கள் கதி என்ன? என்பது தெரியவில்லை.
முருகையா இறந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட உடல்கள் கிடப்பதாக கூறுகின்றனர். எனவே தமிழக அரசும், மத்திய அரசும் உடனடியாக இதில் தலையிட்டு அங்கு சிக்கி தவிக்கும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்களை மீட்டு அழைத்து வர வேண்டும்.
இவ்வாறு பூசைப்பாண்டியன் கூறினார்.
இதற்கிடையில் லிபியாவில் பலியான தமிழர் முருகையா, விபத்தில் இறந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்து உள்ளது. முருகையா உள்பட 3 பேர் தொப்ருக் என்ற இடத்தில் இருந்து காரில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் அவர் பலியானதாகவும், மற்ற இருவரும் பலியானதாகவும் திரிபோலியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.
இதையும் படியுங்களேன்.....
No comments:
Post a Comment