கிரிக்கெட் ஜுரம் சினிமாவையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. பொதுவாகவே தியேட்டர்களில் கூட்டமில்லை. இந்த கிரிக்கெட்டும் தியேட்டரை காற்றாட வைக்கிறது. இந்த நிலையில் இது நல்ல படம் என்ற 'மவுத் டாக்' பரவி 'பயணம்' படத்தை பார்க்க வருகிற ரசிகர்கள் கூடியிருக்கிறார்களாம். பத்திரிகைகளில் வருகிற விமர்சனங்களும் இந்த எண்ணிக்கை கூடுவதற்கு ஒரு காரணம் என்று நினைத்த பயணம் யூனிட் பிரகாஷ்ராஜ் தலைமையில் ஒன்று கூடி பிரஸ்சுக்கு நன்றி சொன்னது.
தரமான படங்களை மட்டுமே தருவது என்ற கொள்கையில் இருந்து சிறிதளவும் பின்வாங்கவில்லை பிரகாஷ்ராஜ். ஒரு இயக்குனரின் கனவை அவர் நினைத்த மாதிரியே கொண்டு வருகிற விஷயத்திலும் அவருக்கு நிகர் அவரேதான். அதனால்தான் பிரகாஷ்ராஜ் கம்பெனியை விட்டு வேறு கம்பெனிக்கு படம் செய்வதை இன்னும் நினைத்துக் கூட பார்க்கவில்லை டைரக்டர் ராதாமோகனும்.
பயணம் பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள் நம்மிடம். படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பலருக்கும் தோன்றிய ஒரு கேள்விக்கு அந்த நிகழ்ச்சியில் பதில் சொன்னார் ராதாமோகன். ஃபிளைட் கடத்தப்பட்டிருக்கே என்ற பதற்றம் துளி கூட இல்லாமல் பயணிகள் அரட்டையடித்துக் கொண்டிருக்கிறார்களே, அப்படியெல்லாம் அந்த நேரத்தில் இருந்துவிட முடியுமா? இதுதான் பத்திரிகைளயாளர்களின் கேள்வி.
இப்படி ஒரு ஸ்கிரிப்ட்டை யோசிச்ச உடனே காந்தகார் விமான கடத்தல் தொடர்பான புத்தகங்களை படிச்சேன். அந்த சம்பவம் தொடர்பான சிலரிடமும் பேசினேன். அப்போ கேட்ட தகவல் எனக்கே கூட ஆச்சர்யமா இருந்திச்சு. ஐந்து நாட்கள் தீவிரவாதிகளின் பிடிக்குள்ளே இருந்திருக்காங்க பயணிகள். எப்பவும் இருக்கமாவே இருந்துவிட முடியாதில்லையா? அவங்களுக்குள்ளே பல விளையாட்டு ஷோக்கள் நடந்திருக்கு. நல்லா மிமிக்ரி பண்ண தெரிஞ்ச ஒருத்தர் அங்க இருந்திருக்கார். அங்கிருந்த ஒரு தீவிரவாதி மாதிரியே அவர் மிமிக்ரி பண்ண, கோபம் வந்த அந்த தீவிரவாதி அவரை கன்னத்தில் அறைஞ்சுருக்கார். அப்புறம் பயணிகள் எதிர்ப்பு தெரிவிச்சதும் அவர் அந்த பயணிகிட்ட மன்னிப்பு கூட கேட்டிருக்கார். இதையெல்லாம்தான் அப்படியே 'பயணம்' படத்தில் காட்டியிருக்கோம் என்றார் ராதாமோகன்.
No comments:
Post a Comment