அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி கடந்த வாரம் திடீரென கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்து இறங்கினார். பிறகு அவர் ஒரு காரில் ஏறி சென்று விட்டார். அவர் எங்கு சென்றார் என்பது மர்மமாக இருந்தது.கடந்த ஒரு வாரமாக ராகுல்காந்தி பற்றி எந்த தகவல்களும் வெளியிடப் படவில்லை.
தனிப்பட்ட பயணத்தில் அவர் உள்ளதாக மட்டும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 5 நாட்கள் அவர் தன் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள மலை பிரதேசங்களில் அவர் அரசியல் தொல்லை, பத்திரிகையாளர்கள் பரபரப்பு எதுவும் இல்லாமல் சுற்றி வந்தார்.நெவர்லேண்ட் ரிசார்ட் என்ற ஓட்டலில் தங்கி இருந்த ராகுல் 5 நாட்களும் மாறு வேடத்தில் வெளியில் சென்று வந்தார். அவருடன் இந்த இன்ப சுற்றுலாவில் அவரது 31 நண்பர்களும் கலந்து கொண்டனர்.
ராகுல் மாறு வேடத்தில் இருந்ததால் யாராலும் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. எல்லோரும் அவரை வெளிநாட்டு சுற்றுலா பயணி என்றே நினைத்தனர். சேலவாராவில் உள்ள அருவியில் குளித்தும் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டும் ராகுல் ஜாலியாக இருந்தார்.
மலையேறுதலில் ஈடுபட்டபோது ராகுல் காந்தியின் காலில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவருக்கு அம்மதி எனும் ஊரில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களால் கூட ராகுலை அடையாளம் காண முடியவில்லையாம்.
மாறுவேடத்தில் 5 நாட்கள் ஜாலியாக இருந்த ராகுல் 20-ந்தேதி மாலை கோழிக்கோடு வழியாக டெல்லி திரும்பி சென்றார். குடகு மாவட்டத்தில் அவர் தங்கி இருந்தது. நெவர்லேண்ட் ரிசார்ட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். டெல்லி திரும்பி 3 நாட்களுக்குப் பிறகே தற்போதுதான் ராகுலின் ரகசிய மாறுவேட சுற்றுலா பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment