அமெரிக்காவில் நடக்க இருக்கும் 10ஆம் தமிழ் இணைய மாநாட்டுக்கு, தமிழ்க்கணிணி ஆராய்ச்சி கட்டுரைகளை அனுப்பி பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநாடு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழக முதல்வர் கலைஞரின் தலைமையில், டாக்டர்.மு.ஆனந்தகிருஷ்ணனின் வழிகாட்டுதலின்படி கோவையில் செம்மொழி மாநாட்டோடு இணைந்து 9ஆம் தமிழ் இணைய மாநாடு மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
அடுத்த மற்றும் பத்தாம் தமிழ் இணைய மாநாடு அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெறுகிறது. பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஜூன் 17 முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இப்பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பணி செய்துவரும் பேராசிரியர் ஹெரால்டு ஷிஃப்மேன் மற்றும் முனைவர் வாசு அரங்கநாதன் ஆகியோர் தலைமையேற்று நடத்தித்தர இசைந்துள்ளனர். இம்மாநாட்டின் மையக் கருத்தாக “கணினியினூடே செம்மொழி’’ என சூட்டப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் ஆராய்ச்சி கட்டுரைகளைப் படைக்க விரும்புவோர் கணினி வழித் தமிழ் ஆய்வுகள் குறித்து தங்களின் கட்டுரைச் சுருக்கங்களை மார்ச் மாதம் 15ஆம் தேதிக்குள் ti2011@infitt.org என்னும் முகவரியில் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் உங்களது கட்டுரைச் சுருக்கத்தை அனுப்பும்படி வேண்டுகிறோம்.
கணினி வழி தமிழ்ச் சங்க இலக்கிய ஆய்வு: தமிழ் இலக்கியத் தரவை அலசி ஆய்தல், தமிழ் இலக்கியங்களுக்கான தேடுபொறிகளை அமைத்தல், தமிழ் இலக்கியங்களின் காலங்களை அறுதியிடல், இலக்கிய ஆசிரியர்களின் நடையை அறிதல் போன்ற கணினி வழி இலக்கிய ஆய்வு குறித்தான கணினி நிரலிகள்.
தமிழ்க் கணினி நிரல்கள்: சொற்பகுப்பு நிரலிகள், சொற்திருத்திகள், இலக்கணத் திருத்திகள், மின்னகராதிகள் அமைத்தல்.
தரவுமென்பொருள், தமிழ் குறித்தான நிரலிகள் மற்றும் கணினி செயலாக்கிகள்.
தமிழைப் பயன்படுத்தும் வகையிலான கையடக்கக் கருவிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அவற்றின் தர நிர்ணயப்படுத்தல். இக்கருவிகளில் பயன்படுத்தப்படும் தமிழ்க் கணினி நிரலிகள்.
இயற்கை மொழிப் பகுப்பாய்வு, இயந்திர மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்துரு பகுப்பான்கள், தமிழ்ப் பேச்சு பகுப்பாய்வு நிரல்கள், தேடு பொறிகள், தமிழ்த் திறனாய்வு நிரல்கள், தமிழ்த் தேடுபொறிகள்.
தமிழ் இணையம்: தமிழ் வலைப்பூக்கள், விக்கிபீடியா நிரலிகள், செய்திப்பரப்பி நிரலிகள், தமிழ்க் கல்வி நுழைவுப்பக்கங்கள், தமிழ் மின்வணிக நிரலிகள்...
இணையம் மற்றும் கணினி வழி தமிழ்க் கற்றல் மற்றும் கற்பித்தல்
மேற்கூறிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் தங்களது கட்டுரையைப் படைக்க விரும்புவோர் மார்ச் 15ஆம் தேதிக்குள் கட்டுரைச் சுருக்கத்தை எங்களுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். உங்களது கட்டுரைகளை ஆங்கிலத்திலோ தமிழிலோ அல்லது தமிழும் ஆங்கிலமும் கலந்தோ நீங்கள் படைக்கலாம்.
தமிழில் உள்ள கட்டுரைகளைத் தமிழ் யுனிகோட்டில் மட்டும்தான் பெற்றுக்கொள்ள இயலும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். தேர்வு செய்யப்பட்ட கட்டுரையாளர்களை ஏப்ரல் 15ஆம் தேதி 2011க்குள் தொடர்பு கொள்வோம்.
ஒன்று அல்லது இரண்டு பக்கக் கட்டுரைச் சுருக்கத்தை மாநாட்டு அலுவலகத்துக்குti2011@infitt.org என்ற மின் முகவரிக்கு அனுப்புவதோடு கட்டுரைச் சுருக்கத்தின் ஒரு நகலை ti2011-cpc@infitt.org என்ற முகவரிக்கும் மார்ச் மாதம் 15ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: http://www.infitt.org/ti2011/ http://www.tamilinternetconference.org/ ஆகிய இணையதளங்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment