திமுக எம்பி கனிமொழியை இயக்குனராகக் கொண்ட ஜெகத் காஸ்பரின் தமிழ் மையம் அமைப்புக்கு பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களும் லட்சக்கணக்கில் நன்கொடை வழங்கியதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல எஸ் டெல் நிறுவனமும் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 25 கோடி கடன் தந்துள்ள விவரமும் தெரியவந்துள்ளது. இதை அமலாக்கப் பிரிவு, கனிமொழி தரப்புக்கு எதிரான ஆதாரமாக இந்த வழக்கில் சேர்த்துள்ளது.
2007-2008ம் ஆண்டில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, 2ஜி ஸ்பெக்டரத்தை ஒதுக்கிய அதே காலகட்டத்தில் இந்த நன்கொடைகள் தமிழ் மையத்துக்கு குவிந்துள்ளன.
இதில் 2007ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி இண்டியா புல்ஸ் நிறுவனம் ரூ. 50 லட்சம் கொடுத்துள்ளது. ஆனால், பின்னால் இந்த நிறுவனத்துக்கு தொலைத் தொடர்பு சேவையைத் தொடங்க லைசென்ஸ் தரப்படவில்லை.
2008ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி யூனிடெக் நிறுவனம் ரூ. 1 லட்சமும், டாடா டெலி சர்வீஸஸ் நிறுவனம் ரூ. 25 லட்சமும், 7ம் தேதி எம்டிஎஸ் நிறுவன தலைமை நிறுவனமான சிஸ்டமா ஷியாம் நிறுவனம் ரூ. 10 லட்சமும், ரிலையன்ஸ் கேபிடல் ரூ, 25 லட்சமும் நன்கொடை தந்துள்ளன.
தமிழ் மையத்தின் ஆடிட் செய்யப்பட்ட நிதி அறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இதனால் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் லஞ்சம் பெற இந்த அமைப்பு தவறாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால், 2ஜி லைசென்ஸ் ஒதுக்கீட்டுக்கு முன்னரோ அல்லது அதன் பிந்தைய ஆண்டுகளிலோ இந்த அமைப்புக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் எந்த நன்கொடையும் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் 2ஜி விவகாரத்தில் ரூ. 1.76 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மாபெரும் புகார் கூறப்படும் நிலையில், இந்த நிறுவனங்கள் தந்துள்ள நன்கொடையின் அளவு மிக மிகச் சிறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நன்கொடை 2ஜி லைசென்ஸ் பெறுவதற்காகத் தான் தரப்பட்டது என்று கூறிவிட முடியாது. விசாரித்த பிறகே இதில் எந்த முடிவுக்கும் வர முடியும் என்று சிபிஐ கருதுகிறது. நன்கொடையின் அளவு மிக மிகச் சிறிதாக உள்ளதால், இந்த ஆதாரத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள சிபிஐ தயாராக இல்லை என்று தெரிகிறது.
அதே நேரத்தில் எஸ் டெல் நிறுவனமும் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 50 கோடி கடன் தந்துள்ள விவரம் தெரியவந்துள்ளது. இதை அமலாக்கப் பிரிவு, கனிமொழி தரப்புக்கு எதிரான ஆதாரமாக இந்த வழக்கில் சேர்த்துள்ளது.
ஸ்வான் டெலிகாம் நிறுவனம் சார்பில் அதன் துணை நிறுவனமான டி.பி. ரியாலிட்டி ரூ. 214 கோடி கடன் தந்தது தான் கனிமொழியை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. இந் நிலையில் புதிதாக இந்த ரூ. 25 கோடி கடன் ஆதாரமும் சிக்கலை அதிகமாக்கும் என்றே தெரிகிறது.

No comments:
Post a Comment