வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆன்-லைன் பதிவு முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து பதிவு செய்வதற்கு அலைந்து திரிவதை தடுப்பதற்காகவும், நேரம், பணம் விரயம் ஆவதை தடுப்பதற்காகவும் தி.மு.க. அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தியது.
வீட்டில் இருந்தோ, கம்ப்யூட்டர் மையத்தில் இருந்தோ பட்டதாரிகள் தங்கள் பதிவை புதிதாக பதிவு செய்யலாம். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் புதுப்பித்து கொள்ளலாம். இந்த நடைமுறை தற்போது பிளஸ்-2 படித்து முடித்து வெளியேறும் பள்ளி மாணவர்களுக்கும் செயல்படுத்தப்படுகிறது.
பிளஸ்-2 கல்வித் தகுதியை பதிவு செய்வதற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று காத்திருப்பதையும், நெரிசலில் சிக்கி தவிப்பதையும் தடுப்பதற்காக தாங்கள் படித்த பள்ளியிலேயே ஆன் லைனில் பதிவு செய்து கொள்ள புதிதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் 25-ந்தேதி வழங்கப்படுகிறது. சான்றிதழ் வாங்கிய உடனே மாணவர்கள் பள்ளி மூலமாக வேலைவாய்ப்பு பதிவு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதுபற்றி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையர் சந்தோஷ் மிஸ்ரா மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பிளஸ்-2 கல்வி தகுதியை பதிவு செய்ய இந்த ஆண்டு புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒரே நேரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குவிந்து நெரிசலில் சிக்கி காத்து கிடப்பதை தவிர்ப்பதற்காக அரசு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
மாணவ - மாணவிகள் தாங்கள் படித்த பள்ளி மூலமாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். நேரில் வரத் தேவையில்லை. வரிசையில் காத்து நிற்க வேண்டியதில்லை. கல்வித் துறையோடு சேர்ந்து இந்த புதிய முயற்சியை எடுத்துள்ளோம்.
பள்ளியில் உள்ள கணினி ஆசிரியர் மூலமாக பதிவு செய்ய வேண்டும். இதற்காக அவர்களுக்கு விசேஷ பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யும்போது ரேஷன் கார்டு கட்டாயம் கொண்டு வர வேண்டும். ஏற்கனவே பதிவு செய்திருந்தால் அதற்கான வேலைவாய்ப்பு அட்டையை எடுத்து வர வேண்டும்.
25-ந்தேதி முதல் 15 நாட்கள் வரை மாணவ- மாணவிகள் பதட்டம் இல்லாமல் பதிவு செய்யலாம். முன்னால் பதிவு செய்தால் சீனியாரிட்டி கிடைக்கும் என்று நினைக்க வேண்டாம். 15 நாட்களுக்குள் அனைவரும் பதிவு செய்ய வேண்டும். அதற்குள் பதிவு செய்பவர்களுக்கு ஒரே சீனியாரிட்டிதான் வழங்கப்படும்.
இந்த நாட்களுக்குள் எந்த தேதியில் பதிவு செய்தாலும் ஒரே பதிவு மூப்புதான் கணக்கிடப்படும். அதனால் மாணவர்கள் ஒரே நேரத்தில் தள்ளுமுள்ளு செய்து பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும்.
7 லட்சம் மாணவ- மாணவிகள் இதன் மூலம் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஏதாவது ஒரு சில இடங்களில் பதிவு செய்வதில் பிரச்சினை ஏற்பட்டால் அவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment