தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்வராக பதவி ஏற்ற ஜெயலலிதாவுக்கும் எதிர் கட்சி தலைவராக பதவி ஏற்க உள்ள விஜயகாந்துக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தேர்தலில் மக்கள் பணத்துக்கு சோரம் போய் விடுவார்களா என்று பயந்த நேரத்தில் தன்னிச்சையாக ஓட்டளித்து தமிழர்கள் பெருமை பெற செய்தனர்.
நடக்க இருந்த தவறுகள், தில்லுமுல்லுகளை தடுத்த பெருமை தேர்தல் கமிஷனுக்கு கிடைத்துள்ளது. தமிழகத்தில் மின் பற்றாக் குறையை போக்குவது முதல் வேலை என ஜெயலலிதா கூறியது பாராட்டுக்குரியது. தடை இல்லாத மின்சாரம் இருந்தாலே பல பிரச்சினைகள் இருக்காது. தொழில் வளம் பெருகும். விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர்.
தேர்தலில் 63 நாயன் மார்களாக காங்கிரஸ் போட்டியிட்டது. தற்போது பஞ்ச பூதங்களாக வெற்றி பெற்றுள்ளனர். தோல்வியை ஆராய்வது இப்போது சரியாக இருக்காது. இந்த நிலை ஏற்படும் என்று தேர்தலுக்கு முன்பே தெரியும். இனி நடப்பவையாவது நல்லதாக இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் எதிர் பார்க்கிறார்கள்.
தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவரை சோனியா காந்தி விரைவில் அறிவிப்பார். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு சகவாச தோஷம் தான் காரணம். மக்கள் லஞ்ச- ஊழல்கள் ஒழிக்கப்பட வேண்டும். குடும்ப அரசியல் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக தேர்தலில் ஓட்டளித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment