2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி மனு மீதான விசாரணை இன்றும் சிபிஐ நீதிமன்றத்தில் தொடர்கிறது. இன்று சிபிஐ தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட உள்ளன. இதன் முடிவில்தான் கனிமொழி கைதாவாரா இல்லையா என்பது தெரிய வரும்.
அதேநேரம், அவர் எந்நேரமும் கைதாகக் கூடும் என்ற எதிர்ப்பார்ப்பில் திகார் மற்றும் ரேஹினி சிறைச்சாலைகளில் முன்னேற்பாடுகள் வேகமாக நடந்துவருகின்றன.
இந்த வழக்கு விசாரணை இன்றும் நடக்கவுள்ள நிலையில், 10 மணிக்கு கனிமொழி நீதிமன்றம் வந்துவிட்டார். அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், நான் கைது செய்யப்படுவேனா இல்லையா என்று தெரியவில்லை என்றார்.
அவருடன் அவரது தாயார் ராசாத்தி அம்மாளும் நீதிமன்றம் வந்தார்.
முன்னதாக, நேற்று பட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழியும், கலைஞர் டிவியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டியும் ஆஜராகினர். தாங்கள் கைது செய்யப்படுவதை தவிர்க்க இந்திய குற்றவியல் சட்டம் (சி ஆர்.பி.சி) 88சி-யின் கீழ் அவர்கள் மனுக்களை தாக்கல் செய்தனர்.
ஆனால், இந்த வழக்கில் நேற்று ஆஜராக வேண்டிய சினியுக் நிர்வாக இயக்குனர் கரீ்ம் மொரானி உடல் நிலையைக் காரணம் காட்டி வரவில்லை.
கனிமொழிக்காக ராம் ஜேத்மலானி வாதாடினார். இந்த வழக்கில் கனிமொழிக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சரத்குமார் சார்பில் வழக்கறிஞர் அல்தாப் அகமது ஆஜரானார். விசாரணை தொடர்பாக ஆஜராகியுள்ள கனிமொழி உள்ளிட்டோரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பத் தேவையில்லை. அவர்கள் நீதிமன்றத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பையும் அளிக்கத் தயாராக உள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
கனிமொழியின் சார்பாக ஆஜரான ராம் ஜெத்மலானி, "அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான எதுவாக இருந்தாலும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசாதான் பொறுப்பு. கலைஞர் தொலைக்காட்சியில் கனிமொழி எந்தவித பெரிய பொறுப்பையும் வகிக்கவில்லை. அந் நிறுவனத்தில் அவர் ஒரு சிறிய பங்குதாரர். பொதுவாக பங்குதாரகளுக்கு நிர்வாகத்தில் அன்றாட நடவடிக்கைகள் குறித்து தெரிந்திருக்க வேண்டியதில்லை. நிர்வாக இயக்குநர்தான் தினம்தோறும் முடிவுகளை எடுப்பது வழக்கம்," என்றார்.
'லஞ்சம் வாங்கியவரை விட்டுவிட்டது ஏன்?'
ஆசிப் பல்வா சார்பில் விஜய் அகர்வால் ஆஜரானார். இந்த வழக்கில் சி.பி.ஐ. பாரபட்சமாக நடந்துகொள்கிறது என்று அவர் புகார் கூறினார்.
"லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் ஆசிப் பல்வாவை கைது செய்த்துள்ள சிபிஐ, லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் கனிமொழியை விட்டுவிட்டது ஏன்?," என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் இதுதொடர்பான விசாரணை இன்று காலை மீண்டும் தொடர்கிறது. காலை 10 மணிக்கு சி.பி.ஐ சார்பாக வழக்கறிஞர் யு.யு. லலித் தனது வாதத்தை தொடங்க உள்ளார்.
இதன் முடிவில்தான் கனிமொழி கைதாவாரா இல்லையா என்பது தெரியவரும்.
தயாராகும் திகார் - ரோஹினி சிறைகள்...
இதற்கிடையே, கனிமொழி கைதாகக் கூடும் என்ற எதிர்ப்பார்ப்பில் டெல்லியில் உள்ள திகார் மற்றும் ரோஹின் சிறைச்சாலைகளில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒருவேளை இன்றைய விசாரணை முடிவில் கனிமொழி கைது செய்யப்பட்டாரல் அவரை முதலில் திகாருக்கு கொண்டு செல்வார்கள். பின்னர் ரோஹினி சிறைச்சாலையின் மகளிர் பிரிவுக்கு மாற்றுவார்களாம். இதற்காகவே இந்த இரு சிறைச்சாலைகளிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன, என திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனிமொழி கைது செய்யப்பட்டால், அவரை காவலில் எடுத்து விசாரிக்கும் திட்டமேதும் இல்லை என்றும், அவரிடம் போதுமான அளவு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டதால், நேரடியாக அவர் நீதிமன்றக் காவலில்தான் வைக்கப்படுவார் என்றும் சிபிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment