இலங்கைத் தமிழர் உரிமைகளைப் பாதுகாக்க இந்திய அரசு தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார்.
அவர், ‘’இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது. தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளும் தாக்குதலுக்குள்ளாகியிருக்கின்றன. இவையனைத்தும் ஐநா சபையின் ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.
வரும் மே 13-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவது உறுதி. ஆனால், அதுவரையும் ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் திமுக அரசு, மத்தியில் செல்வாக்கு மிகுந்த திமுக தலைவர் கருணாநிதி இந்த அறிக்கையைத் தொடர்ந்து இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்த வேண்டும்.
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.வீ. தங்கபாலு, மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் முதல்வர் கருணாநிதியை வந்துச் சந்திக்கின்றனர். அவர்களிடம் முதல்வர் கருணாநிதி இதை வலியுறுத்த வேண்டும்.
இலங்கையில் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் அடிப்படை- சராசரி உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
எனவே, இலங்கையில் தமிழ் மக்களுக்கான சம அந்தஸ்து கோரும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து ஆதரிக்கும்.
இந்தியாவில் தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்கம், அசாம் போன்ற மாநிலங்கள் இருப்பதைப் போல இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிக்கு உரிய அந்தஸ்து வழங்க வேண்டும். தமிழர்கள் வாழும் வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும். சட்டம்- ஒழுங்கு, சுகாதாரம், கல்வி போன்ற அனைத்து உரிமைகளை தமிழர்களுக்கும் வழங்க வேண்டும்.
போர் நிறைவடைந்து இரு ஆண்டுகள் முடிந்தும்கூட, லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்வுரிமைகளை இழந்து சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்னமும் இந்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. திமுக மௌனம் சாதிக்கக் கூடாது.
மீனவர்கள் தொடர்ந்து இலங்கை ராணுவத்தினரால் படுகொலை செய்யப்படுவது குறித்து அந்த நாட்டு அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சுமுகத் தீர்வு காண வேண்டும்’’என்றார்.
No comments:
Post a Comment