தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாமில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் என்பது குறித்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு (எக்சிட் போல்) முடிவுகள் இன்று மாலை 5 மணிக்கு மேல் வெளியாகவுள்ளன.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் வாக்குப் பதிவு முடிந்து விட்டது. கடந்த ஒரு மாதமாக இந்த மாநில வாக்காளர்கள், தாங்கள் வாக்களித்தவர்களுக்கு வெற்றி கிட்டுமா என்பதைக் காண ஆவலுடன் காத்துள்ளனர். ஆனால் மேற்கு வங்கத்தில் இன்றுதான் வாக்குப் பதிவு முடிவடைகிறது. இதனால் வாக்கு எண்ணிக்கை 13ம் தேதிதான் அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவுள்ளது.
வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்துப் பணிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டன. இன்று மாலைக்குள் அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் ஏற்பாடுகளை முடித்து விடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆறாவது மற்றும் இறுதி வாக்குப் பதிவு இன்றுகாலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இன்று 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 97 பேர் போட்டியிட்டுள்ளனர்.
இன்றைய வாக்குப் பதிவுக்குப் பின்னர் கருத்துக் கணிப்புகளை வெளியிடத் தடை இல்லை. எனவே இன்று மாலை 5 மணிக்குப் பிறகு எக்சிட் போல் முடிவுகளை ஊடகங்கள் வெளியடத் தயாராகி வருகின்றன.
வாக்களித்து விட்டு வந்த வாக்காளர்களிடம் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டு அவர்கள் சொன்ன பதிலின் அடிப்படையில் இந்தக் கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படவுள்ளன.
இதன் மூலம் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற ஊகத்திற்கு வர முடியும். அதேசமயம், கடந்த லோக்சபாத் தேர்தலில், தமிழகத்தில் அதிமுகவே அதிக இடங்களில் வெல்லும் என்று பெரும்பாலான எக்சிட் போல் முடிவுகள் தெரிவித்தன. ஆனால் உண்மையில் தலைகீழாகவே முடிவுகள் வந்தன என்பது நினைவிருக்கலாம்.
எனவே எக்சிட் போல் முடிவுகள் என்னதான் கூறினாலும் மே 13ம் தேதி வரை பொறுமை காப்பதே நல்லது.

No comments:
Post a Comment