2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்காக நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி ஆஜராகி வாதாடினார். வாதங்கள் தொடர்ந்ததால் விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கனிமொழி கைது செய்யப்படலாம் என பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று பட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன் ஆஜராக காலை 9.30 மணிக்கு தனது இல்லத்திலிருந்து கனிமொழி கிளம்பினார். அவருடன் மத்திய இணையமைச்சர்கள் நெப்போலியன், பழனி மாணிக்கம் மற்றும் குணசேகரன் ஆகிய 3 திமுக எம்பிக்களும் வந்தனர்.
நீதிமன்றத்தில் அவருக்கு முன்பே திமுக எம்பி டி.ஆர்.பாலு தலைமையில் 4 எம்பிக்கள் அங்கு வந்துவிட்டனர். சரியாக 10 மணிக்கு கனிமொழி நீதிமன்றத்துக்கு வந்துவிட்டார்.
அதே போல கலைஞர் டிவியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டியும் ஆஜரானார். ஆனால், இந்த வழக்கில் இன்று ஆஜராக வேண்டிய சினியுக் நிர்வாக இயக்குனர் கரீ்ம் மொரானி உடல் நிலையைக் காரணம் காட்டி வரவில்லை.
கனிமொழி நீதிமன்றம் வரும் முன்பே சிபிஐ அதிகாரிகள் குழுவும், சிபிஐ வழக்கறிஞர்களும் வந்துவிட்டனர்.
இதையடுத்து சரியாக 10.05 மணிக்கு இந்த வழக்கு விசாரணை தொடங்கியது. கனிமொழிக்காக ராம் ஜேத்மலானி வாதாடினார். இந்த வழக்கில் கனிமொழிக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நீதிமன்றத்தில் கனிமொழி ஆஜரானதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்பட்டிருந்தது.
2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கில், கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி கடன் வழங்கப்பட்ட விவகாரத்தில் கனிமொழியின் பெயரையும் குற்றப்பத்திரிக்கையில் சேர்த்துள்ளனர். அவரை கூட்டுச் சதியாளர் என்று சிபிஐ வர்ணித்துள்ளது.
இதையடுத்து இன்று சிபிஐ கோர்ட்டில் ஆஜராகுமாறு கனிமொழி உள்ளிட்டோருக்கு சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி உத்தரவி்ட்டார். அதன்படி இன்று கனிமொழி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
அவரை காவலில் எடுக்க வேண்டும் என்று சிபிஐ கோரினால், நீதிபதியின் உத்தரவைப் பொறுத்து அவர் கைதாகவும் வாய்ப்புள்ளதால் திமுக தரப்பில் பெரும் டென்சன் நிலவுகிறது.
முன்னதாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர், திமுக பிரபலங்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோர் டெல்லியில் குவிந்துவிட்டனர். தனது தாயார் ராசாத்தி அம்மாள், கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யாவுடன் கனிமொழி இரு தினங்களுக்கு முன்பே டெல்லிக்கு வந்து விட்டார்.
தமிழக உள்துறைச் செயலாளர் ஞானதேசிகன், அமைச்சர் பூங்கோதையும் டெல்லி வந்துள்ளனர்.
ஏற்கனவே 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடைய ராசா உள்ளிட்டோர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் யாருக்குமே இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை.
மேலும் இன்று ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து தொலைத் தொடர்பு நிறுவன அதிகாரிகள் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை வந்தன. விசாரணைக்குப் பின் அவை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டன.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி கைது செய்யப்பட்டால், இந்த வழக்கில் கைதாகும் முதல்வர் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த முதல் உறுப்பினர் அவர் ஆவார்.
கனிமொழி மீதான சிபிஐயின் 2 குற்றச்சாட்டுகள்:
ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ கடந்த ஏப்ரல் 25ம் தேதி தாக்கல் செய்த துணை குற்றப் பத்திரிக்கையில் கனிமொழி மீது 2 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
முதல் குற்றச்சாட்டு, ராசாவுடன் சேர்ந்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளில் கூட்டுச் சதி செய்தார்.
இரண்டாவது குற்றச்சாட்டு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்குவதற்காக கலைஞர் டிவிக்கு முறைகேடாக பணம் பெற்றார்.
அமலாக்கப் பிரிவின் குற்றச்சாட்டு:
இந்த விவகாரத்தில் அமலாக்கப் பிரிவினர் கனிமொழி மீது முறைகேடான பணப் பரிவர்த்தனை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.
முதல்வர் டெல்லி வருகை தவிர்ப்பு:
கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகும் சமயத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி டெல்லி வருவார் எனக் கூறப்பட்டது. செம்மொழி விருது வழங்கும் விழாவும் இன்று நடைபெறுவதை ஒட்டி அவர் பங்கேற்கலாம் என்றும் கூறப்பட்டது.
ஆனால், கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராவதால் டெல்லிக்கு வருவதை முதல்வர் கருணாநிதி தவிர்க்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அழகிரி யோசனை கூறியதாகத் தெரிகிறது. இதையேற்று தனது பயணத்தை முதல்வர் ரத்து செய்துவிட்டார் என்கிறார்கள்.

No comments:
Post a Comment