ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவேந்தலா சட்டசபை தொகுதிக்கு வருகிற 8-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜயலட்சுமி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வேட்பாளர் ரவி களமிறக்கப்பட்டுள்ளார்.
இவரை ஆதரித்து சந்திரபாபு நாயுடு பிரசாரம் செய்து வருகிறார். நேற்று கோமுலஜின்னா என்ற கிராமத்தில் வேட்பாளர் ரவியை ஆதரித்து பிரசாரம் செய்ய சந்திரபாபு நாயுடு சென்றார். அவர் வருவதை அறிந்ததும் பொதுமக்கள் அனைவரும் கிராம எல்லையில் திரண்டனர்.கிராமத்துக்குள் சந்திரபாபு நாயுடு நுழைய அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இங்கு உங்களுக்கு 20 ஓட்டு கள் கூட விழாது. நீங்கள் திரும்பி போங்கள் என்றனர். அவர்களிடம் சந்திரபாபு நாயுடு, "உங்களின் மிரட்டலுக்கு நான் பணியமாட்டேன். ராஜசேகர ரெட்டி உங்களுக்கு என்ன செய்தார். அவர் இந்த கிராமத்துக்கு எதுவுமே செய்யவில்லை. நான் சொல்வது புரிகிறதா'' என்றார்.
உடனே கிராம மக்கள் "நீங்கள் கிராமத்துக்குள் நுழைவதை நாங்கள் விரும்ப வில்லை. இனிமேலும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம். மரியாதையாக திரும்பி போய் விடுங்கள்'' என்றனர். அவர்களிடம் சந்திரபாபு நாயுடு, ''இந்த பூச்சாண்டிக் கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். ராஜசேகர ரெட்டி, ஜெகன்மோகன் ரெட்டியை போல எத்தனையோ பேரை நான் பார்த்து விட்டேன். எங்கிட்டேயா'' என்று பதில் அளித்தார்.
அப்போது தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் ரவி கிராம மக்களை பார்த்து தனது மீசையை முறுக்கி விட்டு தொடையை தட்டி, "நீங்களா, நாங்களா என்று பார்த்து விடுவோம்'' என்றார். இதனால் கிராம மக்கள் ஆத்திரம் அடைந்தனர். ஒரு பெண் சேற்றை வாரி சந்திர பாபு நாயுடு மீது வீசியடித்தார்.
உடனே தெலுங்கு தேசம் கட்சி தொண்டர் ஒருவர் தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி கிராம மக்களை நோக்கி வீசினார். இதனால் பொதுமக்கள் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றனர். சந்திரபாபு நாயுடு மீது முட்டை மற்றும் கற்களை வீசி தாக்கினார்கள். அவரது பாதுகாவலர்கள் சந்திரபாபுநாயுடு மீது கற்கள், முட்டை படாமல் தடுக்க போராடினார்கள்.
பெண்கள் வீசிய சேறு சந்திரபாபு நாயுடு சட்டையில் பட்டது. அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது. போலீசார் தலையிட்டு சமரசம் ஏற்படுத்த முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை பின்னர் சந்திரபாபு நாயுடு அந்த கிராமத்துக்குள் நுழையாமல் திரும்பி சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக கிராம மக்கள் 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment