பெரும் இழுபறிக்குப் பின்னர் மீண்டும் ஐபிஎல் லுக்குள் நுழைந்துள்ள செளரவ் கங்குலி இன்று தனது முதல் ஆட்டத்தை ஆடுகிறார். புனே வாரியர்ஸ் சார்பில் களம் இறங்கும் கங்குலி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிராக முத்திரை பதிப்பாரா என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.
தற்போதைய ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ஆடி வரும் புனே அணி, புள்ளிகள் பட்டியலில் கடைசியில் கிடக்கிறது. கிட்டத்தட்ட போட்டித் தொடரை விட்டே வெளியேறும் நிலையில் அது உள்ளது. இந்த நிலையில் கங்குலியின் வரவால் அந்த அணிக்கு ஏதாவது பலன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்று பலம் வாய்ந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை சந்திக்கிறது புனே. இப்போட்டியில் கங்குலி ஆடுகிறார். யாராலும் தீண்டப்படாமல் ஓரம் கட்டப்பட்டிருந்த கங்குலியை புனே அணி வாங்கி மறு வாழ்வு கொடுத்துள்ளது. தனக்கு மறு வாழ்வு கொடுத்த புனேவுக்கு கங்குலி என்ன கைமாறு செய்யப் போகிறார் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.
புனே அணி இதுவரை 9 போட்டிகளில் ஆடி 7ல் தோற்று விட்டது. அடுத்த கட்டத்திற்கு அது முன்னேறுவது என்பது மிக மிகக் கடினம்.
பஞ்சாபைப் பொறுத்தவரை 8 போட்டிகளில் ஆடி 5ல் தோல்வியுற்றுள்ளது. இருப்பினும் இன்னும் ஆறு போட்டிகள் இருப்பதால் ஓரளவுக்கு வாய்ப்புள்ளது.
இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானது என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாகியுள்ளது. அதை விட கங்குலி இன்று எப்படி ஆடுவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே நிலவுகிறது.

No comments:
Post a Comment