ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
சி.டி. ஸ்கேன் உள்பட பல் வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இரைப்பையில் அலர்ஜி இருந்ததால் அதற்கான மருந்துகள் அளிக்கப்பட்டது. காய்ச்சல், சளிக்கும் மருந்து கொடுத்தனர்.
நுரையீரலில் நீர் கோர்ப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து சிறு ஆபரேஷன் மூலம் அதை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.
நேற்று ரஜினிக்கு நெஞ்சில் லேசான ஆபரேஷன் நடந்தது. இதன் மூலம் நுரையீரல் நீர்கோர்ப்பு அகற்றப்பட்டது. ஆபரேஷனுக்கு பிறகு ரஜினி குணம் அடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ரஜினிக்கு தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பார்வையாளர்களை சந்திப்பதை தவிர்த்து முழு ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தி இருப்பதாகவும் மருத்துவ செய்தி குறிப்பில் தெரி உள்ளது.
விசேஷ மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு தற்போது சீராக இருப்பதாக கூறப்பட்டது.
ரஜினியுடன் வார்டில் அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் தங்கியுள்ளனர். குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி, ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஆகியோர் ரஜினியை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
சிகிச்சைக்காக ரஜினியை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லும் திட்டம் இல்லை என்று நடிகர் தனுஷ் கூறினார். ரஜினி உடல்நிலை பற்றி நேற்றும், இன்றும் மோசமான வதந்திகள் பரவின. இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தனுஷ் கேட்டுக் கொண்டு உள்ளார்.
ரஜினி உடல் நிலைபற்றி அறிய ஏராளமான ரசிகர்கள் ஆஸ்பத்திரி முன் திரண்டு இருந்தனர். சில ரசிகர்கள் ரஜினியை பார்த்து விட்டுத்தான் போவோம் என்று பிடிவாதமாக கூறிக் கொண்டு வாசலிலேயே காத்து கிடக்கின்றார்கள். ரஜினி வெளியே வந்து தோன்ற வேண்டும் அல்லது வீடியோ மூலம் அவரைக் காட்ட வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
No comments:
Post a Comment