முதல்வர் கருணாநிதியின், 70 வயது பொது வாழ்க்கையில், ஸ்பெக்ட்ரம் விவகாரம் போல ஒரு நெருக்கடியை அவர் சந்தித்ததில்லை. ஸ்பெக்ட்ரம் வழக்கில் இரண்டாவது குற்றப்பத்திகை தாக்கல் செய்யும் வரை தனது குடும்பத்தினரின் பெயர் அதில் சேர்க்கப்படாது என்று நம்பிக்கையில் அவர் இருந்தார்.
அதற்கு முன்தினம், தலைமைச் செயலகத்தில், நிருபர்கள் சந்திப்பின் போது, ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்படுமா என்று ஒரு பெண் நிருபர் கேட்டதற்கு, "ஒரு பெண்ணாக இருந்து இதயம் இல்லாம் இப்படி கேட்கலாமா?' என்று கருணாநிதி கூறினார். கனிமொழியின் பெயர் சேர்க்கப்படுமா என்று கேள்வி கேட்பது கூட அவர் மனதை புண்படுத்துவதாக நினைத்தார். ஆனால், ஸ்பெக்ட்ரம் வழக்கில் மனைவி தயாளுவின் பெயர், அரசு சாட்சியாகவும், கனிமொழியின் பெயர், குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டதில் நிலை குலைந்து விட்டார். காங்கிரசின் மீது அவருக்கு கடும் கோபம் ஏற்பட்டது. கூட்டணி தேவையில்லை என்று முடிவு செய்யும் அளவுக்குப் போனார்.
அவருக்கு ஏற்பட்ட கோபத்தை ஸ்டாலின் போன்றவர்கள் எதிர்பார்க்கவில்லை. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, அப்பாவை சாமாதனப்படுத்தி, "கோபத்தில் அவசர முடிவை எடுத்து விடாதீர்கள்' என்று கூறும் நிலை ஸ்டாலினுக்கு ஏற்பட்டது. இருந்தாலும், கோபத்தை காங்கிரசுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதில் கருணாநிதி உறுதியாக இருந்தார். அது ஒரு புறம் இருக்க, மகளை தைரியப்படுத்துவதில் அதிகம் செலவிட்டார். இதை, உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார். "இந்த கூட்டத்துக்கு வருவதற்ரு கனிமொழி தயக்கம் காட்டினார். அதனால், நானே நேரில் சென்று, அவரை அழைத்து வந்தேன்' என்றார். மேலும், குடும்பத்தினர், "படாது பாடுபடுகின்றனர்' என்று வெளிப்படையாக் கூறினார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கு இதற்கு முழுக் காரணமாக இருந்தாலும், தனது குடும்பத்தில், ஸ்டாலினைத் தவிர, தயாளு, அழகிரி குடும்பத்தினர் கனிமொழியின் வீட்டுக்கு வந்து ஆறுதலாக இல்லாமல் இருந்தது பெரும் மன வருத்தத்தை அவருக்கு ஏற்படுத்தியது. குடும்பத்துக்கு ஏற்பட்ட நெருக்கடிக்காக, கட்சியைப் பயன்படுத்துகிறோம் என்று பேசிவிடக் கூடாது என்றும் கருதினார். அதை, "எனக்குள்ள சங்கடத்தை பெரிதுபடுத்தி, என்றைக்கும், யாருக்கும் கட்சியை காட்டிக் கொடுக்க மாட்டேன்' என்று உயர்நிலை செயல் திட்டக் கூட்டத்தில் தெரிவித்தார். மேலும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் கருத்தைப் பெறுவதில் அவர் கவனமாக இருந்தார். உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் இதை கவனிக்க முடிந்தது. கூட்டம் கூடியதும், சிறிது நேரம் யாரும் பேசவில்லை. இந்த மவுனத்தைக் கலைக்க, "யாராவது பேசுங்க' என்று அவரே முன்வந்தார்.
"காரோட்டி' என்று அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், கூட்டத்தின் மவுனத்தைக் கலைத்துப் பேசினார். இவரைத் தொடர்ந்து நெல்லை மேயர் ஏ.எல்.சுப்ரமணியம் பேசினார். "வழக்கை எளிதில் வென்றுவிடலாம். குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகள் வலுவாக இல்லை' என்றார். இது, கருணாநிதிக்கு தைரியம் கொடுத்தது. ஆனால், அழகிரி போன்ற குடும்ப உறுப்பினர்கள் வாய் திறக்காமல் இருந்தது அவருக்கு சங்கடத்தை அதிகப்படுத்தியது. கட்சியினர் கொடுத்த தைரியத்தால், கொஞ்சம் தெம்பானாலும், காங்கிரசின் மீதான அவரது கோபம் பதிலடி கொடுக்காமல் போகாது என்பதை தெளிவாகத் தெரிந்தது. "தனக்கு வந்த சிக்கலை சட்டரீதியாக சந்தித்து வெளிவருவேன்' என்று தீர்மானமாக அதைத் தெரிவித்தார். கூட்டம் முடிந்து, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நிருபர்களிடம் சகஜமாக பேசிக்கொண்டு இருந்தபோது, "தலைவரின் மனநிலை எப்படி இருக்கிறது' என்று கேட்டபோது, கட்டை விரலை உயர்த்தி நாங்கெல்லாம் இருக்கும்போது அவர், "கிங்' என்றார்.
No comments:
Post a Comment