பாகிஸ்தானில் கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் உடல் அடங்கிய புகைப்படங்களை வெளியிட அமெரிக்கா யோசித்து வருகிறது. காரணம்,
கொல்லப்பட்டது பின்லேடன் தான் என்று பல அமெரிக்கர்கள் நம்ப மறுத்து வருகின்றனர்.
பாகிஸ்தானில் கொல்லப்பட்டது பின்லேடன்தான் என்று அமெரிக்கா மரபணு (டி.என்.ஏ.) சோதனை நடத்தி உறுதி செய்துள்ளது. ஆனாலும் இதை அமெரிக்க நாட்டினரே பெரும்பாலனோர் நம்பவில்லை.
இறந்த பின்லேடனின் உடலின் படத்தையோ வீடியோவையோ பார்க்காத வரை, கொல்லப்பட்டது பின் லேடன் தான் என்று அல்கொய்தா உறுதி செய்யாதவரை அதை நம்ப பலரும் தயாராக இல்லை.
பின்லேடன் உடலை அமெரிக்காவுக்கு கொண்டு வராமல் உடனடியாக கடலில் மூழ்கடித்து விட்டதாக அரசு சொல்வதும் பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
படத்தை வெளியிட அரசு திட்டம்:
இந் நிலையில் அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பிரன்னன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒசாமா பின்லேடனின் உடல் குறித்த புகைப்படங்களை வெளியிடுவது குறித்து யோசித்து வருகிறோம். இதன் மூலம் பின்லேடனின் மரணம் குறித்த சர்ச்சைகளைத் தவிர்க்க முடியும் எனக் கருதுகிறோம்.
பின்லேடனின் மரணம் குறித்து யாரும் சந்தேகம் தெரிவித்து விடக் கூடாது, சர்ச்சைகள் ஏற்பட்டு விடக் கூடாது என்று நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எனவே விரைவில் புகைப்படங்களை வெளியிடுவது குறித்து யோசித்து வருகிறோம்.
மேலும் பின்லேடன் இறந்து விட்டது உண்மைதான் என்பதையும் இதன் மூலம் நாங்கள் நிரூபிக்க முடியும் என்றார் பிரன்னன்.
பின்லேடன் பிணம் என்று கூறி ஒரு புகைப்படம் நேற்று பாகிஸ்தான் மீடியாவால் வெளியானது. ஆனால் அது போலி புகைப்படம் என்று பின்னர் தெரிய வந்தது நினைவிருக்கலாம். இந்த நிலையில் அமெரிக்காவே பின்லேடனின் உயிரற்ற உடலின் புகைப்படங்களை வெளியிடுவது குறித்து யோசிக்க ஆரம்பித்துள்ளது.
No comments:
Post a Comment