தி.மு.கழக பணி என்றும் தொடர தி.மு.க. தலைவர் கலைஞரின் பிறந்தநாளை கொண்டாடுவது நமது கடமை என்று பொதுச்செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.
தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முத்தமிழ் அறிஞருமான கலைஞர் அவர்களின் 88வது பிறந்த நாள் வருகிற ஜுன் 3 அன்று வருவதை நாம் அறிவோம். அந்த நாளை, தமிழும் தமிழ் இனமும் பெற்ற, பெறவேண்டிய பெருவாழ்விற்கு வழிகண்ட நாளாக நாம் பல ஆண்டுகளாகக் கொண்டாடி வருகிறோம்.
கலைஞரின் வாழ்வு வாழ்க்கை இலட்சியம் ஆர்வம், உழைப்பு, முயற்சி, அறப்போராட்டம், தியாகம், கலைத்துறைப் பணி, சட்டமன்றப் பணி, முதலமைச்சராக ஆற்றிய அருந்தொண்டு, நிறைவேற்றியுள்ள சாதனைகள் எல்லாம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் குறிக்கோளை அடைவதற்காகவே, அறிவாற்றல் மிகுந்த கருணாநிதியால் மேற்கொள்ளப் பட்டவையாகும்.
தமிழ் இனத்துக்காகவே தம்மை ஒப்படைத்துக்கொண்டு எழுத்துப் பணி, இதழ்ப் பணி, இலக்கியப் பணி, கலைப் பணி என்று துறைதோறும் தமது இலட்சியப் பதாகையைப் பட்டொளி வீசிப் பறக்கவிட்டு, செய்வதறியாது உறக்கத்தில் வீழ்ந்து கிடந்த மக்களை விழிப்படையச் செய்யும் திராவிட இயக்கத்தை வளர்ப்பதையே தமது மூச்செனக் கொண்டு, எவரேயாயினும் அவர்தம் நெஞ்சுக்கான நீதியை நாள்தோறும் உணர்த்தி வந்தவரும், அறப்போருக்கு என்றும் தயங்காத துடிப்பான இதயம் கொண்டவருமான கருணாநிதியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதையே கடந்த பல ஆண்டுகளாகத் தமது கடமையாகக் கொண்டுள்ளவர்களே நம் கழகத் தோழர்கள்!
அரசியல் பயணத்தில், தேர்தல் என்று வந்துவிட்டால் வெற்றியை மட்டுமே எதிர்பார்த்திட முடியாது. வெற்றியும், தோல்வியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களே!
திராவிட முன்னேற்றக் கழகம், பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அரசியல் கட்சியாகச் செயற்பட்டு, தமிழகத்தின் ஆளுங்கட்சியாக மட்டுமன்றி, நடுவண் அரசின் கூட்டணி ஆட்சிகளிலும் பங்குபெற்று, மத்தியில் நிலையான அரசு அமைந்திடவும், மாநிலத்தின் நலனுக்கான பல திட்டங்களை மைய அரசு ஏற்று நிறைவேற்றிடச் செய்யவும், நமது தாய்மொழியாம் தமிழ்மொழி ஓர் செம்மொழியே என்பதை ஒப்புக்கொண்டு அறிவித்திடச் செய்யவும் வாய்ப்பு பெற்றதை நாம் எக்காலத்திலும் மறக்க முடியாது!
ஆயினும் தி.மு.கழகத்தின் குறிக்கோள் இந்தச் சாதனைகள் மட்டுமே அல்ல. மாநிலத்தை அரசாளும் உரிமை பெறுவதோ, அதிகாரமுள்ள பதவிகளை அடைவதோ மட்டுமே நம் இலட்சியம் அன்று, கழகத்தின் இலட்சியம் தமிழ் இனவாழ்வை ஒளிரச் செய்ய வேண்டும் என்பதே ஆகும்.
கழகத்தின் உயிர்மூச்சு, சமுதாயச் சமத்துவச் சுதந்திர ஜனநாயக வாழ்வுக்கு வழிகோலுவதில்தான் இருக்கிறது. அந்த நோக்கத்தை மறக்காமலேதான், ஆட்சியில் அமரும் ஒவ்வொரு காலகட்டத்திலும், பல்வேறு பிரிவுகளாக வேறுபட்டுக் கிடக்கும் மக்களிடையே, சமூகநீதி நிலைநாட்டப்படவும், அதன் பயன் பெருகிடவும், ஏற்ற விதிமுறைகளைத் திட்டமிட்டு இயற்றி வந்துள்ளவர் கருணாநிதி.
அவரது பிறந்தநாளை கொண்டாடுவது அவருக்காகவும் அல்ல. அவரது புகழ் பாடுவதற்காகவும் அல்ல. தமிழ் மண்ணில் கருணாநிதி அறியாதவரும் இல்லை. அவரது சாதனைகளை உணராதவரும் இல்லை. நமது கழகப்பணி எந்நாளும் தொடரும், எங்கெங்கும் கழக லட்சிய முழக்கம் ஒலிக்கும் என்பதனை எடுத்துகாட்டவுமோ கழகத்தலைவர் கருணாநிதியின் 88 வது பிறந்தநாளை கொண்டாடுவது நமது கடமையாகிறது.
புடம் போட்ட பத்தரை மாற்று தங்கமாக, தமிழின வாழ்வுக்கும், தமிழக முன்னேற்றத்திற்கும் தன்னை ஒப்படைத்து கொண்ட தலைவரின் பிறந்தநாளினை நாடெங்கும் மாவட்ட தலைநகர், வட்ட தலைநகர், ஒன்றிய தலைநகர், பேரூர் முதலான அனைத்து மையங்களிலும் கொண்டாட வேண்டுமென நம் தோழர்களையெலாம் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
மாவட்ட கழகங்களும், மாநகர கழகங்களும் அந்தந்த நிர்வாக அமைப்பை கூட்டி தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை பல்வேறு வகையில் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து வருவதை அறிந்து மகிழ்கிறேன். அங்கு இங்கு என்று பிரிந்து காட்ட இயலாதவாறு எங்கெங்கும் யாண்டும் கருணாநிதி பிறந்தநாள் விழா எடுப்பேன், கழக லட்சியம் காத்து வளர்ப்பீர்.
இவ்வாறு அன்பழகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment