தமிழக சட்டப் பேரவைக் கட்டடமான செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் வரலாறு, அங்குள்ள மிக உயரமான கொடிமரத்தைப் போலவே கம்பீரமானது.
கிழக்கிந்திய கம்பெனியின் அலுவலராக இருந்தவர் பிரான்சிஸ் டே. இவர் விஜயநகர அரசின் நிர்வாகிகளிடமிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தை வாங்கி தலைமைச் செயலகத்தில் உள்ள அணிவகுப்பு மைதானம் இருக்கும் இடத்தில் போர்ட் ஹவுஸ் என்ற கட்டடத்ததைக் கட்டினார்.
இந்தக் கட்டடம் செயின்ட் ஜார்ஜ் நினைவு தினமான 23.4.1640 அன்று பயன்பாட்டுக்கு வந்தபோது, "செயின்ட் ஜார்ஜ் கோட்டை' என்று பெயரிடப்பட்டது.
கோட்டை வளாகத்தில் தொன்மையான புனித மேரி ஆலயம் ஒன்று உள்ளது. 1678ம் ஆண்டு இது கட்டப்பட்டது. இந்த ஆலயத்தில்தான் 1753 ஆம் ஆண்டு கவர்னல் ஜெனரல் ராபர்ட் கிளைவின் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.
1687 முதல் 1692 வரை ஆளுநராக இருந்த யேல் என்பவர் காலத்தில்தான் ஆசியாவிலேயே மிக உயரமான கொடிமரம் இங்கு அமைக்கப்பட்டது. 150 அடி உயரம் கொண்ட கொடிமரம் இது.
கோட்டைக்குள் சட்டப்பேரவை கூட்ட மண்டபம் 1910-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இப்போது நூற்றாண்டு கண்ட புராதான கட்டமாக இது இருக்கிறது.
சென்னை மாகாண சட்டப்பேரவைக்கு முதல் தேர்தல் 1920-ல் நடைபெற்றது. இதில் நீதிக் கட்சி வெற்றிபெற்று ஏ.சுப்பராயலு ரெட்டியார் முதல் பிரிமியர் என்ற அழைக்கப்பட்ட முதல்வர் பதவியை ஏற்றார்.
12.1.1921-ல் இருந்து 1937 வரை நடைபெற்ற நீதிக் கட்சி ஆட்சியில் பேரவைக் கூட்டங்கள் கோட்டையிலேயே நடைபெற்றன. இதற்கிடையில், சென்னை மாகாண ஆளுநராக இருந்த வெலிங்டன் பிரபு 6.3.1922-ல் சட்டப்பேரவைக்கு வந்துள்ளார். அப்போது தேக்கு மரத்தால் செய்யப்பட்ட நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடிய பேரவைத் தலைவர் இருக்கையைப் பரிசளித்தார். அந்த இருக்கையே இன்றும் பேரவைத் தலைவரின் இருக்கையாக இருந்து வருகிறது.
14.7.1937ஆம் ஆண்டு ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது சேப்பாக்கத்தில் உள்ள செனட் மண்டபத்துக்கு பேரவை மாற்றப்பட்டது. 21.12.1937 வரை சுமார் 5 மாதங்கள் இங்குதான் பேரவை நடைபெற்றுள்ளது.
இதன் பின் 27.1.1938 முதல் 26.10.1939 வரை சென்னை சேப்பாக்கம் அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி மண்டத்தில் பேரவை இயங்கியது.
30.10.1939-ல் இரண்டாம் உலகப் போரில் இந்தியர்களும் ஈடுபட பிரிட்டிஷ் அரசு நிர்ப்பந்தித்ததைக் கண்டித்து ராஜாஜி தலைமையிலான அமைச்சரவை ராஜிநாமா செய்தது. இதன்பின் 30.4.1946 வரை தேர்தலே நடைபெறாமல் ஆளுநர் ஆட்சியே தொடர்ந்தது. பிறகு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆந்திரகேசரி டி.பிரகாசம் 24.5.1946-ல் முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து, 27.3.1952 வரை மீண்டும் கோட்டையிலேயே பேரவை திரும்பிச் செயல்பட்டது.
1952-ம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்று, மேலவை உறுப்பினராக இருந்த ராஜாஜி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. அப்போது மேலவை உறுப்பினர்களையும் சேர்த்து பேரவை உறுப்பினர் எண்ணிக்கை 375 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கைக்கு கோட்டை மண்டப இடம் போதாது என்பதால் சென்னை அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்றம் கட்டப்பட்டு அங்கு பேரவை செயல்பட்டது. பேரவை கட்டுவதற்காக 10 லட்சம் ரூபாய் வரை அப்போது செலவிடப்பட்டுள்ளது.
(இந்தப் பேரவை கட்டடம்தான் பின்னர் பாலர் அரங்கமாகவும், கலைவாணர் அரங்கமாகவும் இருந்தது. பின்னர் திமுக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக இடிக்கப்பட்டது.)
1957-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு பேரவை மீண்டும் கோட்டைக்கே திரும்பி 30.3.1959 அங்கு நடைபெற்றது.
20.4.1959-ல் தொடங்கி 30.4.1959 வரையிலும், 4.5.1959 முதல் 9.5.1959 வரையிலும் உதகையிலுள்ள அரண்மூர் மாளிகையிலும் பேரவைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இதன்பின் 31.8.1959-ல் இருந்து 13.1.2010 வரை கோட்டையிலேயே பேரவைக் கூட்டங்கள் நடைபெற்று வந்தன.
ஓமந்தூரார், பி.எஸ். குமாரசாமிராஜா, ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் முதல்வராக இருந்துள்ளனர்.
இதற்கிடையில் 2001-ல் அதிமுக ஆட்சி நடைபெற்றபோது புதிய தலைமைச் செயலகம் கட்டு முயற்சி நடைபெற்றது. ராணி மேரி கல்லூரியை இடித்துவிட்டு கட்டத் திட்டமிடப்பட்டு, எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இதைப்போல அண்ணா பல்கலைக்கலைக்கழகத்தின் இடத்திலும் புதிய தலைமை செயலகம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் அதுவும் கைவிடப்பட்டது.
÷2006 திமுக ஆட்சி வந்துபோது அரசின் தோட்டத்தில் 1,000 கோடி ரூபாயில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. இதனை பிரதமர் மன்மோகன் சிங் 13.3.2010-ல் திறந்து வைத்தார்.
இங்கு 19.10.2010 பேரவைக் கூட்டம் தொடங்கப்பட்டு இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்த பேரவை மண்டபம் பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகமாக மாற்றப்பட்டது.
இந்நிலையில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஜெயலலிதா திங்கள்கிழமை ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறார். பேரவைத் தேர்தலுக்கு முன்பே ஜெயலலிதா தெரிவித்தவாறு மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே பேரவை செயல்பட உள்ளது.

No comments:
Post a Comment