மயிலாப்பூரில் எஸ்.வி. சேகர் வீட்டில் முகமூடி கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது. மயிலாப்பூர் மந்தைவெளி பாக்கத்தில் நடிகர் எஸ்.வி. சேகர் வசித்து வருகிறார். இவரது வீட்டு முன்பு நேற்று இரவு 10.30 மணியளவில் 3 மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோவில் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்து இறங்கியது. அவர்கள் அனைவரும் முகத்தை துணியால் மூடி இருந்தனர். தாங்கள் எடுத்து வந்த கற்களை எஸ்.வி. சேகரின் வீட்டுக்குள் வீசி சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் எஸ்.வி.சேகரின் வீட்டு கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. சத்தம் கேட்டு எஸ்.வி.சேகர் வெளியில் வந்தார். அதற்குள் முகமூடி கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மயிலாப்பூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தாக்குதல் சம்பவம் குறித்து எஸ்.வி.சேகரிடம் கேட்டறிந்தனர். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தெரிய வில்லை. அவர்களை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.
இது தொடர்பாக எஸ்.வி. சேகரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தல் முடிவு தொடர்பாக நேற்று காலையில் இருந்து மாலை வரை 3 டி.வி.க்களில் எனது கருத்தை தெரிவித்தேன். அப்போது தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்தும், வெற்றி பெற்ற அ.தி.மு.க. செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் கூறினேன். சென்னையில் தி.மு.க.வின் தோல்விக்கு அக்கட்சி கவுன் சிலர்களின் செயல்பாடும் ஒரு காரணம் என்று கருத்து தெரிவித்தேன்.
இதனை பிடிக்காதவர்கள் யாரேனும் கல்வீசி தாக்கினார்களா என்பது தெரியவில்லை. மேலும் காங்கிரசின் தோல்வி குறித்து கருத்து கூறும் போது 100 சீமான்கள் செய்யாததை ஒரு தங்கபாலு செய்து விட்டார் என்றும் கூறி இருந்தேன். எனவே தாக்குதலில் ஈடுபட்ட வர்களை போலீசார்தான் கண்டுபிடிக்க வேண்டும். 2004, 2006, 2008 ஆகிய ஆண்டுகளில் எனது வீட்டில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றன. ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் எனது வீடு தாக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இதுவரை நடைபெற்ற 3 தாக்குதல் சம்பவங்களிலும் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
காங்கிரஸ் தலைவர்கள் ஜி.கே. வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் ஆகியோர் போனில் தொடர்பு கொண்டு பேசினர். எனது வீட்டின் மீது தொடர்ச்சியாக நடைபெறும் தாக்குதல் சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்ய உள்ளேன். கேள்வி: தேர்தல் முடிவு தொடர்பாக கருத்து தெரிவித்த குஷ்பு இது தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக் குத்தான் தோல்வி என்று கூறியுள்ளாரே?
பதில்:- குஷ்பு அரசியலுக்கு புதுசு. அனுபவம் இல்லாதவர் மக்கள் தீர்ப்பை எப்போதும் கவுரவமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கே:- சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ள நிலையில், நாம் இப்போது அ.தி.மு.க.வில் இல்லையே என்ற வருத்தம் உள்ளதா?
ப:- நான் எப்போதும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும் தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் மதிப்பவன். 2 பேருமே எனக்கு நண்பர்கள். டெல்லியில் உள்ள தலைவர்கள் அரசியல் பகையை மறந்து நண்பர்களாக இருப்பது போல, நானும் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அ.தி.மு.க.வில் இருந்து நான் வெளியேறவில்லை வெளியேற்றப்பட்டேன். தற்போது அதற்காக வருத்தப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே இன்று காலை எஸ்.வி.சேகர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த 7 ஆண்டுகளில் 3 முறை எனது வீட்டில் தாக்குதல் சம்பவம் நடை பெற்றுள்ளது. நேற்று இரவு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வெள்ளை சட்டை அணிந்திருந்ததாகவும், முகத்தை துணியால் மறைத்திருந்ததாகவும் எதிர் வீட்டு காவலாளி கூறினார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் எனக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தோல்வியை தழுவினார். தேர்தலின் போது தங்கபாலுக்கு எதிராக எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்திருந்தார். எனவே தங்கபாலு ஆதரவாளர்கள் யாரேனும் தாக்குதலில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

No comments:
Post a Comment