நாளைக்கு லோக்சபாவுக்கு தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு காங்கிரஸுக்கு என்று கூறியவர்களின் எண்ணிக்கையில் 7 சதவீத சரிவு காணப்படுகிறது. அதேசமயம், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராகலாம் என்று கூறியோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஸ்டார் நீல்சன் கருத்துக் கணிப்பு இதைத் தெரிவிக்கிறது.
மிக மோசமான ஊழல் அரசு
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலால்தான் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் கெட்ட பெயர் கிடைத்துள்ளது. நாடு முழுவதும் காங்கிரஸுக்கு ஒரே மாதிரியாக செல்வாக்கு சரிந்திருப்பதாகவும் இந்த சர்வே கூறுகிறது. மேலும் சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசுகளிலேயே மிகவும் மோசமான ஊழல் நிறைந்த அரசு இதுதான் என்றும் சர்வேயில் பங்கேற்ற பெரும்பான்மையானவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
7 சதவீத செல்வாக்கு குறைவு
ஸ்டார் நியூஸ்-நீல்சன் இணைந்து நடத்திய இந்த சர்வே, 28 நகரங்களில் 9000 பேரிடம எடுக்கப்பட்டது. இதில் நாளை லோக்சபா தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு காங்கிரஸுக்கு என்று கூறியவர்கள் எண்ணிக்கை 30 சதவீதமாகும். கடந்த பொதுத் தேர்தலின்போது இருந்ததை விட இது 7 சதவீதம் குறைவாகும்.
அதேசமயம், பாஜகவின் செல்வாக்கு கூடவும் இல்லை, குறையவும் இல்லை. அதே 23 சதவீதமாகவே அது இருக்கிறது. அதாவது பாஜகவுக்கு ஆதரவாக மக்கள் இன்னும் பெரிய அளவில் திரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.
பிரதமர் பதவி-4வது இடத்தில் மோடி
பிரதமர் பதவிக்கு சிறந்தவர் யார் என்ற கேள்விக்கு மன்மோகன் சிங்குக்ககே மக்களிடையே ஆதரவு காணப்பட்டது. 21 சதவீதம் பேர் அவரது பெயரைச் சொல்லியுள்ளனர். ராகுல் காந்திக்கு 19 சதவீத ஆதரவும், சோனியாவுக்கு 14 சதவீத ஆதரவும் கிடைத்தது. நரேந்திர மோடிதான் சிறந்த பிரதமராக இருப்பார் என்ற கேள்விக்கு 12 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளன என்ற கேள்விக்கு நன்றாக உள்ளதாக 41 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 19 சதவீதம் பேர் மோசம் என்று கூறியுள்ளனர்.
விலைவாசி உயர்வு குறித்து கேட்ட கேள்விக்கு 66 சதவீதம் பேர் மோசமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஊழல் குறித்த கேள்விக்கு 33 சதவீதம் பேர் மோசமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
கிராமங்களின் நிலை மோசம்
இந்தியாவில் கிராமங்களின் நிலைமை இன்னும் மோசமாகவே இருப்பதாக 42 சதவீதம் பேரும், விவசாயிகள் நிலைமை மாறவில்லை என்று 43 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
தீவிரவாத மிரட்டல் அதிகரித்திருப்பதாக 44 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சிறப்பாக செயல்படுவதாக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் செல்வாக்கு சற்றம் குறையவில்லை. அது 47 சதவீதமாக உள்ளது. அவர் சிறப்பாக செயல்படுவதாக இவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment