அதிமுகவுடன், காங்கிரஸ் அதிரடியாக கூட்டணி வைக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழக அரசியல் அரங்கில் பல்வேறு திருப்பங்களுடன் காட்சிகள் அடுத்தடுத்து அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இடதுசாரிகள் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறி புதிய அணியை அமைக்கலாம் அல்லது தேமுதிகவுடன் கூட்டு சேரலாம்.
அரசியல் என்றால் எல்லாமே சகஜம் என்றாகி விட்டது. நேற்று வரை கடுமையாக மோதிக் கொண்டவர்கள், இன்று ஹாய் ஹாய் என்று சொல்லிக் கொள்வது அரசியலில் மட்டுமே சாத்தியம். அது மீண்டும் ஒரு முறை தமிழகத்தில் நிரூபிக்கப்படவுள்ளதாக கருதப்படுகிறது.
நேற்று வரை அதிமுக பக்கம் திரும்பிக் கூட பார்க்காத காங்கிரஸ் இன்று ஜெயலலிதா மிகப் பெரிய வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியமைக்கப் போகும் இந்த தருணத்தில் அடித்துப் பிடித்துக் கொண்டு அவரை நோக்கி வரத் தொடங்கியுள்ளது காங்கிரஸ்.
இதற்காக நேற்று வரை தனக்கு தீவிரமாக ஆதரவு கொடுத்து வந்த திமுகவை தூக்கி குப்பையில் போடவும் அது தயாராகி விட்டது.
இந்த புதிய திருப்பத்தால் தமிழகத்தில் மேலும் ஒரு புதிய அணி உருவாகக் கூடும் என்ற வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.
திமுகவை கைவிட்டு விட்டு, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தீர்மானித்தால், அந்த ஆதரவை, புதிய தோழமையை அதிமுகவும் ஏற்றுக் கொண்டால் தமிழக அரசியலில் புதிய கூட்டணிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
அப்படி ஒரு அணியை இடதுசாரிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து உருவாக்கும் அல்லது தேமுதிகவுடன் இணைந்து தனி அணியாக நிற்கலாம்.
இவர்களுடன் வைகோவின் மதிமுக, சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவையும் இடம் பெறலாம்.
மேலும், இப்போதைக்கு பெரிய வேலை எதுவும் இல்லாமல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வெட்டியாய் இருக்கப் போகும் பாமகவும் இக்கூட்டணியில் இணையலாம். காரணம், அவர்களுக்கு திமுகவிடம் இனி பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லை.அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சும்மா இருக்கவும் முடியாது. அதற்குப் பதில் எம்.எல்.ஏக்கள் பலத்துடன் கூடிய இடதுசாரிகள் அமைக்கும் கூட்டணியில் இணைந்து செயல்பட அது முயலலாம்.
மேலும் இந்தப் புதிய கூட்டணி ஈழத் தமிழர் பிரச்சினையை கையில் எடுத்து தீவிரமாக செயல்படக் கூடிய வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. காரணம், காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக கூட்டணி வைத்தால் ஈழப் பிரச்சினை மறைந்து போகக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
அதேசமயம், திமுக தரப்பில் ஈழத் தமிழர் பிரச்சினையை பெரிதுபடுத்தக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
எனவே புதிதாக உருவாகும் கூட்டணியில் தமிழ் உணர்வாளர்களின் அமைப்புகளும் இணைந்து புதிய அணியாக, அவர்கள் செயல்படக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இந்த அணி, நாளடைவில் திமுக அணியுடன் நெருக்கமான உறவுக்கு முயற்சிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.
மொத்தத்தில் அடுத்து வரப் போகும் நாட்களில், அதிமுக எடுக்கப் போகும் முடிவுகளைப் பொறுத்து அரசியல் நாடகங்கள் பல அரங்கேறும் என்று எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment