நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்த புதிய தகவல் மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ளது. அவரது உடல்நிலை திருப்திகரமாக இருக்கிறது. அவரது உடலின் அனைத்து பாகங்களும் சீராக இயங்கி வருகிறது. மருத்துவமனையில் தனது குடும்பத்துடன் அவர் பொழுதை கழித்து வருகிறார், என்று அவர் சிகிச்சை பெற்று வரும் ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை பாதிப்பு காரணமாக, கடந்த 13ம்தேதி இரவு போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையின் ஏழாவது மாடியில் வி.ஐ.பி.,க்களுக்கான தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். மூச்சுக்குழாய் நோய் தொற்று காரணமாக அவருக்கு காய்ச்சல் இருப்பதாகவும், அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தொற்று ஏற்படாமல் இருக்க அவர் பார்வையாளர் சந்திப்பை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு முதல் ரஜினிகாந்தை பார்வையாளர்கள் சந்திப்பது தவிர்க்கப்பட்டது. நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், ரஜினிகாந்திற்கு இரைப்பையில் அலர்ஜி இருப்பது கண்டறியப்பட்டது. அதற்குரிய மருந்துகள் கொடுக்கப்பட்டன. காய்ச்சல், சளி குறையவும் மருத்து கொடுக்கப்பட்டது. நுரையீரலில் நீர் கோர்ப்பு இருந்ததால் ரஜினி மூச்சுவிட சிரமப்பட்டார். இதையடுத்து, நுரையீரலில் இருந்த நீர் சிகிச்சை மூலம் வெளியேற்றப்பட்டது. இதன்பின், சுவாசிப்பது அவருக்கு எளிதாகியுள்ளது. அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து ரத்த பரிசோதனைகள் மூலம் உடல் பாக இயக்கம் குறித்து டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய செய்திக்குறிப்பில், "ரஜினிகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உடலில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக உள்ளது. மருத்துவமனையில் தனது குடும்பத்தினருடன் பொழுதை கழித்து வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் உடல் நிலை திருப்திகரமாக உள்ளதாகவும், தேறி வருவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

No comments:
Post a Comment