கவர்னர் உரை குறித்து எதிர்க்கட்சி தலைவரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் கூறியதாவது:-
கவர்னர் உரையில் பல்வேறு நல்ல அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. கடந்த ஆட்சியில் சட்டவிரோதமான முறையில் வலுக்கட்டாயமாக பயமுறுத்தி பலருடைய சொத்துக்கள் பறிக்கப்பட்டதை மீட்டு உரிய நபர்களுக்கு மீண்டும் வழங்க புதிய சட்டம் இயற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை தே.மு.தி.க. வரவேற்கிறது.
கேபிள் டி.வி.யை அரசுடமையாக்கும் அறிவிப்பும் வரவேற்கதக்கது. இதேபோல் பல அறிவிப்புகள் மக்களுக்கு பயனுள்ளதா அமைந்து இருப்பது பாராட்டுக்குரியது.
கவர்னர் உரையின் அறிவிப்புகள் நோய் தீர்க்கும் மருந்தாக அமைந்துள்ளது. இலவச அரிசி, மாணவ- மாணவிகளுக்கு லேப்-டாப் உள்பட பல்வேறு அறிவிப்புகளால் தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம் இந்த அரசு நேர்கோட்டில் சென்று கொண்டு இருக்கிறது என்பதை காண முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோபிநாத் (காங்):- கவர்னர் உரை நாங்கள் எதிர்பார்த்தது போல்தான் உள்ளது. அதில் உள்ள சில கருத்துக்களை வரவேற்கிறேன். சில அறிவிப்புகள் திருப்தியாக இல்லை. காங்கிரசின் நிலைப்பாடு குறித்து சட்டமன்றத்தில் விரிவாக பேசுவோம்.
சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூ):- ஆளுநர் உரையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதனை நாங்கள் வரவேற்கிறோம். தொழில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்த இன்னும் அதிகம் எதிர்பார்த்தோம். ஜவுளி தொழில், சாயப்பட்டறை பிரச்சினை குறித்து கவர்னர் உரையில் அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்த்தோம்.
பொது விநியோக திட்டத்தில் 500 கார்டுக்கு ஒரு ரேஷன் கடை வர வேண்டும் என்றும் எதிர்பார்த்தோம். சமச்சீர் கல்வியின் குறைபாடுகளை நீக்கி இப்போது முழுமையாக அமல்படுத்த வேண்டும். புதிய தலைமைச் செயலக முறைகேடு குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டாலும் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். கட்டிடத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.
ஆறுமுகம் (இந்திய கம்யூ.):- நகராட்சி, பேரூராட்சி முன்னேற்றத்துக்கு சிறப்பு திட்டங்கள் போன்றவற்றை வரவேற்கிறோம். சமச்சீர் கல்வியின் குறைபாடுகளை நீக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். ராஜபக்சேவை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். புதிதாக வீடு கட்டும் திட்டத்துக்கு 3 சென்ட் இடம் ஒதுக்கி தொகையையும் ரூ.3 லட்சமாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி) செ.கு.தமிழரசன் (குடியரசு கட்சி), கதிரவன் (பார்வர்டு பிளாக்) ஆகியோரும் கவர்னர் உரைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment