நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று நிருபரிடம் கூறியதாவது:-
நடிகை விஜயலட்சுமி கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு என்னை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தான் மிகவும் வறுமையில் வாடுவதாகவும், குடும்பச் செலவுக்குக் கூட பணம் இல்லை என்று கூறி வருத்தப்பட்டார். மேலும் தனது அக்காவின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடப்பதாகவும், அதற்கான செலவை சமாளிக்க முடியவில்லை என்று அழுதார்.
நான் மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு சில உதவிகள் செய்து கொடுத்தேன். எனது கட்சித் தோழர்களும் அவருக்கு உதவி உள்ளனர். இது தான் நான் செய்த மிகப் பெரிய தவறு. என்னிடம் உதவி கேட்டு யார் வந்தாலும் அவர்களுக்கு எப்படியாவது உதவி செய்வது எனது சுபாவம். அந்த அடிப்படையில் தான் நடிகை விஜயலட்சுமிக்கு உதவி செய்தேன். இதன் பிறகு அவரிடம் இருந்து எனது செல்போனில் இருந்து எனக்கு எஸ்.எம்.எஸ்.கள் வரத் தொடங்கின.
என் அம்மாவுக்கு உடல்நிலை சரி இல்லை, பண உதவி தேவை என்று தகவல் வரும். மேலும் ஆவிகளை ஏவி விட்டு நீங்கள் என்னை கொல்லப்பார்க்கிறீர்கள், என் சாவுக்கு நீங்கள் தான் காரணம் என்று எழுதி வைத்து விடுவேன் என்று ஒரு தடவை மிரட்டல் எஸ்.எம்.எஸ். வந்தது. உடனே நான் என் நண்பரான டைரக்டர் சேரனை தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிவித்தேன்.
விஜயலட்சுமி மீது போலீசில் புகார் கொடுக்கலாமா என்று அவரிடம் ஆலோசனை கேட்டேன். சேரன் வேண்டாம் என்றும், விஜயலட்சுமியை கண்டிப்பதாகவும் கூறினார். அதன் பிறகு நான் தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாகி விட்டேன். தி.மு.க., காங்கிரசை எதிர்த்து கூட்டங்களில் பேசினேன். தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. என்னால் பாதிக்கப்பட்டவர்கள் தான் நடிகை விஜயலட்சுமியை தூண்டி விட்டுள்ளனர். நான் தலைமறைவாகி விட்டதாக அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள். நான் எங்கும் தப்பிச் செல்ல வில்லை. அப்படி ஒரு கோழைத் தனமான முடிவு எடுக்க எனக்குத் தெரியாது.
என்னைப் பொறுத்தவரை வழக்குகளை கண்டு நான் பயப்படுபவன் அல்ல. நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் என் மீது போடப்பட்டுள்ள கற்பழிப்பு வழக்கை சட்ட ரீதியாக சந்திப்பேன். எமது அரசியல் எதிரிகளால், திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பொய்யான புகாரில் எந்த உண்மையும் இல்லை என்பதை சட்டத்தின் முன்பு நிரூபிப்போம். இது போன்ற கீழ்த்தரமான சதிகள் மூலம் தமிழர் நலனுக்கான எமது போராட்டத்தை எள்ளவும் தளரவைக்க முடியாது என்பதையும் சதிகாரர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு சீமான் கூறினார்.
இன்று அவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.
No comments:
Post a Comment