சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தே.மு.தி.க. உறுப்பினர் சந்திரகுமார் பேசும்போது அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.
பால் விலை, பஸ் கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். அப்போது சபாநாயகர் ஜெயக்குமார், நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் விரிவாக பதில் அளித்துள்ளார். நீங்கள் மீண்டும் அதே பிரச்சினைகளை பேசுகிறீர்களே என்றார்.
அமைச்சர் வி.மூர்த்தி:- எதிர்க்கட்சி என்றால் குறை சொல்வதையே வழக்கமாக வைத்துள்ளனர். இன்று தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு அம்மா கொண்டு செல்கிறார். நம்பி வந்த கூட்டணி கட்சியினருக்கு வெற்றி கிடைக்கும் வகையில் அவர்களது தொகுதியிலும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார் புரட்சித் தலைவி. அவருக்கு மக்கள் மத்தியில் என்ன செல்வாக்கு உள்ளது என்பதையும் மக்கள் வெளிப்படுத்தி விட்டார்கள்.
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- சட்டசபைக்குள் வரமுடியாது என்று நினைத்தவர்கள் எல்லாம் அம்மாவின் தயவால் ஜெயித்து வந்து இருக்கிறீர்கள். இதை சொன்னால் தே.மு.தி.க.வினர் கோபப்படுகிறார்கள். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் எங்களுடன் நீங்கள் (தே.மு.தி.க.) கூட்டணி இருந்தீர்களா? இல்லையே. தமிழக அரசியல் வரலாற்றில் தன்னந்தனியாக தேர்தலில் தனித்து நின்று மகத்தான வெற்றி கண்டவர் புரட்சித்தலைவி.
எனவே நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் புரட்சித் தலைவியை நம்பித்தான் வாக்களித்தார்கள் தவிர உங்களை (தே.மு.தி.க.வை) நம்பி அல்ல. இதை தே.மு. தி.க. நண்பர்கள் உணர வேண்டும்.
சந்திரகுமார்:- பஸ் கட்டண உயர்வு, பால் விலை ஆகியவற்றை உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு உயர்த்தி இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது தெரிந்திருக்கும்.
அமைச்சர் செங்கோட்டையன்:- சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வருகிறது. அதில் புரட்சித்தலைவி செல்வாக்கை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அமைச்சர் வி.மூர்த்தி:- கடந்தகால தி.மு.க. ஆட்சியின் தவறான கொள்கை முடிவு காரணமாக ஆவின் நிறுவனம் நாளுக்கு நாள் நலிந்து அதை மூடும் சூழ்நிலைக்கு தள்ளிவிட்டார்கள். இதை புத்துணர்வு கொடுத்து மீண்டும் செயல்பட வைத்தவர் புரட்சித்தலைவி. அதனால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது. எனவே ஆவின் நிறுவனம் அழிய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
சந்திரகுமார்:- ஒரு நாளைக்கு 158 லட்சம் லிட்டர் உற்பத்தியாவதில் 20 லட்சம் லிட்டர் பால்தான் ஆவின் கையாள்கிறது. 138 லட்சம் லிட்டர் பால் தனியார் வசம் உள்ளது. தனியார் பயன் அடைய பால் விலை உயர்த்தப்பட்டதா? என்று நான் கேட்கிறேன்.
அமைச்சர் செங்கோட்டையன்:- பால் நிலவரம் பற்றி முழு விவரம் தெரிந்தால் பேசுங்கள். கடந்த ஆட்சியில் என்னென்ன நிலை எடுக்கப்பட்டது என்பது மாடு வைத்துக் கொண்டிருந்த எங்களைப் போன்றவர்களுக்குத்தான் விவரம் தெரியும்.
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- தனியார் அதிகம் பயன்பெற பால் விலை உயர்த்தப்பட்டதா? என்ற அர்த்தத்தில் தே.மு.தி.க. உறுப்பினர் பேசினார். இது கடந்த ஆட்சியில் ஏற்பட்ட குறையாகும். இப்போது வெண்மை புரட்சிக்கு வித்திட்டு இலவச கறவை மாடுகளை வழங்கி வருபவர் புரட்சித்தலைவி.
சந்திரகுமார்:- நானும் மாடு வைத்துள்ளேன். பால் வியாபாரம் செய்துதான் இங்கு வந்துள்ளேன். மிட்டா மிராசுதார் கிடையாது. இப்போது மின்சார கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்பு நடக்கிறது. இது சம்பிரதாயத்துக்காகத்தான் நடக்கிறது. சட்டசபை முடிந்ததும் மின் கட்டணத்தை ஏற்றி விடுவார்கள்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- தே.மு.தி.க. உறுப்பினர் அடிப்படை விவரமே தெரியாமல் பேசுகிறார். மின் கட்டணத்தை மாநில அரசு உயர்த்தவில்லை. தமிழ்நாடு மின் வாரிய ஒழுங்கு முறை ஆணையம்தான் கவனிக்கிறது. மின்சார வாரியம் தங்களது அறிக்கையை அதில் தாக்கல் செய்கிறது. இதுகுறித்து மக்களின் கருத்தை அறிய பல இடங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறார்கள். இது விதிகளில் உள்ளது. ஏதோ தான்தோன்றித்தனமாக கருத்து கணிப்பு நடத்தவில்லை. இந்த விவரம் கூட தெரியாமல் உறுப்பினர் பேசுகிறார். இது உறுப்பினரின் அறியாமையைத்தான் காட்டுகிறது.
பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு பற்றியும் குறிப்பிட்டார். அண்மையில் உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்றதுதான் எங்கள் கட்சி. இங்கே உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு பஸ் கட்டணம், பால் விலையை உயர்த்தி இருந்தால் என்ன நடந்து இருக்கும் என்று சவால் விடும் வகையில் பேசினார். அவருக்கு நான் சொல்லிக் கொள்கிறேன்.
விலை உயர்வு குறித்து அமைச்சர் விரிவாக கூறியிருக்கிறார். நானும் பால், பஸ் கட்டண உயர்வு குறித்து வருத்தத்துடன் விளக்கி சொன்னேன். தொலைக்காட்சியிலும் நேரில் தோன்றி மக்களுக்கு விளக்கி கூறினேன். இங்கு சவால் விட்டவர்களுக்கு மீண்டும் சொல்கிறேன், சங்கரன்கோவில் தொகுதியில் நாங்கள் தனித்து நிற்கிறோம். உங்கள் கட்சியும் (தே.மு.தி.க.) திராணி இருந்தால் தனித்து நில்லுங்கள் பார்ப்போம். நாங்கள் சங்கரன்கோவிலில் மகத்தான வெற்றி பெறுவோம். உங்களால் முடியுமா?
எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்:- அதாவது கடந்த 2006-க்கு பிறகு நடந்த இடைத்தேர்தல்களில் எத்தனை இடங்களில் ஜெயித்தீர்கள், ஒன்றில் கூட ஜெயிக்கவில்லையே. இன்று நீங்கள் ஆளுங்கட்சியாக இருக்கிறீர்கள். ஆளுங்கட்சியினர் எப்படி ஜெயிப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா:- தேர்தல் அறிவிப்புக்கு முன்பே எதிர்க்கட்சி தலைவர் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.
விஜயகாந்த்:- சங்கரன்கோவில் பற்றி சொல்கிறீர்கள். பெண்ணாகரம் இடைத்தேர்தலில் ஏன் தோற்றீர்கள். அப்போது தி.மு.க. எப்படி வெற்றி பெற்றதோ, அதைத்தான் நீங்கள் செய்யப் போகிறீர்கள்.
ஓ.பன்னீர்செல்வம்:- தி.மு.க. எப்படி வெற்றி பெற்றதோ அதைத்தான் நீங்களும் செய்யப்போகிறீர்கள் என்று விஜயகாந்த் கூறுகிறார். தி.மு.க.வில் இதற்கு முன் உள்ளாட்சி தேர்தல் எப்படி நடந்தது என்பது நாடே அறியும். சென்னையில் 155 வார்டுக்கு நடந்த தேர்தலில் 99 இடங்களில் மறுதேர்தல் நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அப்போது நடந்தது தேர்தலை அல்ல என்றும் கோர்ட்டு கூறியது. ஆனால் புரட்சித்தலைவி ஆட்சியில் நியாயமாக உள்ளாட்சி தேர்தலை நடத்தி இன்று வரலாறு காணாத வெற்றி பெற்று இருக்கிறோம்.
விஜயகாந்த்:- உள்ளாட்சி தேர்தல் எப்படி நடந்தது என்பது எங்களுக்கு தெரியும். கடந்த 2006 தேர்தலின்போது மின்னணு எந்திரத்தை குறை சொன்னீர்கள். இப்போது எப்படி ஜெயித்தீர்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். இதுதான் உண்மை.
(அப்போது அமைச்சர்கள் எழுந்து பதில் சொல்ல முற்பட்டனர். இதற்கு தே.மு. தி.க.வினர் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் எழுந்து நின்று அவர்களைப் பார்த்து குரல் எழுப்பினார்கள். இரு தரப்பினரும் காரசாரமாக பேசிக்கொண்டனர். யார் என்ன பேசுகிறார்கள் என்று கேட்க முடியாத அளவுக்கு கூச்சல்-குழப்பம் நிலவியது. விஜயகாந்த் ஆவேசத்துடன் நாக்கை கடித்தவாறு கையை நீட்டி அ.தி.மு.க. உறுப்பினர்களைப் பார்த்து ஆவேசத்துடன் ஏதோ கூறினார். பதிலுக்கு அ.தி.மு.க.வினரும் ஒழுங்காக பேசு, உட்கார் என்றனர். சபையில் இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். அப்போது சபையில் இருந்த மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினர் இந்த மோதல்களை பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தனர்)
சபாநாயகர் ஜெயக்குமார்:- சபையில் எதிர்க்கட்சி தலைவர் உள்பட பலரும் அநாகரீகமாக கையை உயர்த்தி பேசுகிறீர்கள். இது நாகரீகம் அல்ல. எனவே தே.மு.தி.க. உறுப்பினர்களை வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு உத்தரவிடுகிறேன்.
(உடனே விஜயகாந்த் உள்பட தே.மு.தி.க.வினர் அனைவரையும் சபை காவலர்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றினார்கள்) பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தே.மு.தி.க. வினரின் செயலை கண்டித்து பேசினார்.
சட்டசபையில் தே.மு.தி.க.வினர் வெளியேற்றப்பட்ட பின் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசியதாவது:-
இந்த சட்டமன்றத்தில் அநாகரீகத்துடன் எதிர்க்கட்சி தலைவர் நடந்து கொண்டார். சினிமாவில் வசனம் பேசுவது போல் கையை நீட்டி பேசுகிறார். கவுரவமாக நடந்து கொள்ளவில்லை. எனவே அநாகரீகமாக நடந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சபாநாயகர்:- இன்று எதிர்க்கட்சி தலைவரும், அவரது கட்சி உறுப்பினர்களும் அவையில் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட காரணத்தால் சட்டசபை விதி 226-ன் கீழ் இந்த பிரச்சினை பற்றி உரிமை மீறல் குழு விசாரணைக்கு அனுப்புகிறேன். அந்த குழு நடந்த விதம் குறித்து விசாரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment