உத்தரபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா வதோரா, பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் சோனியாவின் சொந்த தொகுதியான ரேபரேலியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, `ராகுல் காந்தி, பிரதமர் ஆவதற்குரிய நேரம் வந்து விட்டதா?' என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பிரியங்கா கூறியதாவது:-
ராகுல் காந்தியின் நோக்கம், பிரதமர் பதவியை அடைவது அல்ல. தற்போது, நமக்கு மிக அருமையான பிரதமா வாய்த்திருக்கிறார். அவர் நேர்மையும், நல்ல செயல்திறனும் கொண்டவர். எனவே, இந்த கேள்வி எழவேண்டிய அவசியமே இல்லை. அதுபோல், ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் பதவியை அடையவும் விரும்பவில்லை.
நாங்களும் அவருக்கு அப்பதவி கிடைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. பத்திரிகைகள்தான் அப்படி நினைக்கின்றன. ஒருவேளை, ராகுல் காந்தி செய்யும் பணிக்கு ஏதாவது பதவி தேவைப்பட்டால், அப்போது அதை அவர் ஏற்றுக்கொள்வார். ராகுல் காந்திக்கு தனது பணி மீதுதான் அக்கறை. பதவி மீது அக்கறை இல்லை.
அவர் கடந்த 2007-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போதே என்னிடம் சொன்னார். உத்தரபிரதேசத்தில், காங்கிரஸ் கட்சி அமைப்புகள் பலவீனமாக உள்ளன என்றும், அதை பலப்படுத்தி, மாநிலத்தின் நலனுக்காக பாடுபடப் போகிறேன் என்றும் கூறினார். அவர் இளைஞர் காங்கிரசில் பெரிய மாறுதலை ஏற்படுத்தி உள்ளார்.
எந்த கட்சியிலும் இதுபோல நேர்மையான, ஜனநாயக முறையிலான உள்கட்சி தேர்தல்களை நடத்தவில்லை. எந்த கட்சியிலும் இத்தகைய ஜனநாயகம் இல்லை. ராகுல்காந்தி, தனது கவுரவத்துக்காக பணியாற்றவில்லை. மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மாற்றத்துக்குமே பாடுபட்டு வருகிறார். வளர்ச்சியே எங்கள் செயல் திட்டம். இது, சாதி, மத அரசியலுக்கு அப்பாற்பட்டது.
தேர்தல் முடிவுகளை பற்றி அவர் கவலைப்படவில்லை. கோழை மட்டுமே முன்னால் நின்று போராட தயங்குவான். உ.பி. தேர்தலில் காங்கிரசின் வெற்றி வாய்ப்பு பற்றி கூற நான் ஜோதிடர் அல்ல. இருப்பினும், கடந்த தேர்தலை விட அதிக இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு பிரியங்கா கூறினார்.
No comments:
Post a Comment